யோவான் 19:1-16

யோவான் 19:1-16 TCV

பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய் சவுக்கால் அடிக்கக் கட்டளையிட்டான். படைவீரர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தை செய்து, அதை அவர் தலையில் வைத்தார்கள். அவர்கள் அவருக்கு ஒரு கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்தி, “யூதரின் அரசனே வாழ்க!” என்று சொல்லி அவருடைய முகத்தில் அறைந்தார்கள். மீண்டும் ஒருமுறை பிலாத்து வெளியே வந்து யூதரிடம், “பாருங்கள், அவனுக்கு விரோதமாகக் குற்றம் சாட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீங்கள் அறியும்படி, நான் அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்றான். இயேசு முட்களால் செய்யப்பட்ட கிரீடத்தைத் தரித்துக்கொண்டும், கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்திக்கொண்டும் வெளியே வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “இதோ அந்த மனிதன்!” என்றான். தலைமை ஆசாரியர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் அவரைக் கண்டபோது, “சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். அப்பொழுது பிலாத்து அவர்களிடம், “இவனை நீங்களே கொண்டுபோய் சிலுவையில் அறையுங்கள். ஆனால் நானோ இவனுக்கெதிராய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் ஒன்றையும் காணவில்லை” என்றான். அதற்கு யூதத்தலைவர்கள், “எங்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னை இறைவனின் மகன் என்று சொல்கிறான்” என்றார்கள். பிலாத்து இதைக் கேட்டபோது, இன்னும் அதிகமாக பயந்தான். அவன் மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால் இயேசுவோ பதில் ஏதும் சொல்லவில்லை. அதற்கு பிலாத்து, “நீ என்னுடன் பேசமறுக்கிறாயோ? உன்னை விடுவிக்கவும், உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்று நீ அறியாதிருக்கிறாயோ?” என்றான். அதற்கு இயேசு, “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, என்மேல் உமக்கு எந்த அதிகாரமும் இராது. ஆனால், என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவமுண்டு” என்றார். அப்பொழுதிலிருந்தே, பிலாத்து இயேசுவை விடுதலை செய்வதற்கு முயன்றான். ஆனால் யூதர்களோ, “நீர் இந்த மனிதனை விடுதலை செய்தால், நீர் ரோமப் பேரரசன் சீசருக்கு நண்பனல்ல. தன்னை ஒரு அரசன் என்று சொல்கிறவன், ரோமப் பேரரசனுக்கு எதிராய் எழும்புகிறான்” என்று சத்தமிட்டார்கள். பிலாத்து இதைக் கேட்டபோது, அவன் இயேசுவை வெளியே கொண்டுவந்து, தனது நீதிபதியின் இருக்கையில் உட்கார்ந்தான். அது கற்களால் செய்யப்பட்ட ஒரு தளமேடையில் இருந்தது. அந்த மேடை எபிரெய மொழியிலே கபத்தா என அழைக்கப்பட்டது. அன்று அது பஸ்கா என்ற பண்டிகை வாரத்தின் ஆயத்த நாளாயிருந்தது. நேரமோ பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது. பிலாத்து யூதர்களிடம், “இதோ உங்கள் அரசன்” என்றான். ஆனால் அவர்களோ, “இவனை அகற்றும்! இவனை அகற்றும்! இவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். “உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைய வேண்டுமென்றா சொல்கிறீர்கள்?” என்று பிலாத்து கேட்டான். அதற்கு தலைமை ஆசாரியர்கள், “ரோமப் பேரரசன் சீசரைத் தவிர வேறு அரசன் எங்களுக்கு இல்லை” என்றார்கள். கடைசியாக, பிலாத்து இயேசுவை சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 19:1-16