யோயேல் 1:4-13

யோயேல் 1:4-13 TCV

பச்சைப்புழு விட்டதை, இளம் வெட்டுக்கிளிகள் தின்றன; இளம் வெட்டுக்கிளிகள் விட்டதை, துள்ளும் வெட்டுக்கிளிகள் தின்றன; துள்ளும் வெட்டுக்கிளிகள் விட்டதை, வளர்ந்த வெட்டுக்கிளிகள் தின்றன. குடிவெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சை இரசம் குடிப்போரே, நீங்கள் எல்லோரும் இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்; ஏனெனில் அது உங்கள் வாயிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. வலிமைமிக்கதும் எண்ணற்றதுமான வெட்டுக்கிளிக் கூட்டம் இராணுவம்போல் என் நாட்டின்மேல் படையெடுத்தது. அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்; பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்களும் அதற்கு உண்டு. அது என் திராட்சைக்கொடியைப் பாழாக்கி, என் அத்திமரங்களையும் அழித்துப்போட்டது. அது அவற்றின் பட்டைகளை உரித்து எறிந்தது, அதன் கிளைகள் வெளிறிப் போய்விட்டது. தன் வாலிப வயதின் கணவனுக்காக துக்கவுடை உடுத்தி அழுது புலம்பும் இளம்பெண்ணைப்போல் கதறி அழுங்கள். தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து அகன்று போயின. யெகோவாவுக்குமுன் ஊழியம் செய்கிற ஆசாரியர்கள் புலம்பி அழுகிறார்கள். வயல்வெளிகள் பாழாயின, நிலமும் உலர்ந்துபோயிற்று; தானியம் அழிந்தது, புது திராட்சை இரசம் வற்றிப்போயிற்று; எண்ணெயும் குறைவுபடுகிறது. விவசாயிகளே, கலங்குங்கள், திராட்சைத் தோட்டக்காரரே, புலம்புங்கள்; கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; ஏனெனில் வயலின் விளைச்சல் அழிந்துபோயிற்று. திராட்சைக்கொடி உலர்ந்துபோயிற்று, அத்திமரம் வாடிப்போயிற்று. மாதுளையும், பேரீச்சையும், ஆப்பிள் மரங்களுமான வயல்வெளியின் எல்லா மரங்களும் வதங்கிப்போயிற்று; மனுமக்களின் மகிழ்ச்சி மறைந்துபோயிற்று. ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின்முன் பணி செய்வோரே, அழுங்கள்; என் இறைவனின்முன் ஊழியம் செய்வோரே, வாருங்கள், வந்து துக்கவுடை உடுத்தி இரவைக் கழியுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனது ஆலயத்திலிருந்து தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.