யோவா 4:7-30

யோவா 4:7-30 IRVTAM

அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள். அப்பொழுது சமாரியா தேசத்தாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளைப் பார்த்து: தாகத்திற்குத் தா என்றார். யூதர்கள் சமாரியருடனே எந்தத் தொடர்பும் வைக்காதவர்களானபடியால், சமாரிய பெண் அவரைப் பார்த்து: நீர் யூதனாக இருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். அதற்கு அந்த பெண்: ஆண்டவரே, எடுத்துக்கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாக இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கும். இந்தக் கிணற்றை எங்களுக்குக் கொடுத்த நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரும் அவருடைய பிள்ளைகளும், அவருடைய மிருகஜீவன்களும் இதிலே குடித்தது என்றாள். இயேசு அவளுக்கு மறுமொழியாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, எனக்குத் தாகம் உண்டாகாமலும், நான் இங்கே தண்ணீர் எடுக்க வராமலும் இருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார். அதற்கு அந்த பெண்: எனக்குப் கணவன் இல்லை என்றாள். இயேசு அவளைப் பார்த்து: எனக்குப் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான். எப்படியென்றால், ஐந்து கணவர்கள் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவன் இல்லை, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். அப்பொழுது அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று பார்க்கிறேன். எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள். அதற்கு இயேசு: பெண்ணே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை ஆராதிக்கும்காலம் வருகிறது. நீங்கள் அறியாததை ஆராதிக்கிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதை ஆராதிக்கிறோம்; ஏனென்றால், இரட்சிப்பு யூதர்கள்வழியாக வருகிறது. உண்மையாக ஆராதிக்கிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் ஆராதிக்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார். அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். அந்தநேரத்தில் அவருடைய சீடர்கள் வந்து, அவர் பெண்ணுடனே பேசுகிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் என்ன வேண்டும் என்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீர் என்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. அப்பொழுது அந்த பெண், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேப்போய், மக்களைப் பார்த்து: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார்; அவரை வந்துபாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.

யோவா 4:7-30 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்