யோவான் 8:1-27

யோவான் 8:1-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார். அதிகாலையிலே அவர் மீண்டும் ஆலய முற்றத்திற்கு வந்தார். மக்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கூடிவந்தனர். இயேசு அவர்களுக்கு போதிப்பதற்காக உட்கார்ந்தார். அப்பொழுது மோசேயின் சட்ட ஆசிரியரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அங்கு கொண்டுவந்தார்கள். அவர்கள் அவளை அங்கிருந்த எல்லோருக்கும் நடுவாக நிறுத்தினார்கள். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசேயின் சட்டத்தில் மோசே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்கள். இயேசுவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரும்படி, ஒரு சூழ்ச்சியாக அவர்கள் இந்தக் கேள்வியை கேட்டார்கள். ஆனால் இயேசுவோ, குனிந்து தமது விரலினால் தரையிலே எழுதத் தொடங்கினார். அவர்கள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததினால், இயேசு நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் யாராவது பாவமில்லாதவன் இருந்தால், அவன் முதலாவதாக இவள்மேல் கல்லெறியட்டும்” என்றார். இயேசு மீண்டும் குனிந்து தரையில் எழுதினார். அப்பொழுது, இதைக் கேட்டவர்களில், முதியோர் தொடங்கி சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போகத் தொடங்கினார்கள். இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண்ணும் அங்கே நடுவே நின்றுகொண்டிருந்தாள். இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “மகளே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?” என்று கேட்டார். அதற்கு அவள், “இல்லை ஆண்டவரே” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “நானும் உன்னை குற்றவாளியாகத் தீர்க்கமாட்டேன். இப்பொழுது நீ போகலாம், இனிப் பாவம் செய்யாதே” என்றார். மீண்டும் இயேசு மக்களுடன் பேசத்தொடங்கி, “நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் ஒருபோதும் இருளில் நடக்கமாட்டான். ஜீவ வெளிச்சம் அவர்களுடன் இருக்கும்” என்றார். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “இதோ பார், நீயே உன்னைக் குறித்த சாட்சி கொடுக்கிறாயே; உனது சாட்சி உண்மையல்ல” என்றார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “நானே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தாலும், எனது சாட்சி உண்மையானதே. ஏனெனில் நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், நான் எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறியாதிருக்கிறீர்கள். நீங்கள் மனிதருக்கேற்றபடி தீர்ப்புச் செய்கிறீர்கள்; நானோ ஒருவருக்கும் தீர்ப்புச் செய்வதில்லை. நான் தீர்ப்பு செய்தாலும், எனது தீர்ப்பு உண்மையானதாகவே இருக்கும். ஏனெனில் நான் தனியாக தீர்ப்பு கொடுப்பதில்லை. என்னை அனுப்பிய என் பிதாவும் என்னுடனேகூட இருக்கிறார். இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது என்று உங்கள் சொந்த சட்டத்திலே எழுதியிருக்கிறது. நான் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறேன்; என்னை அனுப்பிய பிதாவே எனது இரண்டாவது சாட்சியாயிருக்கிறார்” என்றார். அப்பொழுது அவர்கள் அவரிடம், “உமது பிதா எங்கே?” என்றார்கள். அதற்கு இயேசு, “என்னையோ, என் பிதாவையோ நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் என்னை அறிந்தால், என் பிதாவையுங்கூட அறிந்திருப்பீர்கள்” என்றார். இயேசு ஆலயப் பகுதியில் போதிக்கும்போது, காணிக்கை போடுகிற இடத்தின் அருகே நின்று, இந்த வார்த்தைகளைப் பேசினார். ஆனால் ஒருவனும் அவரைக் கைதுசெய்யவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை. மீண்டும் இயேசு அவர்களிடம், “நான் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாவத்திலேயே சாவீர்கள். நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது” என்றார். அப்பொழுது யூதர்கள், “இவன் தற்கொலை செய்துகொள்ள போகிறானா? அதனால்தான், ‘நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்கிறானோ!” என்று கேட்டார்கள். இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள்; நான் மேலேயிருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள்; நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல. நீங்கள் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள்” என்றார். அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நீர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு பதிலாக, “அதைத்தான் நான் தொடக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொல்கிறேனே” என்று இயேசு சொல்லி, “உங்களைப் பற்றிச் சொல்லவும், நியாயத்தீர்ப்பு அளிக்கவும் என்னிடம் அநேக காரியங்கள் இருக்கிறது. ஆனால் என்னை அனுப்பியவரிடமிருந்து கேட்டதை மட்டும் நான் உலகத்திற்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்” என்றார். இயேசு பிதாவாகிய இறைவனைக் குறித்தே பேசுகிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.

