யோவான் 19:1-16

யோவான் 19:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான். போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான். இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான். பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான். யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் சாகவேண்டும் என்றார்கள். பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து, மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார். அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள். பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான். அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.

யோவான் 19:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய் சவுக்கால் அடிக்கக் கட்டளையிட்டான். படைவீரர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தை செய்து, அதை அவர் தலையில் வைத்தார்கள். அவர்கள் அவருக்கு ஒரு கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்தி, “யூதரின் அரசனே வாழ்க!” என்று சொல்லி அவருடைய முகத்தில் அறைந்தார்கள். மீண்டும் ஒருமுறை பிலாத்து வெளியே வந்து யூதரிடம், “பாருங்கள், அவனுக்கு விரோதமாகக் குற்றம் சாட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீங்கள் அறியும்படி, நான் அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்றான். இயேசு முட்களால் செய்யப்பட்ட கிரீடத்தைத் தரித்துக்கொண்டும், கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்திக்கொண்டும் வெளியே வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “இதோ அந்த மனிதன்!” என்றான். தலைமை ஆசாரியர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் அவரைக் கண்டபோது, “சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். அப்பொழுது பிலாத்து அவர்களிடம், “இவனை நீங்களே கொண்டுபோய் சிலுவையில் அறையுங்கள். ஆனால் நானோ இவனுக்கெதிராய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் ஒன்றையும் காணவில்லை” என்றான். அதற்கு யூதத்தலைவர்கள், “எங்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னை இறைவனின் மகன் என்று சொல்கிறான்” என்றார்கள். பிலாத்து இதைக் கேட்டபோது, இன்னும் அதிகமாக பயந்தான். அவன் மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால் இயேசுவோ பதில் ஏதும் சொல்லவில்லை. அதற்கு பிலாத்து, “நீ என்னுடன் பேசமறுக்கிறாயோ? உன்னை விடுவிக்கவும், உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்று நீ அறியாதிருக்கிறாயோ?” என்றான். அதற்கு இயேசு, “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, என்மேல் உமக்கு எந்த அதிகாரமும் இராது. ஆனால், என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவமுண்டு” என்றார். அப்பொழுதிலிருந்தே, பிலாத்து இயேசுவை விடுதலை செய்வதற்கு முயன்றான். ஆனால் யூதர்களோ, “நீர் இந்த மனிதனை விடுதலை செய்தால், நீர் ரோமப் பேரரசன் சீசருக்கு நண்பனல்ல. தன்னை ஒரு அரசன் என்று சொல்கிறவன், ரோமப் பேரரசனுக்கு எதிராய் எழும்புகிறான்” என்று சத்தமிட்டார்கள். பிலாத்து இதைக் கேட்டபோது, அவன் இயேசுவை வெளியே கொண்டுவந்து, தனது நீதிபதியின் இருக்கையில் உட்கார்ந்தான். அது கற்களால் செய்யப்பட்ட ஒரு தளமேடையில் இருந்தது. அந்த மேடை எபிரெய மொழியிலே கபத்தா என அழைக்கப்பட்டது. அன்று அது பஸ்கா என்ற பண்டிகை வாரத்தின் ஆயத்த நாளாயிருந்தது. நேரமோ பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது. பிலாத்து யூதர்களிடம், “இதோ உங்கள் அரசன்” என்றான். ஆனால் அவர்களோ, “இவனை அகற்றும்! இவனை அகற்றும்! இவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். “உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைய வேண்டுமென்றா சொல்கிறீர்கள்?” என்று பிலாத்து கேட்டான். அதற்கு தலைமை ஆசாரியர்கள், “ரோமப் பேரரசன் சீசரைத் தவிர வேறு அரசன் எங்களுக்கு இல்லை” என்றார்கள். கடைசியாக, பிலாத்து இயேசுவை சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான்.

யோவான் 19:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான். படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான். இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான். பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான். யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள். பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து, மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை. அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார். அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள். பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான். அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான். அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள். அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.

