யோசுவாவின் புத்தகம் 23:1-8

யோசுவாவின் புத்தகம் 23:1-8 TAERV

சுற்றிலுமிருந்த எதிரிகளிடமிருந்து கர்த்தர் இஸ்ரவேலருக்கு அமைதியைக் கொடுத்தார். கர்த்தர் இஸ்ரவேலரைப் பாதுகாத்தார். வருடங்கள் கழிந்தன, யோசுவா வயது முதிர்ந்தவனானான். அப்போது, எல்லா மூத்த தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், இஸ்ரவேலரின் அதிகாரிகளையும் யோசுவா ஒருங்கே அழைத்தான். அவர்களிடம், “நான் மிகவும் வயது முதிர்ந்தவனானேன். நமது பகைவர்களுக்கு கர்த்தர் செய்தவற்றைப் பார்த்திருக்கிறீர்கள். நமக்கு உதவும் பொருட்டு கர்த்தர் இதைச் செய்தார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக போர் செய்தார். ‘யோர்தான் நதிக்கும், மேற்கில் மத்தியத்தரைக் கடலுக்கும் இடையில் உள்ள இடத்தை உங்கள் ஜனங்கள் பெறமுடியும்’ என்று நான் உங்களுக்குச் சொன்னதை இப்போது நினைவுகூருங்கள். அந்நிலத்தை உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன், ஆனால் இதுவரைக்கும் நீங்கள் அதைப் பெறவில்லை. ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது வாக்குப்படியே அங்கு வசிக்கும் ஜனங்களை அங்கிருந்து வெளியேற்றுவார்! நீங்கள் அவர்கள் தேசத்தை எடுத்துக்கொள்வீர்கள். அங்கு வசிக்கும் ஜனங்களை கர்த்தர் வெளியேறுமாறு கட்டாயப்படுத்துவார். கர்த்தர் இதைச் செய்வதாக உங்களுக்குக் வாக்களித்துள்ளார். “கர்த்தர் நமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிவதற்குக் கவனமாக இருங்கள். மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியுங்கள். அச்சட்டத்தை மீறாதீர்கள். இஸ்ரவேலரல்லாத ஜனங்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஜனங்கள் தமக்குச் சொந்தமான தெய்வங்களையே வழிபடுகின்றனர். அந்த ஜனங்களோடு நட்பு கொள்ளாதீர்கள். அத்தெய்வங்களுக்கு சேவை செய்யவோ, அவற்றை வழிபடவோ வேண்டாம். உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். இதையே முன்பும் செய்தீர்கள், இனிமேலும் செய்ய வேண்டும்.