யோவான் 8:1-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு ஒலிவமலைக்குப் போனார். மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார். அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிதர்களும், பரிசேயர்களும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளைக் கொடுத்திருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாக்குவதற்கு, அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் தொடர்ந்து அவரைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக்கேட்டு, தங்களுடைய மனச்சாட்சியில் உணர்த்தப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராக போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த பெண் நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த பெண்ணைத்தவிர வேறொருவரையும் காணாமல்: பெண்ணே, உன்மேல் குற்றஞ்சுமத்தினவர்கள் எங்கே? ஒருவன்கூட உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்றார். மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார். அப்பொழுது பரிசேயர்கள் அவரைப் பார்த்து: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கே இருந்து வருகிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் மனித வழக்கத்திற்கு ஏற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை; நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்; ஏனென்றால், நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். இரண்டு பேருடைய சாட்சி உண்மை என்று உங்களுடைய நியாயப்பிரமாணத்திலும் எழுதி இருக்கிறதே. நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாக இருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுக்கிறார் என்றார். அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு மறுமொழியாக: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார். தேவாலயத்திலே இயேசு உபதேசம் செய்கிறபோது, காணிக்கைப்பெட்டி இருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை. இயேசு மறுபடியும் அவர்களைப் பார்த்து: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள்; நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்றார். அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்கிறானே, தன்னைத்தானே கொலைசெய்து கொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள். அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கீழேயிருந்து உண்டானவர்கள், நான் மேலேயிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் இல்லை. ஆகவே, நீங்கள் உங்களுடைய பாவங்களில் மரித்துப்போவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் ஆரம்ப முதலாக உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர் தான். உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்கள் இருக்கிறது; என்னை அனுப்பினவர் சத்தியமானவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளை உலகத்திற்குச் சொல்லுகிறேன் என்றார். பிதாவைக்குறித்துப் பேசினார் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.

யோவான் 8:1-27 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவோ ஒலிவ மலைக்குப் போனார். மறுநாள் அதிகாலையில் அவர் திரும்பவும் தேவாலயத்துக்குப் போனார். அனைவரும் இயேசுவிடம் வந்தனர். இயேசு உட்கார்ந்து மக்களுக்கு உபதேசித்தார். வேதபாரகரும், பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். அவள் விபசாரம் செய்ததற்காகப் பிடிக்கப்பட்டவள். அவளை மக்களுக்கு முன்னால் நிற்கும்படி யூதர்கள் வற்புறுத்தினர். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாக உறவுகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டாள். மோசேயின் சட்டப்படி இவ்வாறு பாவம் செய்கிற ஒவ்வொரு பெண்ணையும் கல் எறிந்து கொல்லவேண்டும். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீர் சொல்கிறீர்?” என்று கேட்டனர். யூதர்கள் இந்தக் கேள்வியை இயேசுவைச் சோதிப்பதற்காகக் கேட்டனர். இயேசுவின் மீது ஏதாவது குற்றம் சுமத்தவே அவர்கள் விரும்பினர். ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரலால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார். பிறகு இயேசு மறுபடியும் கீழே குனிந்து தரையில் ஏதோ எழுத ஆரம்பித்தார். