யோபு 10:1-7

யோபு 10:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“நான் என் வாழ்வை வெறுக்கிறேன்; அதினால் எனது குற்றச்சாட்டைத் தாராளமாகச் சொல்வேன், எனது ஆத்துமக் கசப்பைப் பேசுவேன். நான் இறைவனிடம், நீர் என்னைக் குற்றவாளியாகத் தீர்க்காதிரும், எனக்கெதிராக என்ன குற்றச்சாட்டு உண்டு என எனக்குச் சொல்லும் எனக் கேட்பேன். கொடியவர்களின் சூழ்ச்சிகளைப் புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டு, உமது கைகளினால் நீர் படைத்த என்னை ஒடுக்குவது உமக்குப் பிரியமாயிருக்கிறதோ? உமக்கு மானிடக் கண்கள் உண்டோ? நீர் மனிதன் பார்ப்பதுபோல் பார்க்கிறீரோ? உமது நாட்கள் மனிதனின் நாட்களைப்போலவும், உமது வருடங்கள் பலவானுடைய வருடங்களைப்போலவும் இருக்கிறதோ? அதினால்தானோ நீர் எனது தவறுதல்களைத் தேடுகிறீர்? எனது பாவங்களைத் துருவி ஆராய்கிறீர்? நான் குற்றமற்றவன் என்பது உமக்குத் தெரியும், உமது கையினின்று என்னை விடுவிக்க ஒருவராலும் முடியாது என்றும் தெரியும்.

யோபு 10:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது, நான் என் துயரத்திற்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனவேதனையினாலே பேசுவேன். நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்; நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன். நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாகப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? சரீரக்கண்கள் உமக்கு உண்டோ? மனிதன் பார்க்கிறவிதமாகப் பார்க்கிறீரோ? நீர் என் அக்கிரமத்தைத் தேடிப்பார்த்து, என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு, உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருடங்கள் ஒரு மனிதனுடைய வாழ்நாளைப்போலவும் இருக்கிறதோ? நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னை விடுவிக்கிறவன் இல்லை.

யோபு 10:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

“நான் என் சொந்த வாழ்க்கையை வெறுக்கிறேன். எனவே நான் தாராளமாக முறையிடுவேன். என் ஆத்துமா கசந்துபோயிற்று, எனவே நான் இப்போது பேசுவேன். நான் தேவனிடம், ‘என்னைக் குற்றம்சாட்டாதேயும்! நான் செய்தவற்றை எனக்குக் கூறும், எனக்கெதிராக உமது காரியம் என்ன?’ என்பேன். ‘தேவனே, என்னைத் துன்புறுத்துவது உமக்கு மகிழ்ச்சித் தருகிறதா? நீர் உண்டாக்கினதைக் குறித்து நீர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது தீயோர் செய்த திட்டங்களில் நீர் மகிழ்ச்சிக்கொள்கிறீரா? தேவனே, உமக்கு மனிதரின் கண்கள் உண்டா? மனிதர் காண்பதுபோல் நீர் காரியங்களைப் பார்க்கிறீரா? எங்களைப்போல உமது வாழ்க்கையும் குறுகியதா? மனிதனின் வாழ்க்கையைப் போல் உமது வாழ்க்கையும் குறுகியதா? இல்லை! எனவே அது எப்படிப்பட்டது என்பதை எவ்வாறு அறிவீர்? எனது தவறுகளைப் பார்க்கிறீர், என் பாவங்களைத் தேடுகிறீர். நான் களங்கமற்றவன் என்பதை நீர் அறிந்திருந்தும் உமது ஆற்றலிலிருந்து தப்பித்துக்கொள்ள வழியில்லை!

யோபு 10:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன். நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும்; நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன். நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? மாம்சக்கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ? நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி, என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு, உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ? நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்