யோபு 13:1-12

யோபு 13:1-12 IRVTAM

இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது. நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது; தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள். நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள். நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி, அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ? அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ? அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ? நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார். அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.