யோபு 6:1-14

யோபு 6:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோபு மறுமொழியாக சொன்னது: “என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால் நலமாயிருக்கும்! அவை கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; ஆகவே எனது வார்த்தைகள் மூர்க்கமாய் இருப்பது ஆச்சரியமல்லவே. எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் பாய்ந்திருக்கின்றன, என் ஆவி அவைகளின் நஞ்சைக் குடிக்கிறது; இறைவனின் பயங்கரங்கள் எனக்கெதிராய் அணிவகுத்து நிற்கின்றன. தனக்குப் புல் இருக்கும்போது காட்டுக் கழுதை கத்துமோ? தீனி இருக்கும்போது எருது கதறுமோ? சுவையில்லாத உணவு உப்பின்றி சாப்பிடப்படுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் ஏதேனும் சுவை உண்டோ? இப்படியான உணவு என்னை நோயாளியாக்குகிறது; நான் அதைத் தொட மறுக்கிறேன். “நான் வேண்டிக்கொள்வதையும், நான் நம்பி எதிர்பார்ப்பதையும் இறைவன் எனக்குக் கொடுக்கட்டும். இறைவன் என்னை நசுக்க உடன்படட்டும், தன் கையை நீட்டி என்னை வெட்டிப்போடட்டும்! இந்த ஆறுதல் எனக்கு இன்னும் இருக்கும்; எனது முடிவில்லாத வேதனையிலும் பரிசுத்தரின் வார்த்தைகளை நான் மறுக்கவில்லை. “நான் இன்னும் எதிர்பார்ப்புடன் இருக்க எனக்கு என்ன பெலன் இருக்கிறது? நான் இன்னும் பொறுமையாய் இருக்க என் முடிவு என்ன? ஒரு கல்லின் பெலன் எனக்கு உண்டோ? எனது சதை வெண்கலமோ? எனக்கே நான் உதவிசெய்யத்தக்க வல்லமை என்னில் உண்டோ? வெற்றிக்கான ஆதாரம் என்னைவிட்டு நீங்கிற்று. “எதிர்பார்ப்பில்லாதவன், எல்லாம் வல்லவரைப் பற்றிய பயத்தைக் கைவிட்ட போதிலும், அவனுக்கு அவனுடைய நண்பர்களின் தயவு இருக்கவேண்டும்.

யோபு 6:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோபு மறுமொழியாக: “என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும். அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது. புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ? உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் வெறுப்பான உணவுபோல இருக்கிறது. ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் விரும்புவதை தேவன் எனக்குத் தந்து, தேவன் என்னை நொறுக்க விரும்பி, தம்முடைய கையை நீட்டி என்னை கொன்றுபோட்டால் நலமாயிருக்கும். அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால் உணர்வில்லாமல் இருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைக் கைவிடமாட்டார். நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது? என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ? எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? உதவி என்னைவிட்டு நீங்கிவிட்டதே. உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லமையுள்ள தேவனுக்குப் பயப்படாமல் போகிறான்.

யோபு 6:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது யோபு, “என் துன்பங்களை நிறுத்துப் பார்க்கக் கூடுமானால், என் தொல்லைகள் தராசில் வைக்கப்படக் கூடுமானால், நீ என் துயரத்தைப் புரிந்துகொள்வாய். கடற்கரை மணலைக் காட்டிலும் என் துயர் பாரமானது. அதனால்தான் என் வார்த்தைகள் மூடத்தனமானவையாகத் தோன்றுகின்றன. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அம்புகள் என்னுள்ளே இருக்கின்றன. அந்த அம்புகளின் விஷத்தை என் ஆவி பருகுகின்றது! தேவனுடைய கொடிய ஆயுதங்கள் எனக்கெதிராக அணிவகுத்து நிற்கின்றன. எந்தத் தீமையும் நிகழாதபோது நீ கூறியவற்றைச் சொல்வது சுலபம் (எளிது). காட்டுக் கழுதையும் தின்பதற்குப் புல் அகப்படும்போது முறையிடாது. பசுவும் தன் உணவு கிடைக்கும்போது முறையிடாது. உப்பற்ற உணவு சுவைக்காது. முட்டையின் வெண்பகுதிக்குச் சுவையில்லை. நான் அதைத் தொட மறுக்கிறேன்; அத்தகைய உணவு எனக்குச் சலிப்பைத் தருகிறது! உனது வார்த்தைகளும் இப்போது எனக்கு அவ்வாறே உள்ளன. “நான் கேட்பவை எனக்குக் கிடைக்கவேண்டுமென விரும்புகிறேன். நான் விரும்பியவற்றைத் தேவன் எனக்குத் தருவார் என விரும்புகிறேன். தேவன் என்னை நசுக்கிப் போடவேண்டும் என விரும்புகிறேன். அவருடைய கரத்தின் மூலமாக என்னை அழித்திடலாம். அவர் என்னைக் கொன்றுவிட்டால் நான் ஒரு காரியத்தைக் குறித்து ஆறுதலடைவேன். நான் ஒரு காரியத்தைக் குறித்து மகிழ்ச்சியடைவேன். இத்தனை வேதனைகளை அனுபவித்துங்கூட பரிசுத்தமானவரின் வார்த்தைகளை கீழ்ப்படிய நான் மறுக்கவில்லை. “என் வலிமை குறைந்துப்போயிற்று, எனவே தொடர்ந்து வாழ்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு என்ன நேருமென அறியேன். எனவே, நான் பொறுமையுடன் இருப்பதற்கு காரணமில்லை. நான் பாறையைப்போன்று பலம் பொருந்தியவனா? என் உடம்பு வெண்கலத்தால் ஆனதா? எனக்கு நானே உதவும் ஆற்றல் எனக்கில்லை. ஏனெனில், வெற்றியோ என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. “ஒருவனுக்குத் தொல்லைகள் நேர்கையில், அவனது நண்பர்கள் அவனிடம் இரக்கமாயிருக்கட்டும். ஒருவன் அவனது நண்பனிடம், அவன் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து விலகிச்சென்றால் கூட, நம்பிக்கைக்குரியவனாக நடந்துக்கொள்ளட்டும்.

யோபு 6:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோபு பிரதியுத்தரமாக: என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும். அப்பொழுது அது கடற்கரை மணலைப்பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது. புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ? உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் அரோசிகமான போஜனம்போல் இருக்கிறது. ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதை தேவன் எனக்குத் தந்து, தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும். அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக. நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப்பட்டது? என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ? எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னைவிட்டு நீங்கிற்றே. உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதே போகிறான்.