யோவான் 19:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு பிலாத்து இயேசுவை அழைத்துப்போய் சவுக்கால் அடிக்குமாறு கட்டளையிட்டான். போர்ச் சேவகர்கள் முள்ளினால் ஒரு முடியைப் பின்னினர். அவர்கள் அதை இயேசுவின் தலைமீது அணிவித்தனர். பிறகு சிவப்பான அங்கியை அவருக்கு உடுத்தினார்கள். “யூதருடைய ராஜாவே, வாழ்க” என்று அடிக்கடி பலதடவை அவரிடம் வந்து சொன்னார்கள். அவர்கள் இயேசுவை முகத்தில் அறைந்தார்கள். மீண்டும் பிலாத்து யூதர்களிடம் போய் “பாருங்கள்! நான் உங்களுக்காக இயேசுவை வெளியே கொண்டு வருகிறேன். நான் இவனிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்றான். பிறகு இயேசு வெளியே வந்தார். அவர் தலையில் முள்முடியும் சரீரத்தில் சிவப்பு அங்கியும் அணிந்திருந்தார். “இதோ அந்த மனிதன்” என்று யூதர்களிடம் பிலாத்து சொன்னான். பிரதான ஆசாரியரும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கண்டவுடன் “அவனைச் சிலுவையில் அறையுங்கள்” என்று சத்தமிட்டனர். ஆனால் பிலாத்துவோ, “நீங்கள் அவனை அழைத்துப்போய் நீங்களாகவே அவனைச் சிலுவையில் அறையுங்கள். நான் தண்டனை தரும்படியாக இவனுக்கு எதிராக எந்த குற்றத்தையும் கண்டு பிடிக்கவில்லை” என்று கூறிவிட்டான். யூதர்களோ, “எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனென்றால் அவன் தன்னை தேவனின் குமாரன் என்று கூறியிருக்கிறான்” என்றனர். பிலாத்து இவற்றைக் கேட்டதும் மேலும் பயந்தான். பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போனான். அவன் இயேசுவிடம், “நீ எங்கே இருந்து வருகிறாய்?” எனக் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அதனால் பிலாத்து, “நீ என்னோடு பேச மறுக்கவா செய்கிறாய்? நான் உன்னை விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவன். இதனை நினைத்துக்கொள். உன்னைச் சிலுவையில் அறைந்து கொல்லும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது” என்றான். “தேவனிடமிருந்து அதிகாரம் வந்தால் ஒழிய நீர் என்மீது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாது. எனவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிகப் பாவம் உண்டு” என்று இயேசு பதிலுரைத்தார். இதற்குப் பிறகு இயேசுவை விடுதலை செய்யப் பிலாத்து முயற்சி செய்தான். ஆனால் யூதர்களோ, “எவனொருவன் தன்னை ராஜா என்று கூறுகிறானோ அவன் இராயனின் பகைவன். எனவே, நீங்கள் இயேசுவை விடுதலை செய்தால் நீங்கள் இராயனின் நண்பன் இல்லை என்று பொருள்” எனச் சத்தமிட்டார்கள். யூதர்கள் சொன்னவற்றைப் பிலாத்து கேட்டான். எனவே, அவன் இயேசுவை அரண்மனையை விட்டு வெளியே இழுத்து வந்தான். யூதர்களின் மொழியில் கபத்தா என்று அழைக்கப்பெறும் கல்தள வரிசை அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தான். அங்கே இருந்த நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தான். அப்பொழுது அது பஸ்காவுக்குத் தயாராகும் நாளாகவும் மதியவேளையாகவும் இருந்தது. பிலாத்து யூதர்களிடம் “இதோ உங்கள் ராஜா” என்றான். அதற்கு யூதர்கள், “அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமிட்டனர். அவர்களிடம் பிலாத்து, “உங்களது ராஜாவை நான் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். அதற்குத் தலைமை ஆசாரியன், “எங்களது ஒரே ராஜா இராயன் மட்டுமே” என்று பதில் சொன்னான். அதனால் பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி அவரை அவர்களிடம் ஒப்படைத்தான்.