யோவேல் 1:4-13
யோவேல் 1:4-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பச்சைப்புழு விட்டதை, இளம் வெட்டுக்கிளிகள் தின்றன; இளம் வெட்டுக்கிளிகள் விட்டதை, துள்ளும் வெட்டுக்கிளிகள் தின்றன; துள்ளும் வெட்டுக்கிளிகள் விட்டதை, வளர்ந்த வெட்டுக்கிளிகள் தின்றன. குடிவெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சை இரசம் குடிப்போரே, நீங்கள் எல்லோரும் இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்; ஏனெனில் அது உங்கள் வாயிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. வலிமைமிக்கதும் எண்ணற்றதுமான வெட்டுக்கிளிக் கூட்டம் இராணுவம்போல் என் நாட்டின்மேல் படையெடுத்தது. அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்; பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்களும் அதற்கு உண்டு. அது என் திராட்சைக்கொடியைப் பாழாக்கி, என் அத்திமரங்களையும் அழித்துப்போட்டது. அது அவற்றின் பட்டைகளை உரித்து எறிந்தது, அதன் கிளைகள் வெளிறிப் போய்விட்டது. தன் வாலிப வயதின் கணவனுக்காக துக்கவுடை உடுத்தி அழுது புலம்பும் இளம்பெண்ணைப்போல் கதறி அழுங்கள். தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து அகன்று போயின. யெகோவாவுக்குமுன் ஊழியம் செய்கிற ஆசாரியர்கள் புலம்பி அழுகிறார்கள். வயல்வெளிகள் பாழாயின, நிலமும் உலர்ந்துபோயிற்று; தானியம் அழிந்தது, புது திராட்சை இரசம் வற்றிப்போயிற்று; எண்ணெயும் குறைவுபடுகிறது. விவசாயிகளே, கலங்குங்கள், திராட்சைத் தோட்டக்காரரே, புலம்புங்கள்; கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; ஏனெனில் வயலின் விளைச்சல் அழிந்துபோயிற்று. திராட்சைக்கொடி உலர்ந்துபோயிற்று, அத்திமரம் வாடிப்போயிற்று. மாதுளையும், பேரீச்சையும், ஆப்பிள் மரங்களுமான வயல்வெளியின் எல்லா மரங்களும் வதங்கிப்போயிற்று; மனுமக்களின் மகிழ்ச்சி மறைந்துபோயிற்று. ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின்முன் பணி செய்வோரே, அழுங்கள்; என் இறைவனின்முன் ஊழியம் செய்வோரே, வாருங்கள், வந்து துக்கவுடை உடுத்தி இரவைக் கழியுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனது ஆலயத்திலிருந்து தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.
யோவேல் 1:4-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது. மது வெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சைரசம் குடிக்கிற அனைத்து மக்களே, புது திராட்சைரசத்திற்காக அலறுங்கள்; அது உங்கள் வாயிலிருந்து அகற்றப்பட்டது. எண்ணிமுடியாத ஒரு பெரும் மக்கள்கூட்டம் என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; கொடிய சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு. அது என் திராட்சைச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முழுவதும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று. தன் இளவயதின் கணவனுக்காக சணல் ஆடையை அணிந்திருக்கிற பெண்ணைப்போலப் புலம்பும். உணவுபலியும் பானபலியும் யெகோவாவுடைய ஆலயத்தை விட்டு அகன்றுபோனது; யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் துக்கப்படுகிறார்கள். வயல்வெளி பாழானது, பூமி துக்கம் கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சைரசம் வற்றிப்போனது; எண்ணெய் தீர்ந்துபோனது. பயிரிடும் குடிமக்களே, வெட்கப்படுங்கள்; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போனது; திராட்சைத்தோட்டக்காரர்களே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோனது. திராட்சைச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதுளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய தோட்டத்தின் செடிகள் எல்லாம் வாடிப்போனது; சந்தோஷம் மனுக்குலத்தைவிட்டு ஒழிந்துபோனது. ஆசாரியர்களே, சணல் ஆடையை அணிந்து புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரர்களே, அலறுங்கள்; என் தேவனுடைய ஊழியக்காரர்களே, நீங்கள் உள்ளே நுழைந்து சணல் ஆடையை அணிந்தவர்களாக இரவு தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் உணவுபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
