யோவான் 4:7-30
யோவான் 4:7-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத் தா என்றார். யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார். அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.
யோவான் 4:7-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவ்வேளையில் சமாரிய பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ளுவதற்கு வந்தாள். இயேசு அவளிடம், “நீ எனக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் தருவாயா?” என்று கேட்டார். அப்பொழுது அவருடைய சீடர்கள் உணவு வாங்கும்படி பட்டணத்திற்கு போயிருந்தார்கள். அந்தச் சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் ஒரு யூதன், நானோ ஒரு சமாரியப் பெண். என்னிடம் நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?” என்று கேட்டாள். ஏனெனில் யூதர் சமாரியருடன் பழகுவதில்லை. இயேசு அவளுக்குப் பதிலாக, “நீ இறைவனுடைய வரத்தையும், உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கிற நான் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே என்னிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய். நான் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பேன்” என்றார். அதற்கு அந்தப் பெண், “ஐயா, தண்ணீர் மொள்ளுவதற்கு உம்மிடம் ஒன்றும் இல்லை; கிணறும் ஆழமாய் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஜீவத்தண்ணீர் கிடைக்கும்? நம்முடையத் தந்தை யாக்கோபு எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தாரே; இந்த கிணற்றிலிருந்து அவரும் அவருடைய பிள்ளைகளும் தண்ணீர் குடித்து, தங்கள் ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தார்களே. எங்கள் தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ?” என்று கேட்டாள். இயேசு அதற்குப் பதிலாக, “இந்தத் தண்ணீரைக் குடிக்கிற ஒவ்வொருவரும் மீண்டும் தாகமடைவார்கள். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார். அந்தப் பெண் அவரிடம், “ஐயா, அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும்; அப்பொழுது நான் இனிமேல் தாகமடைய மாட்டேன். தண்ணீர் மொள்ளுவதற்கு இங்கே வரவேண்டிய அவசியமும் எனக்கு இராது” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “நீ போய் உன் கணவனை கூட்டிக்கொண்டு வா” என்றார். “அதற்கு அவள், எனக்கு கணவன் இல்லை,” என்றாள். இயேசு அவளிடம், “எனக்குக் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான். ஐந்து கணவன்மார் உனக்கு இருந்தார்களே, இப்பொழுது உன்னுடன் இருக்கிறவன் உன்னுடைய கணவன் அல்ல. நீ சொன்னது உண்மைதான்” என்றார். அப்பொழுது அந்தப் பெண், “ஐயா, நீர் ஒரு இறைவாக்கினர் என்று நான் கண்டுகொண்டேன். எங்கள் தந்தையர் இங்கிருக்கும் மலையிலே இறைவனை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களான நீங்களோ, வழிபட வேண்டிய இடம் எருசலேமிலேயே இருக்கிறது என்று சொல்கிறீர்கள்” என்றாள். அதற்கு இயேசு: “அம்மா, நீ என்னை நம்பு; நீங்கள் பிதாவை இந்த மலையிலும், எருசலேமிலும் வழிபடாத காலம் வருகிறது. சமாரியராகிய நீங்களோ அறியாததையே ஆராதிக்கிறீர்கள்; யூதர்களாகிய நாங்களோ அறிந்திருப்பவரையே ஆராதிக்கிறோம். ஏனெனில் யூதரிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது. ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. உண்மையாய் ஆராதிக்கிறவர்கள், அப்பொழுது பிதாவை ஆவியிலும் உண்மையிலும் ஆராதிப்பார்கள். ஏனெனில் அவ்விதம் தன்னை ஆராதிக்கிறவர்களையே பிதா தேடுகிறார். இறைவன் ஆவியாயிருக்கிறார். அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியிலும் உண்மையிலும் அவரை ஆராதிக்க வேண்டும்” என்றார். அந்தப் பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்பட்ட மேசியா வருகிறார். அவர் வரும்போது எல்லாவற்றையும் அவர் எங்களுக்கு விளக்கிக் கூறுவார் என்று எனக்குத் தெரியும்” என்றாள். அதற்கு இயேசு அவளிடம், “உன்னுடன் பேசுகிற நானே அவர்” என்று அறிவித்தார். அப்பொழுது இயேசுவின் சீடர்கள் திரும்பிவந்து, அவர் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் யாரும் அவரிடம், “உமக்கு என்ன தேவைப்படுகிறது? நீர் ஏன் அவளுடன் பேசுகிறீர்?” என்று கேட்கவில்லை. அப்பொழுது அந்தப் பெண் தண்ணீர் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு, பட்டணத்திற்குள்ளே போய் அங்குள்ள மக்களிடம், “வாருங்கள், நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒருவரை வந்து பாருங்கள். ஒருவேளை அவர்தான் கிறிஸ்துவோ?” என்றாள். அவர்கள் பட்டணத்தைவிட்டு வெளியேறி இயேசு இருந்த இடத்திற்கு வந்தார்கள்.
