யோசுவா 6:1-11

யோசுவா 6:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எரிகோ பட்டணம் இஸ்ரயேலர்கள் நிமித்தம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது. அதனால் ஒருவரும் பட்டணத்தைவிட்டு வெளியே போகவுமில்லை; உள்ளே வரவுமில்லை. அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “இதோ, எரிகோ பட்டணத்தை அதன் அரசனோடும், போர்வீரர்களோடும் உன்னிடம் கையளித்துவிட்டேன். நீ ஆயுதம் தரித்த மனிதர்களோடு அணிவகுத்துப் பட்டணத்தைச்சுற்றி வா. இவ்வாறு ஆறுநாட்கள் செய். உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் ஏழு ஆசாரியர்கள் செம்மறியாட்டுக் கொம்பினால் செய்யப்பட்ட எக்காளங்களை எடுத்துக்கொண்டு செல்லும்படிசெய். ஏழாம்நாளோ நீங்கள் பட்டணத்தைச்சுற்றி ஏழுமுறை அணிவகுத்துச் செல்லுங்கள். அவ்வேளையில் ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதிக்கொண்டு செல்லட்டும். ஆசாரியர்கள் எக்காளங்களில் நீண்டதொனி எழுப்புவதைக் கேட்டவுடன் எல்லா மக்களையும் உரத்த சத்தம் எழுப்பச்சொல். அப்பொழுது பட்டணத்தின் சுற்றுமதில் இடிந்துவிழும். இஸ்ரயேல் மக்கள் பட்டணத்தினுள் செல்லட்டும். ஒவ்வொரு மனிதனும் தான்நின்ற இடத்திலிருந்து நேராக உள்ளே செல்லட்டும்” என்று கூறினார். அப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து, “யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அதற்கு முன்னே ஏழு ஆசாரியர்களை எக்காளத்துடன் போகும்படி செய்யுங்கள்” எனச் சொன்னான். பின்பு மக்களிடம் அவன், “இப்பொழுது நீங்கள் முன்னேறிச்செல்லுங்கள். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னே ஆயுதம் தாங்கிய காவலர்கள் அணிவகுத்து பட்டணத்தைச் சுற்றிவாருங்கள்” என உத்தரவிட்டான். யோசுவா மக்களிடம் பேசி முடிந்ததும், ஏழு எக்காளங்களைக் கொண்டுசென்ற ஏழு ஆசாரியர்கள், யெகோவாவுக்குமுன் எக்காளங்களை ஊதிக்கொண்டு முன்னால் சென்றனர். அவர்களின் பின்னே யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி சென்றது. எக்காளம் ஊதுகின்ற ஆசாரியர்களின் முன் ஆயுதம் தாங்கிய காவலர் அணிவகுத்துச் சென்றனர். பின்னணியில் உள்ள காவலர் பெட்டிக்கு பின்னே சென்றனர். அவ்வேளையிலெல்லாம் எக்காளங்கள் தொனித்துக்கொண்டேயிருந்தன. யோசுவா மக்களிடம், “நான் உங்களைச் சத்தமிடச் சொல்லும் நாள்வரை நீங்கள் போர்முழக்கமோ, கூக்குரலோ எழுப்பவேண்டாம். ஒரு வார்த்தையும் பேசவும்வேண்டாம். நான் கட்டளையிட்டதும் கூக்குரல் எழுப்புங்கள்” என சொல்லியிருந்தான். யெகோவாவின் பெட்டியை ஒருமுறை பட்டணத்தைச் சுற்றிவரச் செய்தான். அதன்பின் மக்கள் முகாமிற்குத் திரும்பிவந்து அவ்விரவைக் கழித்தார்கள்.

யோசுவா 6:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எரிகோ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. யெகோவா யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரர்களையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். யுத்தமனிதர்களாகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தை ஒருமுறை சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாட்கள் சுற்றிவரவேண்டும். ஏழு ஆசாரியர்கள் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவாருங்கள்; ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதவேண்டும். அவர்கள் அந்தக் கொம்புகளினால் நீண்ட சப்தம் எழுப்பும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், மக்கள் எல்லோரும் மகா சத்தத்தோடு ஆர்ப்பரிக்கவேண்டும்; அப்பொழுது பட்டணத்தின் மதில் இடிந்துவிழும்; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராக ஏறிப்போகவேண்டும் என்றார். அந்தப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி; மக்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்த வீரர்கள் யெகோவாவின் பெட்டிக்குமுன்னே நடக்கவேண்டும் என்றான். யோசுவா மக்களிடம் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்கள் யெகோவாவுக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின்னே சென்றது. எக்காளங்களை ஊதுகிற ஆசாரியர்களுக்கு முன்னே யுத்த வீரர்கள் நடந்தார்கள்; பின்புறம் உள்ள வீரர்கள், எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்னே சென்றார்கள். யோசுவா மக்களை நோக்கி: நான் சொல்லும் நாள் வரைக்கும், நீங்கள் ஆர்ப்பரிக்காமலும் உங்கள் வாயினால் சத்தம் போடாமலும் இருங்கள்; உங்களுடைய வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளில் ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான். அப்படியே யெகோவாவின் பெட்டியைப் பட்டணத்தைச் சுற்றி ஒருமுறை சுற்றிவரச் செய்தான்; அவர்கள் திரும்பப் முகாமிற்கு வந்து, அங்கே இரவுதங்கினார்கள்.