யோவேல் 1:4-13 பரிசுத்த பைபிள் (TAERV)
பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது. வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக் கிளி தின்றது. பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது. குடியர்களே, விழித்து எழுந்து அழுங்கள். திராட்சைரசத்தைக் குடிக்கும் ஜனங்களே அழுங்கள். ஏனென்றால் உங்கள் இனிமையான திரட்சைரசம் முடிந்தது. நீங்கள் இனி அந்தத் திராட்சைரசத்தின் சுவையைப் பெறமாட்டீர்கள். எனது தேசத்திற்கு எதிராகப் போரிட ஒரு பெரிய வல்லமை வாய்ந்த நாடு வந்தது. அதன் வீரர்கள் எண்ணமுடியாத அளவிற்கு அநேகராக இருந்தார்கள். அவர்களது ஆயுதங்கள் சிங்கத்தின் பற்களைப் போன்று கூர்மையுள்ளதாகவும், சிங்கத்தின் தாடையைப்போன்று வல்லமையுள்ளதாகவும் இருந்தது. அது என் திராட்சைச் செடியை அழித்தது. அதன் நல்ல கொடிகள் வாடி அழிந்தது. அது என் அத்திமரத்தை அழித்தது. பட்டைகளை உரித்து எறிந்துவிட்டது. மணமுடிப்பதற்குத் தயாராக இருந்த இளம் பெண் மரித்துப்போன தன் மணவாளனுக்காக அழுவது போன்று அழுங்கள். ஆசாரியர்களே, கர்த்தருடைய பணியாளர்களே, அழுங்கள். ஏனென்றால், கர்த்தருடைய ஆலயத்தில் இனிமேல் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையும் இருக்கப்போவதில்லை. வயல்வெளிகள் பாழாயின. பூமி கூட அழுதுகொண்டிருக்கிறது. ஏனென்றால் தானியம் அழிக்கப்பட்டிருக்கிறது. புதிய திராட்சைரசம் வறண்டிருக்கிறது. ஒலிவ எண்ணெய் போய்விட்டது. உழவர்களே, துக்கமாயிருங்கள். திராட்சை விவசாயிகளே சத்தமாக அழுங்கள். கோதுமைக்காகவும் பார்லிக்காகவும் அழுங்கள். ஏனென்றால் வயல்வெளியில் அறுவடை இல்லாமல் போனது. திராட்சைக்கொடிகள் காய்ந்துவிட்டன. அத்திமரம் அழிந்துகொண்டிருக்கிறது. மாதுளை, பேரீச்சை, கிச்சிலி மற்றும் அனைத்து மரங்களும் வாடிவிட்டன. ஜனங்களின் மகிழ்ச்சி மரித்துப்போயிற்று. ஆசாரியர்களே, உங்களது துக்கத்திற்குரிய ஆடையை அணிந்துகொண்டு உரக்க அழுங்கள். பலிபீடத்தின் பணியாளர்களே, உரக்க அழுங்கள். எனது தேவனுடைய பணியாளர்களே, நீங்கள் துக்கத்தின் ஆடைகளோடு தூங்குவீர்கள். ஏனென்றால் தேவனுடைய ஆலயத்தில் இனிமேல் தானிய காணிக்கையும் பானங்களின் காணிக்கையும் இருப்பதில்லை.
யோவேல் 1:4-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது. வெறியரே, விழித்து அழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது. எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு. அது என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று. தன் பாலியவயதின் புருஷனுக்காக இரட்டுடுத்தியிருக்கிற பெண்ணைப்போலப் புலம்பு. போஜனபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அற்றுப்போயின; கர்த்தரின் ஊழியக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிறார்கள். வயல்வெளி பாழாயிற்று, பூமி துக்கங்கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சரசம் வற்றிப்போயிற்று; எண்ணெய் மாண்டுபோயிற்று. பயிரிடுங் குடிகளே, வெட்கப்படுங்கள்; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; திராட்சத்தோட்டக்காரரே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோயிற்று. திராட்சச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின; சந்தோஷம் மனுபுத்திரரைவிட்டு ஒழிந்துபோயிற்று. ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள்; என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.