யோவான் 4:7-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள். அப்பொழுது சமாரியா தேசத்தாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளைப் பார்த்து: தாகத்திற்குத் தா என்றார். யூதர்கள் சமாரியருடனே எந்தத் தொடர்பும் வைக்காதவர்களானபடியால், சமாரிய பெண் அவரைப் பார்த்து: நீர் யூதனாக இருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். அதற்கு அந்த பெண்: ஆண்டவரே, எடுத்துக்கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாக இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கும். இந்தக் கிணற்றை எங்களுக்குக் கொடுத்த நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரும் அவருடைய பிள்ளைகளும், அவருடைய மிருகஜீவன்களும் இதிலே குடித்தது என்றாள். இயேசு அவளுக்கு மறுமொழியாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, எனக்குத் தாகம் உண்டாகாமலும், நான் இங்கே தண்ணீர் எடுக்க வராமலும் இருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார். அதற்கு அந்த பெண்: எனக்குப் கணவன் இல்லை என்றாள். இயேசு அவளைப் பார்த்து: எனக்குப் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான். எப்படியென்றால், ஐந்து கணவர்கள் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவன் இல்லை, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். அப்பொழுது அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று பார்க்கிறேன். எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள். அதற்கு இயேசு: பெண்ணே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை ஆராதிக்கும்காலம் வருகிறது. நீங்கள் அறியாததை ஆராதிக்கிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதை ஆராதிக்கிறோம்; ஏனென்றால், இரட்சிப்பு யூதர்கள்வழியாக வருகிறது. உண்மையாக ஆராதிக்கிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் ஆராதிக்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார். அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். அந்தநேரத்தில் அவருடைய சீடர்கள் வந்து, அவர் பெண்ணுடனே பேசுகிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் என்ன வேண்டும் என்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீர் என்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. அப்பொழுது அந்த பெண், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேப்போய், மக்களைப் பார்த்து: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார்; அவரை வந்துபாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.
யோவான் 4:7-30 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு சமாரியப் பெண் தண்ணீரெடுப்பதற்காக அக்கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம், “தயவுசெய்து நான் குடிப்பதற்குத் தண்ணீர் கொடு” என்று கேட்டார். (இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது இது நடந்தது.) “குடிப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்பதை எண்ணி எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஒரு யூதர். நானோ சமாரியப் பெண்” என்று அவள் பதிலுரைத்தாள். (ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களோடு எப்பொழுதும் நட்புடன் இருப்பதில்லை.) “தேவன் கொடுப்பவற்றைப்பற்றி நீ அறியவில்லை. குடிக்கத் தண்ணீர் கேட்கிற நான் யாரென்று உனக்குத் தெரியாது. இவற்றைப்பற்றி நீ அறிந்தால் நீ என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். ஜீவத் தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன்” என்றார் இயேசு. “ஐயா, ஜீவத் தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள்? இந்தக் கிணறோ ஆழமாக இருக்கிறது. இதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும் உங்களிடம் எதுவும் இல்லையே! நீங்கள் எமது மூதாதையரான யாக்கோபை விடப் பெரியவரா? அவர்தான் எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தார். அவரும் இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார். அத்துடன் அவரது பிள்ளைகளும் மிருகங்களும் இதிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார்கள்” என்று அந்தப் பெண் சொன்னாள். “இந்த தண்ணீரைக் குடிக்கிறவர்களுக்கு மீண்டும் தாகம் எடுக்கும். ஆனால் நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிப்பவர்களுக்கோ மறுபடியும் தாகம் எடுப்பதில்லை. என்னால் கொடுக்கப்படுகிற தண்ணீர், அதைக் குடிப்பவனுக்குள் நீரூற்றாகப் பெருக்கெடுக்கும். அது அவனுக்கு எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கையைத் தரும்” என்று இயேசு பதிலுரைத்தார். “ஐயா! எனக்கு அந்தத் தண்ணீரை வழங்குங்கள். அப்போது ஒருபோதும் மறுபடியும் எனக்குத் தாகம் எடுக்காது. மிகுதியாகத் தண்ணீரெடுக்க இங்கே நான் மீண்டும் வர வேண்டியதும் இராது” எனக் கூறினாள் அந்தப் பெண். “போ, உன் கணவனோடு இங்கே திரும்ப வா” என்றார் இயேசு. “ஆனால், எனக்குக் கணவன் இல்லையே” என்றாள் அப்பெண். “உனக்குக் கணவன் இல்லையென்று நீ சொல்வது சரிதான். உண்மையில் உனக்கு ஐந்து கணவர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் நீ இப்பொழுது யாரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாயோ அவன் உன் கணவனல்ல. நீ என்னிடம் உண்மையைச் சொன்னாய்” என்றார் இயேசு. “உம்மை நான் தீர்க்கதரிசியாகக் காண்கிறேன். எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்” என்றாள் அந்தப் பெண். “பெண்ணே! என்னை நம்பு. இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பிதாவை (தேவனை) வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. சமாரியர்களாகிய நீங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். யூதர்களாகிய நாங்கள், எங்களால் வணங்கப்படுபவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். யூதர்களிடமிருந்தே இரட்சிப்பு வருகின்றது. உண்மையாக வழிபடுகிறவர்கள் (தேவனை) ஆவியோடும் உண்மையோடும் வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது. பிதாவும் தம்மை வழிபடுகிறவர்கள் இத்தகைய மக்களாக இருக்க விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார். ஆகையால் தேவனை வழிபடுகிற மக்கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை வழிபடுதல் வேண்டும்” என்றார் இயேசு. “கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார்” என்றாள் அப்பெண். பிறகு இயேசு, “இப்பொழுது அவர்தான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். நான்தான் மேசியா” என்றார். அப்பொழுது இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் இருந்து திரும்பி வந்தனர். இயேசு ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். ஆனால் எவரும், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றோ “ஏன் நீங்கள் அவளோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றோ கேட்கவில்லை. பிறகு அந்தப் பெண் தன் தண்ணீர்க் குடத்தை விட்டுவிட்டு நகருக்குத் திரும்பப் போனாள். அங்கே அவள் மக்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். ஒரு வேளை அவர் கிறிஸ்துவாக இருக்கலாம்” என்றாள். ஆகையால் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி இயேசுவைக் காண வந்தனர்.