யோசுவா 23:1-8

யோசுவா 23:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா இஸ்ரயேலரைச் சுற்றியிருந்த அவர்களுடைய பகைவரிடமிருந்து அவர்களுக்குச் சமாதானத்தைக் கொடுத்த நீண்டகாலத்திற்குபின், யோசுவா வயதுசென்று முதியவனாய் இருந்தான். அப்பொழுது யோசுவா இஸ்ரயேலரின் சபைத்தலைவர்கள், தலைவர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் ஆகிய எல்லோரையும் அழைத்து கூறியதாவது: “நான் வயதுசென்று முதியவனாகிவிட்டேன். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் நிமித்தம் இந்த நாடுகளுக்குச் செய்த எல்லாவற்றையும் கண்டிருக்கிறீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்காகப் போர் புரிந்தவர். வெற்றியடையாமல் மீதியாயிருக்கும் நாடுகளின் நாட்டை நான் உங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் எப்படி, சொத்துரிமையாகப் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறேன் என்பதை நினைவில்கொள்ளுங்கள். மேற்கே மத்திய தரைக்கடலுக்கும், யோர்தான் நதிக்கும் இடையே நான் வெற்றிகொண்ட நாடுகளின் நாட்டைப் பிரித்துக் கொடுத்ததுபோலவே, இதையும் நான் கொடுத்திருக்கிறேன். உங்கள் இறைவனாகிய யெகோவா தாமே அவர்களை உங்கள் வழியிலிருந்து துரத்திவிடுவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாக அவர்களை துரத்தி, உங்களுக்கு வாக்குக்கொடுத்தபடியே அவர்களுடைய நாட்டை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்வீர்கள். “மிகவும் பலங்கொண்டிருங்கள்; இடப்புறமோ வலப்புறமோ சாயாமல், மோசேயினால் சட்ட நூலில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றுக்கும் கீழ்ப்படியக் கவனமாயிருங்கள். உங்கள் மத்தியில் மீதியாயிருக்கும் இந்த பிற நாடுகளுடன் ஒன்றுசேர்ந்து உறவுகொள்ளாதிருங்கள். அவர்களின் தெய்வங்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடவோ, ஆணையிடவோ வேண்டாம். நீங்கள் அவற்றுக்குச் சேவை செய்யவோ, வணங்கவோ கூடாது. இன்றுவரை நீங்கள் செய்ததுபோலவே உங்கள் இறைவனாகிய யெகோவாவை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருங்கள்.

யோசுவா 23:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லா எதிரிகளாலும் யுத்தமில்லாதபடி ஓய்ந்திருக்கச்செய்து அநேகநாட்கள் சென்றபின்பு, யோசுவா முதிர்வயதானபோது, யோசுவா இஸ்ரவேலின் மூப்பர்களையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும், மற்ற எல்லோரையும் அழைத்து, அவர்களை நோக்கி: நான் முதிர்வயதானேன். உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாக இந்த எல்லா தேசங்களுக்கும் செய்த எல்லாவற்றையும் நீங்கள் பார்த்தீர்கள்; உங்களுடைய தேவனாகிய யெகோவாவே உங்களுக்காக யுத்தம்செய்தார். பாருங்கள், யோர்தான் நதி முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கில் உள்ள மத்திய தரைக் கடல் வரைக்கும் இன்னும் மீதியாக இருக்கிறவைகளுமான எல்லா தேசங்களையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்களுடைய கோத்திரங்களுக்குத் தகுந்தபடி, சொந்தமாகப் பங்கிட்டேன். உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்களுடைய பார்வையிலிருந்து அகற்றிப்போடுவார். ஆகவே, மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறதை விட்டுவிட்டு, வலதுபுறமாவது இடதுபுறமாவது விலகிப்போகாமல், அதையெல்லாம் கடைபிடிக்கவும், செய்யவும் உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த தேசங்களோடு சேராமலும், அவர்களுடைய தெய்வங்களின் பெயர்களை நினைக்காமலும், அவைகளைக்கொண்டு சத்தியம்செய்யாமலும், அவைகளைத் தொழுதுகொள்ளாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாக இருங்கள். இந்த நாள்வரைக்கும் நீங்கள் செய்ததுபோல, உங்களுடைய தேவனாகிய யெகோவாவைப் பற்றிக்கொண்டிருங்கள்.

யோசுவா 23:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

சுற்றிலுமிருந்த எதிரிகளிடமிருந்து கர்த்தர் இஸ்ரவேலருக்கு அமைதியைக் கொடுத்தார். கர்த்தர் இஸ்ரவேலரைப் பாதுகாத்தார். வருடங்கள் கழிந்தன, யோசுவா வயது முதிர்ந்தவனானான். அப்போது, எல்லா மூத்த தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், இஸ்ரவேலரின் அதிகாரிகளையும் யோசுவா ஒருங்கே அழைத்தான். அவர்களிடம், “நான் மிகவும் வயது முதிர்ந்தவனானேன். நமது பகைவர்களுக்கு கர்த்தர் செய்தவற்றைப் பார்த்திருக்கிறீர்கள். நமக்கு உதவும் பொருட்டு கர்த்தர் இதைச் செய்தார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக போர் செய்தார். ‘யோர்தான் நதிக்கும், மேற்கில் மத்தியத்தரைக் கடலுக்கும் இடையில் உள்ள இடத்தை உங்கள் ஜனங்கள் பெறமுடியும்’ என்று நான் உங்களுக்குச் சொன்னதை இப்போது நினைவுகூருங்கள். அந்நிலத்தை உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன், ஆனால் இதுவரைக்கும் நீங்கள் அதைப் பெறவில்லை. ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது வாக்குப்படியே அங்கு வசிக்கும் ஜனங்களை அங்கிருந்து வெளியேற்றுவார்! நீங்கள் அவர்கள் தேசத்தை எடுத்துக்கொள்வீர்கள். அங்கு வசிக்கும் ஜனங்களை கர்த்தர் வெளியேறுமாறு கட்டாயப்படுத்துவார். கர்த்தர் இதைச் செய்வதாக உங்களுக்குக் வாக்களித்துள்ளார். “கர்த்தர் நமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிவதற்குக் கவனமாக இருங்கள். மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியுங்கள். அச்சட்டத்தை மீறாதீர்கள். இஸ்ரவேலரல்லாத ஜனங்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஜனங்கள் தமக்குச் சொந்தமான தெய்வங்களையே வழிபடுகின்றனர். அந்த ஜனங்களோடு நட்பு கொள்ளாதீர்கள். அத்தெய்வங்களுக்கு சேவை செய்யவோ, அவற்றை வழிபடவோ வேண்டாம். உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். இதையே முன்பும் செய்தீர்கள், இனிமேலும் செய்ய வேண்டும்.

யோசுவா 23:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாதபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது, யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: நான் வயதுசென்று முதிர்ந்தவனானேன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார். பாருங்கள், யோர்தான் முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரமட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத் தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார். ஆகையால், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள். உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். இந்நாள்மட்டும் நீங்கள் செய்தது போல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.