யோவான் 19:28-42
யோவான் 19:28-42 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு, எல்லாம் முழுமையாக முடிந்துவிட்டதென்று இயேசு அறிந்து, வேதவசனம் நிறைவேறும்படி அவர், “நான் தாகமாய் இருக்கிறேன்” என்றார். அங்கே ஒரு சாடியில் புளித்த திராட்சை இரசம் இருந்தது. எனவே அவர்கள் ஒரு கடற்காளானை அதிலே தோய்த்து, ஒரு ஈசோப்புச் செடியின் தண்டிலே வைத்துக் கட்டி, இயேசுவின் உதடுகளில் படும்படி அதை உயர்த்தினார்கள். இயேசு அந்த பானத்தை ஏற்றுக்கொண்ட பின்பு, “முடிந்தது” என்று சொன்னார். இதைச் சொன்னதும் தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார். அது பஸ்கா என்ற பண்டிகைக்கான ஆயத்த நாளாயிருந்தது. அதற்கு மறுநாள் ஒரு பெரிய ஓய்வுநாள். அந்த நாளிலே உடல்கள் சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பாததனால், சிலுவையில் தொங்கியவர்களின் கால்களை முறித்து அவர்களைக் கீழே இறக்கும்படி அவர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். எனவே படைவீரர் வந்து, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட முதலாவது மனிதனின் கால்களை முறித்தார்கள். பின்பு மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே மரித்திருப்பதைக் கண்டார்கள். அதனால் அவர்கள் அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் அந்த படைவீரரில் ஒருவன் இயேசுவின் விலாவை ஈட்டியினால் குத்தினான். அப்பொழுது இரத்தமும் தண்ணீரும் பீறிட்டுப் பாய்ந்தது. அதைக்கண்ட மனிதன் சாட்சி கொடுத்தான். அவனுடைய சாட்சி உண்மையாயிருக்கிறது. தான் சொல்வது உண்மை என்று அவன் அறிவான். நீங்களும்கூட விசுவாசிக்கும்படியாகவே அவன் இதைச் சாட்சியாய்ச் சொல்கிறான். “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிற வேதவசனம் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தன. “தாங்கள் ஈட்டியினால் குத்தியவரை அவர்கள் நோக்கிப் பார்ப்பார்கள்” என்று இன்னொரு வேதவசனமும் சொல்லுகிறது. பின்பு அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்த யோசேப்பு, இயேசுவின் உடலைத் தரும்படி பிலாத்துவிடம் கேட்டான். இந்த யோசேப்பு இயேசுவின் சீடனாயிருந்தான். ஆனால் அவன் யூதருக்குப் பயந்ததினால் இரகசியமாகவே அவருக்கு சீடனாயிருந்தான். அவன் பிலாத்துவின் அனுமதியுடன் வந்து இயேசுவின் உடலை எடுத்துச் சென்றான். அவனுடன் நிக்கொதேமுவும் கூடப்போனான். இவனே முன்னொரு முறை இரவிலே இயேசுவைச் சந்திக்க வந்தவன். நிக்கொதேமு வரும்போது வெள்ளைப்போளமும், சந்தனமும் கலந்த ஒரு கலவையைக் கொண்டுவந்தான். அது கிட்டத்தட்ட முப்பது கிலோ எடை இருந்தது. அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை இறக்கி, அந்த நறுமணப் பொருளை மென்பட்டுத் துணிகளில் வைத்து உடலைச் சுற்றிக் கட்டினார்கள். இது யூதரின் அடக்க முறைப்படி செய்யப்பட்டது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. அது யூதருடைய பண்டிகைக்குரிய ஆயத்த நாளாய் இருந்ததாலும், அக்கல்லறை அருகே இருந்ததாலும் அவர்கள் இயேசுவின் உடலை அந்தக் கல்லறையில் வைத்தார்கள்.
