யோவான் 4:31-54
யோவான் 4:31-54 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார். அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது. நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார். நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாள் அங்கே தங்கினார். அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார். ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார். அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள். பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜூரம் அவனை விட்டது என்றார்கள். உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னமணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்த பின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.
யோவான் 4:31-54 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இதற்கிடையில் அவருடைய சீடர்கள், “போதகரே, சாப்பிடுங்கள்” என்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத உணவு எனக்கு இருக்கிறது” என்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள், “யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து, அவருடைய வேலையை முடிப்பதே எனது உணவு. ‘இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. அதற்குப் பின்பு அறுவடை வந்துவிடும்’ என்று நீங்கள் சொல்வதில்லையா? நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்கள் கண்களைத் திறந்து வயல்களை நோக்கிப்பாருங்கள்! அவை விளைந்து அறுவடைக்கு ஆயத்தமாக இருக்கின்றன. இப்பொழுதும்கூட அறுவடை செய்பவன் கூலியைப் பெறுகிறான். இப்பொழுதே அவன் நித்திய ஜீவனுக்கான விளைச்சலை அறுவடை செய்கிறான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கிறவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். இவ்விதம், ‘ஒருவன் விதைக்கிறான், இன்னொருவன் அறுவடை செய்கிறான்’ என்ற பழமொழியும் உண்மையாகிறது. நீங்கள் வேலைசெய்து விளைவிக்காததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் கடுமையாய் உழைத்தார்கள். அவர்களுடைய உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்தீர்கள்” என்றார். அந்தப் பட்டணத்திலிருந்த சமாரியர் அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள். ஏனெனில், “நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார்” என்று இயேசுவைக்குறித்து அந்தச் சமாரியப் பெண் சாட்சி கூறியிருந்தாள். எனவே அந்தச் சமாரியர் அவரிடம், தங்களுடன் வந்து தங்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கினார். அவருடைய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் அதிகமானோர் விசுவாசிகளானார்கள். அவர்கள் அந்தப் பெண்ணிடம், “நாங்கள் அவரை நம்புவது நீ சொன்னதைக் கேட்டுமட்டுமல்ல; இப்பொழுது நாங்களே அவர் சொன்னவற்றைக் கேட்டோம். இவர் உண்மையிலேயே உலகத்தின் இரட்சகர் என்பதை அறிந்துகொண்டோம்” என்றார்கள். இரண்டு நாட்களுக்குப்பின் இயேசு கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒரு இறைவாக்கினனுக்கு தனது சொந்த நாட்டிலே மதிப்பு இல்லை என்று இயேசு தாமே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். இயேசு கலிலேயாவுக்கு வந்தபோது, கலிலேயர்கள் அவரை வரவேற்றார்கள். பஸ்கா என்ற பண்டிகையின்போது அவர் எருசலேமில் செய்ததையெல்லாம் கலிலேயர் கண்டிருந்தார்கள். ஏனெனில் பண்டிகையின்போது அவர்களும் அங்கே இருந்தார்கள். இயேசு மீண்டும் ஒருமுறை கலிலேயாவிலுள்ள கானாவூருக்குச் சென்றார். அங்குதான் அவர் தண்ணீரைத் திராட்சைரசமாக மாற்றினார். அங்கே கப்பர்நகூமிலே இருந்த ஒரு அரச அதிகாரியின் மகன் நோயுற்றுப் படுத்திருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று இந்த அதிகாரி கேள்விப்பட்டதும், அவரிடத்திற்குப் போய், மரணத் தருவாயில் இருக்கும் தனது மகனை இயேசு, வந்து குணமாக்க வேண்டுமென்று அவரைக் கெஞ்சினான். இயேசு அவனிடம், “நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டாலொழிய, ஒருபோதும் விசுவாசிக்கமாட்டீர்கள்” என்றார். அதற்கு அந்த அரச அதிகாரி, “ஐயா, எனது பிள்ளை சாகுமுன்னே வாரும்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “நீ திரும்பிப்போ. உன் மகன் உயிர்வாழ்வான்” என்றார். அவன் இயேசுவின் வார்த்தையை விசுவாசித்து புறப்பட்டுப் போனான். அவன் வழியில் போய்க் கொண்டிருக்கும்போதே, அவனுடைய வேலைக்காரர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனுடைய மகன் பிழைத்திருக்கிறான் என்ற செய்தியை அறிவித்தார்கள். தனது மகன் சுகமடைந்த நேரத்தைப்பற்றி அவன் விசாரித்தபோது, அவர்கள் அவனிடம், “நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு அவனுக்கிருந்த காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். இயேசு தன்னிடம், “உனது மகன் உயிர்வாழ்வான்” என்று தனக்குச் சொன்ன நேரம், சரியாக அதே நேரம்தான் என்று தகப்பன் புரிந்து கொண்டான். எனவே அவனும், அவனுடைய குடும்பத்தாரும் இயேசுவை விசுவாசித்தார்கள். இது இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபின் செய்த இரண்டாவது அடையாளம் ஆகும்.
