எரிகோ பட்டணம் இஸ்ரயேலர்கள் நிமித்தம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது. அதனால் ஒருவரும் பட்டணத்தைவிட்டு வெளியே போகவுமில்லை; உள்ளே வரவுமில்லை. அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “இதோ, எரிகோ பட்டணத்தை அதன் அரசனோடும், போர்வீரர்களோடும் உன்னிடம் கையளித்துவிட்டேன். நீ ஆயுதம் தரித்த மனிதர்களோடு அணிவகுத்துப் பட்டணத்தைச்சுற்றி வா. இவ்வாறு ஆறுநாட்கள் செய். உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் ஏழு ஆசாரியர்கள் செம்மறியாட்டுக் கொம்பினால் செய்யப்பட்ட எக்காளங்களை எடுத்துக்கொண்டு செல்லும்படிசெய். ஏழாம்நாளோ நீங்கள் பட்டணத்தைச்சுற்றி ஏழுமுறை அணிவகுத்துச் செல்லுங்கள். அவ்வேளையில் ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதிக்கொண்டு செல்லட்டும். ஆசாரியர்கள் எக்காளங்களில் நீண்டதொனி எழுப்புவதைக் கேட்டவுடன் எல்லா மக்களையும் உரத்த சத்தம் எழுப்பச்சொல். அப்பொழுது பட்டணத்தின் சுற்றுமதில் இடிந்துவிழும். இஸ்ரயேல் மக்கள் பட்டணத்தினுள் செல்லட்டும். ஒவ்வொரு மனிதனும் தான்நின்ற இடத்திலிருந்து நேராக உள்ளே செல்லட்டும்” என்று கூறினார். அப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து, “யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அதற்கு முன்னே ஏழு ஆசாரியர்களை எக்காளத்துடன் போகும்படி செய்யுங்கள்” எனச் சொன்னான். பின்பு மக்களிடம் அவன், “இப்பொழுது நீங்கள் முன்னேறிச்செல்லுங்கள். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னே ஆயுதம் தாங்கிய காவலர்கள் அணிவகுத்து பட்டணத்தைச் சுற்றிவாருங்கள்” என உத்தரவிட்டான். யோசுவா மக்களிடம் பேசி முடிந்ததும், ஏழு எக்காளங்களைக் கொண்டுசென்ற ஏழு ஆசாரியர்கள், யெகோவாவுக்குமுன் எக்காளங்களை ஊதிக்கொண்டு முன்னால் சென்றனர். அவர்களின் பின்னே யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி சென்றது. எக்காளம் ஊதுகின்ற ஆசாரியர்களின் முன் ஆயுதம் தாங்கிய காவலர் அணிவகுத்துச் சென்றனர். பின்னணியில் உள்ள காவலர் பெட்டிக்கு பின்னே சென்றனர். அவ்வேளையிலெல்லாம் எக்காளங்கள் தொனித்துக்கொண்டேயிருந்தன. யோசுவா மக்களிடம், “நான் உங்களைச் சத்தமிடச் சொல்லும் நாள்வரை நீங்கள் போர்முழக்கமோ, கூக்குரலோ எழுப்பவேண்டாம். ஒரு வார்த்தையும் பேசவும்வேண்டாம். நான் கட்டளையிட்டதும் கூக்குரல் எழுப்புங்கள்” என சொல்லியிருந்தான். யெகோவாவின் பெட்டியை ஒருமுறை பட்டணத்தைச் சுற்றிவரச் செய்தான். அதன்பின் மக்கள் முகாமிற்குத் திரும்பிவந்து அவ்விரவைக் கழித்தார்கள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் யோசுவா 6
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யோசுவா 6:1-11
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்