யோவான் 19:28-42 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை. ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது. அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான். அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும், யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவிற்கு அந்தரங்க சீடனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகவே, அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான். ஆரம்பத்திலே ஒரு இரவில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் (முப்பத்திமூன்று கிலோ கிராம்) கொண்டுவந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
யோவான் 19:28-42 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்பு எல்லாம் முடிந்தது என்பதை இயேசு அறிந்தார். வேதவாக்கியம் நிறைவேறும்பொருட்டு அவர், “நான் தாகமாயிருக்கிறேன்” என்றார். காடி நிறைந்த பாத்திரம் ஒன்று அங்கே வைக்கப்பட்டிருந்தது. அங்கே நின்ற சேவகர்கள் கடற்பஞ்சைக் காடியிலே தோய்த்தார்கள். அதனை ஈசோப்புத் தண்டில் மாட்டினார்கள். பிறகு அதனை இயேசுவின் வாயருகே நீட்டினார்கள். இயேசு காடியைச் சுவைத்தார். பிறகு அவர், “எல்லாம் முடிந்தது” என்றார். இயேசு தன் தலையைச் சாய்த்து இறந்துபோனார். அது ஆயத்தநாளாக இருந்தது. மறுநாள் சிறப்பான ஓய்வு நாள். ஓய்வு நாளில் சரீரங்கள் உயிரோடு சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்களைச் சாகடிக்க கால்களை முறித்துக் கொல்ல வேண்டும் என இதற்கான உத்தரவை யூதர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். அதோடு அவர்களின் பிணங்களைச் சிலுவையில் இருந்து அப்புறப்படுத்தவும் அனுமதி பெற்றனர். எனவே, சேவகர்கள் இயேசுவின் ஒருபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களை முறித்தனர். பிறகு அவர்கள் இயேசுவின் மறுபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களையும் முறித்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார். எனவே அவரது கால்களை அவர்கள் முறிக்கவில்லை. ஆனால் ஒரு சேவகன் தனது ஈட்டியால் இயேசுவின் விலாவில் குத்தினான். அதிலிருந்து இரத்தமும் நீரும் வெளியே வந்தது. (இவ்வாறு நிகழ்வதைப் பார்த்தவன் அதைப்பற்றிக் கூறுகிறான். அவனே அதைக் கூறுவதால் அதனை நீங்களும் நம்ப முடியும். அவன் சொல்கின்றவை எல்லாம் உண்மை. அவன் சொல்வது உண்மையென்று அவன் அறிந்திருக்கிறான்.) “அவரது எலும்புகள் எதுவும் முறிக்கப்படுவதில்லை” என்று வேதவாக்கியங்களில் சொல்லப்பட்டவை நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது. அத்துடன் “மக்கள் தாங்கள் ஈட்டியால் குத்தினவரைப் பார்ப்பார்கள்” என்றும் வேதவாக்கியத்தில் இன்னொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு அரிமத்தியா ஊரானான யோசேப்பு எனப்படும் மனிதன் பிலாத்துவிடம் வந்து இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். (இவன் இயேசுவைப் பின்பற்றினவர்களில் ஒருவன். ஆனால் அவன் யூதர்களுக்குப் பயந்து இதைப்பற்றி இதுவரை மக்களிடம் சொல்லவில்லை). யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துச்செல்ல, பிலாத்து அனுமதி தந்தான். ஆகையால் யோசேப்பு வந்து இயேசுவின் சரீரத்தை எடுத்துப் போனான். நிக்கோதேமு யோசேப்போடு சென்றான். இவன் ஏற்கெனவே ஒரு நாள் இரவு இயேசுவிடம் வந்து அவரோடு பேசியிருக்கிறான். அவன் 100 இராத்தல் வாசனைமிக்க கரியபோளமும் வெள்ளைப் போளமும் கலந்து கொண்டுவந்தான். அவர்கள் இருவரும் இயேசுவின் சரீரத்தை எடுத்துப்போனார்கள். அவர்கள் அந்த சரீரத்தை வாசனைத் திரவியங்களோடு கூட துணிகளினால் சுற்றினார்கள். (இதுதான் யூதர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை.) இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கு ஒரு கல்லறை இருந்தது. அதில் இதுவரை எந்த சரீரமும் வைக்கப்படவில்லை. அந்தக் கல்லறையில் இயேசுவை வைத்தார்கள். அன்று யூதருடைய ஆயத்த நாளாக இருந்தது. அத்துடன் அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.
யோவான் 19:28-42 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். அந்த நாள் பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான். அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான். ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.