இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார்.
அதிகாலையிலே அவர் மீண்டும் ஆலய முற்றத்திற்கு வந்தார். மக்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கூடிவந்தனர். இயேசு அவர்களுக்கு போதிப்பதற்காக உட்கார்ந்தார். அப்பொழுது மோசேயின் சட்ட ஆசிரியரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அங்கு கொண்டுவந்தார்கள். அவர்கள் அவளை அங்கிருந்த எல்லோருக்கும் நடுவாக நிறுத்தினார்கள். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசேயின் சட்டத்தில் மோசே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்கள். இயேசுவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரும்படி, ஒரு சூழ்ச்சியாக அவர்கள் இந்தக் கேள்வியை கேட்டார்கள்.
ஆனால் இயேசுவோ, குனிந்து தமது விரலினால் தரையிலே எழுதத் தொடங்கினார். அவர்கள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததினால், இயேசு நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் யாராவது பாவமில்லாதவன் இருந்தால், அவன் முதலாவதாக இவள்மேல் கல்லெறியட்டும்” என்றார். இயேசு மீண்டும் குனிந்து தரையில் எழுதினார்.
அப்பொழுது, இதைக் கேட்டவர்களில், முதியோர் தொடங்கி சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போகத் தொடங்கினார்கள். இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண்ணும் அங்கே நடுவே நின்றுகொண்டிருந்தாள். இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “மகளே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?” என்று கேட்டார்.
அதற்கு அவள், “இல்லை ஆண்டவரே” என்றாள்.
அப்பொழுது இயேசு அவளிடம், “நானும் உன்னை குற்றவாளியாகத் தீர்க்கமாட்டேன். இப்பொழுது நீ போகலாம், இனிப் பாவம் செய்யாதே” என்றார்.
மீண்டும் இயேசு மக்களுடன் பேசத்தொடங்கி, “நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் ஒருபோதும் இருளில் நடக்கமாட்டான். ஜீவ வெளிச்சம் அவர்களுடன் இருக்கும்” என்றார்.
அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “இதோ பார், நீயே உன்னைக் குறித்த சாட்சி கொடுக்கிறாயே; உனது சாட்சி உண்மையல்ல” என்றார்கள்.
இயேசு அதற்குப் பதிலாக, “நானே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தாலும், எனது சாட்சி உண்மையானதே. ஏனெனில் நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், நான் எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறியாதிருக்கிறீர்கள். நீங்கள் மனிதருக்கேற்றபடி தீர்ப்புச் செய்கிறீர்கள்; நானோ ஒருவருக்கும் தீர்ப்புச் செய்வதில்லை. நான் தீர்ப்பு செய்தாலும், எனது தீர்ப்பு உண்மையானதாகவே இருக்கும். ஏனெனில் நான் தனியாக தீர்ப்பு கொடுப்பதில்லை. என்னை அனுப்பிய என் பிதாவும் என்னுடனேகூட இருக்கிறார். இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது என்று உங்கள் சொந்த சட்டத்திலே எழுதியிருக்கிறது. நான் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறேன்; என்னை அனுப்பிய பிதாவே எனது இரண்டாவது சாட்சியாயிருக்கிறார்” என்றார்.
அப்பொழுது அவர்கள் அவரிடம், “உமது பிதா எங்கே?” என்றார்கள்.
அதற்கு இயேசு, “என்னையோ, என் பிதாவையோ நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் என்னை அறிந்தால், என் பிதாவையுங்கூட அறிந்திருப்பீர்கள்” என்றார். இயேசு ஆலயப் பகுதியில் போதிக்கும்போது, காணிக்கை போடுகிற இடத்தின் அருகே நின்று, இந்த வார்த்தைகளைப் பேசினார். ஆனால் ஒருவனும் அவரைக் கைதுசெய்யவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.
மீண்டும் இயேசு அவர்களிடம், “நான் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாவத்திலேயே சாவீர்கள். நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது” என்றார்.
அப்பொழுது யூதர்கள், “இவன் தற்கொலை செய்துகொள்ள போகிறானா? அதனால்தான், ‘நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்கிறானோ!” என்று கேட்டார்கள்.
இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள்; நான் மேலேயிருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள்; நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல. நீங்கள் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள்” என்றார்.
அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நீர் யார்?” என்று கேட்டார்கள்.
அதற்கு பதிலாக, “அதைத்தான் நான் தொடக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொல்கிறேனே” என்று இயேசு சொல்லி, “உங்களைப் பற்றிச் சொல்லவும், நியாயத்தீர்ப்பு அளிக்கவும் என்னிடம் அநேக காரியங்கள் இருக்கிறது. ஆனால் என்னை அனுப்பியவரிடமிருந்து கேட்டதை மட்டும் நான் உலகத்திற்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்” என்றார்.
இயேசு பிதாவாகிய இறைவனைக் குறித்தே பேசுகிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.