யோபு 13:1-12
யோபு 13:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இவை எல்லாவற்றையும் என் கண் கண்டிருக்கின்றது, என் காது கேட்டு அறிந்திருக்கிறது. உங்களுக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்கும் தெரியும்; நான் உங்களைவிட தாழ்ந்தவனல்ல. ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு பேசவும், இறைவனோடு என் வழக்கை வாதாடவும் விரும்புகிறேன். எப்படியும் நீங்கள் என்னைப் பொய்களால் மழுப்புகிறீர்கள்; நீங்கள் எல்லோரும் ஒன்றுக்கும் உதவாத மருத்துவர்கள். நீங்கள் பேசாமல் மட்டும் இருப்பீர்களானால், அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். இப்பொழுது என் விவாதத்தைக் கேளுங்கள்; என் உதடுகளின் முறையிடுதலுக்குச் செவிகொடுங்கள். இறைவனின் சார்பாக கொடுமையாய்ப் பேசுவீர்களோ? அவருக்காக நீங்கள் வஞ்சகமாய்ப் பேசுவீர்களோ? அவருக்கு நீங்கள் பட்சபாதம் காட்டுவீர்களோ? இறைவனுக்காக வழக்கை வாதாடுவீர்களோ? அவர் உங்களைச் சோதித்தால், உங்களுக்கு நலமாகுமோ? மனிதரை ஏமாற்றுவதுபோல் அவரை ஏமாற்ற முடியமோ? நீங்கள் இரகசியமாய் பட்சபாதம் காட்டினாலும், அவர் நிச்சயமாக உங்களைக் கண்டிப்பார். அவருடைய மகத்துவம் உங்களுக்குத் திகிலூட்டாதோ? அவருடைய பயங்கரம் உங்கள்மேல் வராதோ? உங்கள் கொள்கைகள் சாம்பலை ஒத்த பழமொழிகள்; உங்கள் எதிர்வாதங்களும் களிமண்ணுக்கு ஒப்பானது.
யோபு 13:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது. நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது; தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள். நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள். நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி, அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ? அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ? அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ? நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார். அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.
யோபு 13:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
யோபு, “நான் இவற்றையெல்லாம் முன்னரே பார்த்திருக்கிறேன். நீங்கள் கூறுகின்றவற்றையெல்லாம் நான் ஏற்கெனவே கேட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் நான் புரிந்துகொள்கிறேன். உங்களுக்கு தெரிந்தவற்றை நான் அறிவேன். நானும் உங்களைப் போலவே புத்திசாலி. ஆனால் நான் உங்களோடு வாதாட விரும்பவில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனோடு நான் பேச விரும்புகிறேன். என் தொல்லைகளைப்பற்றி நான் தேவனோடு வாதாட விரும்புகிறேன். ஆனால் நீங்கள் மூவரும் உங்கள் அறியாமையைப் பொய்களால் மறைக்க முயல்கிறீர்கள். ஒருவரையும் குணப்படுத்த முடியாத தகுதியற்ற மருத்துவர்களைப்போல் இருக்கிறீர்கள். நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் செய்யத்தக்க மிகுந்த ஞானமுள்ள காரியம் அதுவேயாகும். “இப்போது என் விவாதத்திற்கும் செவிகொடுங்கள். நான் சொல்லவேண்டியவற்றிற்குச் செவிகொடுங்கள். நீங்கள் தேவனுக்காகப் பொய் கூறுவீர்களா? நீங்கள் கூறும் பொய்களை, நீங்கள் கூறவேண்டுமென்று தேவன் விரும்பியதாக நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா? எனக்கெதிராக தேவனை ஆதரித்துப் பேச முயன்றுகொண்டிருக்கிறீர்களா? தேவனுக்காக வழக்குகள் கொண்டுவர முடியுமா? உங்களை தேவன் கூர்ந்து ஆராய்ந்தால், நீங்கள் சரியானவர்கள் என காண்பிப்பாரா? நீங்கள் ஜனங்களை மூடராக்குவது போல் தேவனை முட்டாளாக்க முடியும் என உண்மையாகவே எண்ணுகிறீர்களா? ஒரு மனிதன் முக்கியமானவன் என்பதால் மட்டும் நீதிமன்றத்தில் இரகசியமாக அவன் பக்கம் சாய முடிவுசெய்தால், தேவன் உங்களை விசாரணை செய்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய மகத்துவம் (முக்கியத்துவம்) உங்களை அச்சுறுத்துகிறது. நீங்கள் அவரைக் கண்டு பயப்படுகிறீர்கள். உங்கள் வாக்குவாதங்கள் சாம்பலைப் போல் எந்தப் பயனுமற்றவை. உங்கள் பதில்கள் சேற்றுக்குவியல்கள் போலப் பயனற்றவை.
யோபு 13:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது. நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள். நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள். நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி, அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ? அவருக்கு முகதாட்சிணியம்பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ? அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம் பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ? நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார். அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச் சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.