யோபுடைய சரித்திரம் 6:1-14

யோபுடைய சரித்திரம் 6:1-14 TAERV

அப்போது யோபு, “என் துன்பங்களை நிறுத்துப் பார்க்கக் கூடுமானால், என் தொல்லைகள் தராசில் வைக்கப்படக் கூடுமானால், நீ என் துயரத்தைப் புரிந்துகொள்வாய். கடற்கரை மணலைக் காட்டிலும் என் துயர் பாரமானது. அதனால்தான் என் வார்த்தைகள் மூடத்தனமானவையாகத் தோன்றுகின்றன. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அம்புகள் என்னுள்ளே இருக்கின்றன. அந்த அம்புகளின் விஷத்தை என் ஆவி பருகுகின்றது! தேவனுடைய கொடிய ஆயுதங்கள் எனக்கெதிராக அணிவகுத்து நிற்கின்றன. எந்தத் தீமையும் நிகழாதபோது நீ கூறியவற்றைச் சொல்வது சுலபம் (எளிது). காட்டுக் கழுதையும் தின்பதற்குப் புல் அகப்படும்போது முறையிடாது. பசுவும் தன் உணவு கிடைக்கும்போது முறையிடாது. உப்பற்ற உணவு சுவைக்காது. முட்டையின் வெண்பகுதிக்குச் சுவையில்லை. நான் அதைத் தொட மறுக்கிறேன்; அத்தகைய உணவு எனக்குச் சலிப்பைத் தருகிறது! உனது வார்த்தைகளும் இப்போது எனக்கு அவ்வாறே உள்ளன. “நான் கேட்பவை எனக்குக் கிடைக்கவேண்டுமென விரும்புகிறேன். நான் விரும்பியவற்றைத் தேவன் எனக்குத் தருவார் என விரும்புகிறேன். தேவன் என்னை நசுக்கிப் போடவேண்டும் என விரும்புகிறேன். அவருடைய கரத்தின் மூலமாக என்னை அழித்திடலாம். அவர் என்னைக் கொன்றுவிட்டால் நான் ஒரு காரியத்தைக் குறித்து ஆறுதலடைவேன். நான் ஒரு காரியத்தைக் குறித்து மகிழ்ச்சியடைவேன். இத்தனை வேதனைகளை அனுபவித்துங்கூட பரிசுத்தமானவரின் வார்த்தைகளை கீழ்ப்படிய நான் மறுக்கவில்லை. “என் வலிமை குறைந்துப்போயிற்று, எனவே தொடர்ந்து வாழ்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு என்ன நேருமென அறியேன். எனவே, நான் பொறுமையுடன் இருப்பதற்கு காரணமில்லை. நான் பாறையைப்போன்று பலம் பொருந்தியவனா? என் உடம்பு வெண்கலத்தால் ஆனதா? எனக்கு நானே உதவும் ஆற்றல் எனக்கில்லை. ஏனெனில், வெற்றியோ என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. “ஒருவனுக்குத் தொல்லைகள் நேர்கையில், அவனது நண்பர்கள் அவனிடம் இரக்கமாயிருக்கட்டும். ஒருவன் அவனது நண்பனிடம், அவன் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து விலகிச்சென்றால் கூட, நம்பிக்கைக்குரியவனாக நடந்துக்கொள்ளட்டும்.