யோவான் 19:28-42

யோவான் 19:28-42 TCV

பின்பு, எல்லாம் முழுமையாக முடிந்துவிட்டதென்று இயேசு அறிந்து, வேதவசனம் நிறைவேறும்படி அவர், “நான் தாகமாய் இருக்கிறேன்” என்றார். அங்கே ஒரு சாடியில் புளித்த திராட்சை இரசம் இருந்தது. எனவே அவர்கள் ஒரு கடற்காளானை அதிலே தோய்த்து, ஒரு ஈசோப்புச் செடியின் தண்டிலே வைத்துக் கட்டி, இயேசுவின் உதடுகளில் படும்படி அதை உயர்த்தினார்கள். இயேசு அந்த பானத்தை ஏற்றுக்கொண்ட பின்பு, “முடிந்தது” என்று சொன்னார். இதைச் சொன்னதும் தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார். அது பஸ்கா என்ற பண்டிகைக்கான ஆயத்த நாளாயிருந்தது. அதற்கு மறுநாள் ஒரு பெரிய ஓய்வுநாள். அந்த நாளிலே உடல்கள் சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பாததனால், சிலுவையில் தொங்கியவர்களின் கால்களை முறித்து அவர்களைக் கீழே இறக்கும்படி அவர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். எனவே படைவீரர் வந்து, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட முதலாவது மனிதனின் கால்களை முறித்தார்கள். பின்பு மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே மரித்திருப்பதைக் கண்டார்கள். அதனால் அவர்கள் அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் அந்த படைவீரரில் ஒருவன் இயேசுவின் விலாவை ஈட்டியினால் குத்தினான். அப்பொழுது இரத்தமும் தண்ணீரும் பீறிட்டுப் பாய்ந்தது. அதைக்கண்ட மனிதன் சாட்சி கொடுத்தான். அவனுடைய சாட்சி உண்மையாயிருக்கிறது. தான் சொல்வது உண்மை என்று அவன் அறிவான். நீங்களும்கூட விசுவாசிக்கும்படியாகவே அவன் இதைச் சாட்சியாய்ச் சொல்கிறான். “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிற வேதவசனம் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தன. “தாங்கள் ஈட்டியினால் குத்தியவரை அவர்கள் நோக்கிப் பார்ப்பார்கள்” என்று இன்னொரு வேதவசனமும் சொல்லுகிறது. பின்பு அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்த யோசேப்பு, இயேசுவின் உடலைத் தரும்படி பிலாத்துவிடம் கேட்டான். இந்த யோசேப்பு இயேசுவின் சீடனாயிருந்தான். ஆனால் அவன் யூதருக்குப் பயந்ததினால் இரகசியமாகவே அவருக்கு சீடனாயிருந்தான். அவன் பிலாத்துவின் அனுமதியுடன் வந்து இயேசுவின் உடலை எடுத்துச் சென்றான். அவனுடன் நிக்கொதேமுவும் கூடப்போனான். இவனே முன்னொரு முறை இரவிலே இயேசுவைச் சந்திக்க வந்தவன். நிக்கொதேமு வரும்போது வெள்ளைப்போளமும், சந்தனமும் கலந்த ஒரு கலவையைக் கொண்டுவந்தான். அது கிட்டத்தட்ட முப்பது கிலோ எடை இருந்தது. அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை இறக்கி, அந்த நறுமணப் பொருளை மென்பட்டுத் துணிகளில் வைத்து உடலைச் சுற்றிக் கட்டினார்கள். இது யூதரின் அடக்க முறைப்படி செய்யப்பட்டது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. அது யூதருடைய பண்டிகைக்குரிய ஆயத்த நாளாய் இருந்ததாலும், அக்கல்லறை அருகே இருந்ததாலும் அவர்கள் இயேசுவின் உடலை அந்தக் கல்லறையில் வைத்தார்கள்.