யோசுவா 6:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

எரிகோ நகரம் மூடப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் அருகே இருந்ததால், நகர ஜனங்கள் அஞ்சினார்கள். நகரத்திற்குள் எவரும் போகவுமில்லை. நகரத்திலிருந்து யாரும் வெளியே வரவுமில்லை. அப்போது கர்த்தர் யோசுவாவிடம், “பார், நீ எரிகோ நகரத்தை வீழ்த்தும்படி செய்வேன். நீ அந்நகரத்தின் ராஜாவையும், போர் செய்யும் ஜனங்களையும் தோற்கடிப்பாய். உனது சேனையோடு ஒவ்வொரு நாளும் நகரை ஒரு முறை சுற்றிச் செல். ஆறு நாட்கள் இவ்வாறு செய். வெள்ளாட்டுக் கடாவின் கொம்பால் செய்த எக்காளங்களை ஏழு ஆசாரியர்கள் சுமக்கும்படி சொல். பரிசுத்தப் பெட்டியையும் சுமந்து செல்லுங்கள். ஆசாரியர்களை பரிசுத்தப் பெட்டிக்கு முன் அணிவகுத்துச் செல்லும்படி கூறு. ஏழாம் நாள், ஏழுமுறை அணிவகுத்துச் செல்லும் போது ஆசாரியர்களிடம் எக்காளம் ஊதும்படி கூறு. ஆசாரியர்கள் எக்காளத்தை உரத்த குரலில் ஊதும் சத்தத்தை நீ கேட்டதும், எல்லா ஜனங்களையும் உரத்த சத்தம் எழுப்பச் சொல். அவ்வாறு நீங்கள் செய்யும் போது, நகரத்தின் சுவர்கள் இடிந்து விழும். உனது ஜனங்கள் நகரத்திற்குள் நுழைவார்கள்” என்றார். நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து அவர்களிடம், “கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து செல்லுங்கள். ஏழு ஆசாரியர்களிடம் எக்காளத்தைச் சுமந்துக்கொண்டு பெட்டிக்கு முன் அணிவகுத்துப் போகச்சொல்லுங்கள்” என்றான். பின் யோசுவா ஜனங்களிடம், “இப்போது புறப்பட்டுச் செல்லுங்கள்! நகரைச் சுற்றிலும் அணிவகுத்துச் செல்லுங்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக ஆயுதமேந்திய வீரர்கள் அணிவகுத்துச் செல்வார்கள்” என்றான். யோசுவா ஜனங்களிடம் பேசி முடித்த பிறகு, கர்த்தருக்கு முன்பாக அந்த ஏழு ஆசாரியர்களும் அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் ஏழு எக்காளங்களை ஏந்திக் கொண்டு, அணிவகுத்துச் சென்றபோது ஊதினார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்தவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர். ஆயுதமேந்திய வீரர்கள் ஆசாரியர்களுக்கு முன்பு சென்றனர். பரிசுத்தப் பெட்டிக்குப் பின்பு சென்றோர் அணிவகுத்துச் செல்லும்போது, எக்காளம் ஊதினார்கள். போர் முழக்கம் செய்யாதபடிக்கு யோசுவா ஜனங்களுக்குக் கூறியிருந்தான். அவன், “சத்தம் போடாதீர்கள். நான் சொல்லும் நாள் வரைக்கும் எந்த வார்த்தையும் பேசாதீர்கள். அதன் பிறகு சத்தமிடலாம்!” என்றான். நகரத்தைச் சுற்றிலும் ஒருமுறை கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் சுமந்து வருமாறு யோசுவா செய்தான். பின்பு அவர்கள் முகாமிட்டிருக்கும் இடத்திற்குச் சென்று இரவைக் கழித்தனர்.

யோசுவா 6:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள். ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும். அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார். அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி; ஜனங்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் கர்த்தரின் பெட்டிக்குமுன் நடக்கக்கடவர்கள் என்றான். யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின் சென்றது. எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்குமுன் யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள்; பின்தண்டு எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின் சென்றது. யோசுவா ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான். அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவரப்பண்ணினான்; அவர்கள் திரும்பப் பாளயத்திலே வந்து, பாளயத்தில் இராத்தங்கினார்கள்.