யோசுவா 9:7-15

யோசுவா 9:7-15 TAOVBSI

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் அந்த ஏவியரை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும்; நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கை பண்ணலாம் என்றார்கள். அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும், அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம். ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக் குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில்: நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள். உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது. நாங்கள் இந்தத் திராட்சரசத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழசாய்ப்போயிற்று என்றார்கள். அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள். யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள்.