இப்படி நடக்கும்போது சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். அதற்கு அவர்: நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத ஒரு உணவு எனக்கு இருக்கிறது என்றார். அப்பொழுது சீடர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்கு உணவுகொண்டுவந்திருப்பானோ என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படிசெய்து அவருடைய செயல்களை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று உங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது. நீங்கள் பாடுபட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பாடுபட்டார்கள், அவர்கள் பாடுபட்டத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த பெண்ணின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களானார்கள். சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார். அப்பொழுது அவருடைய உபதேசத்தின் மூலம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, அந்த பெண்ணைப் பார்த்து: உன் வார்த்தையினாலே இல்லை, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் உண்மையாகவே கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவிற்குப் போனார். ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே மரியாதை இல்லை என்று இயேசு தாமே சொல்லியிருந்தார். அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குச் சென்றிருந்தார்கள். பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் அதிகாரிகளில் ஒருவனுடைய மகன் வியாதியாக இருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து, கலிலேயாவிற்கு வந்தார் என்று அந்த மனிதன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரணவேதனையில் இருக்கிறதினால், அவனைக் குணமாக்குவதற்கு வரவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீங்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் பார்க்காவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். அதற்கு ராஜாவின் அதிகாரி: ஆண்டவரே, என் பிள்ளை இறப்பதற்குமுன்னே வரவேண்டும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் மகன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனிதன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான். அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். அப்பொழுது: எத்தனை மணிக்கு அவனுக்கு சுகம் உண்டானது என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் அவனை விட்டது என்றார்கள். உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னதும் அதே நேரம் என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் விசுவாசித்தார்கள். இயேசு யூதேயாவில் இருந்து கலிலேயாவிற்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாவது அற்புதம்.