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் ஒவ்வொருவராக விலகிப் போயினர். முதலில் முதியவர்கள் விலகினர்; பிறகு மற்றவர்கள் விலகினர். அந்தப் பெண்ணோடு இயேசு மட்டும் தனியாக விடப்பட்டார். அவள் அவருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தாள். இயேசு அவளை ஏறிட்டுப்பார்த்து, “பெண்ணே, எல்லோரும் போய்விட்டார்கள். ஒருவனும் உன்னைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ஆண்டவரே, எவரும் என்னைத் தண்டனைக்குட்படுத்தித் தீர்ப்பளிக்கவில்லை” என்றாள். பிறகு இயேசு, “நானும் உனக்குத் தீர்ப்பளிக்கவில்லை. இப்பொழுது நீ போகலாம், ஆனால் மறுபடியும் பாவம் செய்யாதே” என்றார். மீண்டும் இயேசு மக்களோடு பேசினார். அவர், “நானே உலகத்துக்கு ஒளி. என்னைப் பின்பற்றி வருகிற எவனும் ஒருபோதும் இருளில் வாழமாட்டான். அவன் வாழ்வைத் தருகிற ஒளியைப் பெறுவான்” என்றார். ஆனால் பரிசேயர்கள் இயேசுவிடம், “உன்னைக்குறித்து நீ பேசும்போது நீ சொல்வதை உண்மையென்று நீ மாத்திரமே கூறுகிறாய். ஆகையால் நீ சொல்லுகின்றவற்றை நாங்கள் ஒத்துக் கொள்ளமுடியாது” என்றனர். அதற்கு இயேசு, “ஆம், என்னைப்பற்றி நானே பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்லுகின்றவற்றை மக்கள் நம்ப முடியும். ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேன் என்பது எனக்குத் தெரியும். அதோடு எங்கே போகிறேன் என்றும் எனக்குத் தெரியும். நான் உங்களைப் போன்றவன் இல்லை. நான் எங்கிருந்து வந்தேன் என்றும் எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது. சாதாரணமாக ஒருவனைப் பார்த்து கணிக்கிற விதத்திலேயே நீங்கள் என்னைப்பற்றி கணிக்கிறீர்கள். நான் எவரைப்பற்றியும் கணிப்பதில்லை. ஆனால் நான் கணிக்கும்போது என் கணிப்பு உண்மையுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தீர்ப்பளிக்கும் காலத்தில் நான் தனியாளாக இல்லை. என்னை அனுப்பிய என் பிதா என்னோடு இருக்கிறார். இரண்டு சாட்சிகள் ஒரே உண்மையைச் சொன்னால் உங்கள் சட்டம் உண்மைதான் என்று ஏற்றுக்கொள்கிறது. நானும் என்னைப்பற்றி சொல்லுகிற ஒரு சாட்சி, அத்துடன் என்னை அனுப்பிய என் பிதாவும் எனது இன்னுமொரு சாட்சி” என்றார். மக்கள் அவரிடம் “உன் பிதா எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்கள். “நீங்கள் என்னைப் பற்றியும் என் பிதாவைப்பற்றியும் அறியமாட்டீர்கள். ஆனால் நீங்கள் என்னை அறிந்துகொண்டால் என் பிதாவையும் அறிந்துகொள்வீர்கள்” என்று பதிலுரைத்தார். இயேசு தேவாலயத்தில் உபதேசம் செய்யும்பொழுது இவற்றைச் சொன்னார். எல்லோரும் பணம் செலுத்துகிற இடத்தில் இயேசு இருந்தார். ஆனால் எவரும் அவரைக் கைதுசெய்யவில்லை. இயேசுவிற்கு அந்த வேளை இன்னும் வரவில்லை. மீண்டும் இயேசு மக்களிடம், “நான் உங்களை விட்டுப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் உங்கள் பாவங்களோடு சாவீர்கள். நான் போகிற இடத்துக்கு உங்களால் வரமுடியாது” என்றார். எனவே யூதர்கள் தங்களுக்குள், “இயேசு தன்னைத்தானே கொன்றுகொள்வாரா? அதனால்தான் நான் போகிற இடத்துக்கு உங்களால் வர முடியாது என்று கூறினாரா?” என்று கேட்டுக்கொண்டனர். அந்த யூதர்களைப் பார்த்து இயேசு, “நீங்கள் கீழே இருந்து வந்தவர்கள். ஆனால் நான் மேலே இருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்துக்கு உரியவர்கள். ஆனால் நான் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன். நீங்கள் உங்கள் பாவங்களிலேயே மரிப்பீர்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன். ஆம். நானே அவர் என்பதை நம்பாவிட்டால் உங்கள் பாவங்களோடேயே நீங்கள் மரணமடைவீர்கள்.” அதற்கு யூதர்கள், “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். இயேசுவோ அவர்களிடம், “நான் ஆரம்பத்திலேயே உங்களுக்குச் சொல்லியவர்தான். உங்களைப்பற்றிச் சொல்ல என்னிடம் நிறைய செய்திகள் உள்ளன. நான் உங்களை நியாயம் தீர்க்கவும் முடியும். என்னை அனுப்பினவரிடமிருந்து கேட்டவற்றையே நான் மக்களுக்குச் சொல்கிறேன். அவர் உண்மையைப் பேசுகிறவர்” என்றார். இயேசு யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று யூதர்கள் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தனர். இயேசு அவர்களிடம் பிதாவைப்பற்றி கூறிக்கொண்டிருந்தார்.

யோவான் 8:1-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு ஒலிவமலைக்குப் போனார். மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையும் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள். நீங்கள் மாம்சத்துக்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார். அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார். தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார். அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே, தன்னைத்தான் கொலை செய்துகொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான். உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேகக் காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார். பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.