யோவான் 4:31-54 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்படி நடக்கும்போது சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். அதற்கு அவர்: நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத ஒரு உணவு எனக்கு இருக்கிறது என்றார். அப்பொழுது சீடர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்கு உணவுகொண்டுவந்திருப்பானோ என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படிசெய்து அவருடைய செயல்களை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று உங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது. நீங்கள் பாடுபட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பாடுபட்டார்கள், அவர்கள் பாடுபட்டத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார். நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த பெண்ணின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களானார்கள். சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார். அப்பொழுது அவருடைய உபதேசத்தின் மூலம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, அந்த பெண்ணைப் பார்த்து: உன் வார்த்தையினாலே இல்லை, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் உண்மையாகவே கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவிற்குப் போனார். ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே மரியாதை இல்லை என்று இயேசு தாமே சொல்லியிருந்தார். அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குச் சென்றிருந்தார்கள். பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் அதிகாரிகளில் ஒருவனுடைய மகன் வியாதியாக இருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து, கலிலேயாவிற்கு வந்தார் என்று அந்த மனிதன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரணவேதனையில் இருக்கிறதினால், அவனைக் குணமாக்குவதற்கு வரவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீங்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் பார்க்காவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். அதற்கு ராஜாவின் அதிகாரி: ஆண்டவரே, என் பிள்ளை இறப்பதற்குமுன்னே வரவேண்டும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் மகன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனிதன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான். அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். அப்பொழுது: எத்தனை மணிக்கு அவனுக்கு சுகம் உண்டானது என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் அவனை விட்டது என்றார்கள். உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னதும் அதே நேரம் என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் விசுவாசித்தார்கள். இயேசு யூதேயாவில் இருந்து கலிலேயாவிற்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாவது அற்புதம்.
யோவான் 4:31-54 பரிசுத்த பைபிள் (TAERV)
அந்தப் பெண் நகரத்திற்குள் இருந்தபோது இயேசுவின் சீஷர்கள், அவரை உண்ணும்படி வேண்டிக்கொண்டனர். ஆனால் இயேசுவோ, “என்னிடம் உண்பதற்கு உணவுண்டு. அதனைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றார். “ஏற்கெனவே வேறு யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்கள்” என்று சீஷர் கள் தமக்குள் பேசிக்கொண்டனர். “எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வதுதான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பதுதான் எனது உணவாக இருக்கிறது. நீங்கள் பயிரை நடும்போது ‘அறுவடைக்காக இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்’ என்று சொல்வீர்களல்லாவா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கண்களைத் திறவுங்கள், மக்களைப் பாருங்கள். அவர்கள் அறுவடைக்காகத் தயாராக இருக்கிற வயலைப்போன்று இருக்கிறார்கள். இப்பொழுதுகூட அறுவடை செய்கிறவன் சம்பளம் பெறுகிறான். அவன் தனது நித்திய வாழ்வுக்கு அனுகூலமாக அறுவடை செய்துகொள்கிறவன். ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனோடு அறுவடை செய்கிறவனும் மகிழ்ச்சியடைய இயலும். விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் இன்னொருவன் என்கிற பழமொழி இதனால் உண்மையாகிறது. நீங்கள் பாடுபட்டு விதைக்காத நிலத்தை அறுவடை செய்யுமாறு உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் பாடுபட்டார்கள். நீங்கள் அவர்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள்” என்று இயேசு கூறினார். அந்நகரத்தில் உள்ள ஏராளமான மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். அந்தப் பெண் இயேசுவைப்பற்றிக் கூறியவற்றால்தான் அவர்கள் அவரை நம்பினர். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொல்லி விட்டார்” என்று கூறி இருந்தாள். சமாரியர்கள் இயேசுவிடம் சென்றார்கள். இயேசுவை அவர்களோடு தங்கும்படி வேண்டினார்கள். ஆகையால் இயேசு அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கினார். மேலும் மிகுதியான மக்கள், இயேசு சொன்னவற்றின் மூலம் அவரை நம்பினர். அவர்கள், “முதலில் நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை நம்பினோம். ஆனால் இப்பொழுது நாங்களாகவே அவர் சொன்னவற்றைக் கேட்டதால் விசுவாசிக்கிறோம். அவர் உண்மையாகவே இந்த உலகத்தை இரட்சிக்கப்போகிறவர் என்று நம்புகிறோம்” என்று அந்தப் பெண்ணிடம் சொன்னார்கள். இரு நாட்கள் கழிந்ததும் இயேசு அந்நகரத்தை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார். (இயேசு ஏற்கெனவே “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் மதிக்கப்படமாட்டான்” என்று சொல்லியிருந்தார்) அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவரை நல்ல முறையில் வரவேற்றனர். அந்த மக்கள் இயேசு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் செய்தவற்றையெல்லாம் நேரில் கண்டவர்கள். அந்த மக்கள் அப்பண்டிகையில் கலந்துகொண்டவர்கள். கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். ராஜாவின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது குமாரன் நோயுற்றிருந்தான். அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது குமாரன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான். “நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார். அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய குமாரன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான். அதற்கு இயேசு, “போ, உன் குமாரன் பிழைப்பான்” என்றார். அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான். வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் குமாரன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள். “என் குமாரன் எப்போது குணமாகத் தொடங்கினான்?” என்று கேட்டான் அவன். “நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் குமாரனின் காய்ச்சல் விலகி குணமானது” என்றார்கள் வேலைக்காரர்கள். இயேசு, “உன் குமாரன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர். யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.