யோசுவா 7:1-5

யோசுவா 7:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேராகுடைய குமாரனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய், ஆயியை வேவுபார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள். அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள். ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளிதுவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.

யோசுவா 7:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆயினும் யெகோவாவுக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்ட பொருட்களின் விஷயத்தில் இஸ்ரயேலர் உண்மையற்றவர்களாய் இருந்தார்கள். கர்மீயின் மகனாகிய ஆகான் அவைகளில் சிலவற்றை எடுத்ததன் மூலம் யெகோவாவின் கட்டளை மீறப்பட்டது. கர்மீ, யூதா கோத்திரத்தைச் சேர்ந்த சேராகின் மகனாகிய சிம்ரியின் மகன். அதனால் இஸ்ரயேலருக்கு எதிராய் யெகோவாவின் கோபம் மூண்டது. அப்பொழுது யோசுவா சில மனிதரை அப்பிரதேசத்தை உளவுபாருங்கள் என்று எரிகோவிலிருந்து ஆயிபட்டணத்திற்கு அனுப்பினான். ஆயி, பட்டணம் பெத்தேலுக்குக் கிழக்கே பெத் ஆவெனுக்கு அருகேயுள்ளது. அப்படியே அவர்கள் போய் ஆயிபட்டணத்தை உளவுபார்த்தார்கள். அவர்கள் யோசுவாவிடம் திரும்பிவந்து, “ஆயிபட்டணத்தில் ஒருசில மனிதர் மட்டுமே இருக்கிறார்கள். அதனால் எல்லா மக்களும் அதற்கெதிராகப் போகவேண்டிய அவசியமில்லை. எல்லா மக்களையும் கஷ்டப்படுத்தாமல் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் மனிதரை அதைக் கைப்பற்றுவதற்காக அனுப்பும்” என்றார்கள். அப்படியே ஏறக்குறைய மூவாயிரம்பேர் போனார்கள்; ஆனால் ஆயிபட்டணத்தின் மனிதர்களால் இவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆயிபட்டணத்தார், சுமார் முப்பத்தாறுபேரைக் கொன்றுபோட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலரை ஆயி பட்டண வாசலிலிருந்து கல் குவாரிகள்வரை துரத்தி, மலைச்சரிவுகளில் அவர்களைத் தாக்கினார்கள். இதனால் இஸ்ரயேலரின் இருதயங்கள் சோர்வுற்று தண்ணீரைப்போலாயிற்று.

யோசுவா 7:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் மக்கள் சபிக்கப்பட்டவைகளினாலே துரோகம் செய்தார்கள்; எப்படியென்றால், யூதாகோத்திரத்தின் சேராகுடைய மகனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சபிக்கப்பட்டவைகளிலே சிலவற்றை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின்மீது யெகோவாவுடைய கோபம் மூண்டது. யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கில் உள்ள பெத்தாவேனுக்கு அருகில் இருக்கிற ஆயீ பட்டணத்திற்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனிதர்கள் போய், ஆயீயை வேவுபார்த்து, யோசுவாவிடம் திரும்பிவந்து, அவனை நோக்கி: மக்கள் எல்லோரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயீயை முறியடிக்கலாம்; எல்லா மக்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள். அப்படியே மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் அந்த இடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயீயின் மனிதர்களிடம் தோல்வியடைந்து ஓடிப்போனார்கள். ஆயீயின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளியிலிருந்து செபாரீம்வரைக்கும் அவர்களைத் துரத்தி, மலையடிவாரத்தில் அவர்களை வெட்டினார்கள்; மக்களின் இருதயம் கரைந்து தண்ணீராகப்போனது.

யோசுவா 7:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுக்கு கீழ்ப்படியாமலிருந்தனர். சிம்ரி என்பவனின் பேரனும், கர்மீ என்பவனின் மகனுமாகிய யூதா கோத்திரத்தைச் சார்ந்த ஆகான் என்ற பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் அழிக்கப்பட வேண்டிய சில பொருட்களை எடுத்து வைத்திருந்தான். எனவே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தர் மிகுந்த கோபமடைந்தார். அவர்கள் எரிகோவை தோற்கடித்த பிறகு, யோசுவா சில மனிதரை ஆயீக்கு அனுப்பினான். ஆயீ, பெத்தாவேனுக்கு அருகில், பெத்தேலுக்குக் கிழக்காக உள்ளது. யோசுவா அவர்களிடம், “ஆயீக்குச் சென்று அவ்விடத்தின் பெலவீனங்களைத் தெரிந்து வாருங்கள்” என்றான். அம்மனிதர்களும் அந்த இடத்தை உளவறிந்து வருவதற்கு சென்றனர். பின்னர் அவர்கள் யோசுவாவிடம் திரும்பி வந்து, “ஆயீ ஒரு பலவீனமான பகுதி. அவ்விடத்தை தோற்கடிக்க நம் ஜனங்கள் அனைவரும் தேவையில்லை. 2,000 அல்லது 3,000 ஆட்களை அங்கு போர்செய்ய அனுப்புங்கள். படை முழுவதையும் பயன்படுத்த வேண்டியிராது. நம்மை எதிர்த்துப் போர் செய்வதற்குச் சில மனிதர்களே உள்ளனர்” என்றார்கள். எனவே சுமார் 3,000 மனிதர் ஆயீக்குப் போனார்கள். ஆனால் ஆயீயின் ஜனங்கள், இஸ்ரவேலரில் சுமார் 36 பேரைக் கொன்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் ஓடிவிட்டனர். நகரவாசலிலிருந்து இஸ்ரவேலரை மலைச் சரிவு வரைக்கும் துரத்தினார்கள். ஆயீயின் ஜனங்கள் அவர்களைப் பயங்கரமாகத் தோற்கடித்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் இதைக் கண்டு அஞ்சி, துணிவிழந்தனர்.