யோவான் 18:1-10

யோவான் 18:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு மன்றாடி முடித்தபின்பு, அவர் அங்கிருந்து தமது சீடர்களுடன் கெதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றார். அதன் மறுபக்கத்தில் ஒரு தோட்டம் இருந்தது. இயேசுவும், அவருடைய சீடர்களும் அங்கே சென்றார்கள். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் அந்த இடத்தை அறிந்திருந்தான். ஏனெனில் இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்கே கூடிவருவார்கள். எனவே யூதாஸ் படைவீரரில் ஒரு பிரிவினரையும், தலைமை ஆசாரியர்கள் மற்றும் பரிசேயர் ஆகியோருடைய சேவகர்களில் சிலரையும் கூட்டிக்கொண்டு அந்த தோட்டத்திற்கு வந்தான். அவர்கள் தீப்பந்தங்களையும், விளக்குகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தார்கள். இயேசு தமக்கு நடக்கப்போவதையெல்லாம் அறிந்து, அவர்களுக்கு முன்பாக வந்து, “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு” என்றார்கள். இயேசு அவர்களிடம், “நானே அவர்” என்றார். துரோகியான யூதாஸ் அவர்களுடன் நின்றுகொண்டிருந்தான். “நானே அவர்” என்று இயேசு சொன்னபோது, அவர்கள் பின்னடைந்து தரையிலே விழுந்தார்கள். அவர் மறுபடியும் அவர்களிடம், “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் மறுபடியும்: “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு” என்றார்கள். அதற்கு இயேசு, “நானே அவர் என்று உங்களுக்குச் சொன்னேனே. நீங்கள் என்னைத்தான் தேடுகிறீர்கள் என்றால், இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். “நீர் எனக்குக் கொடுத்தவர்களில் நான் ஒருவரையும் இழந்துவிடவில்லை” என்று அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் நிறைவேறும்படி இது நடந்தது. அப்பொழுது வாள் வைத்துக்கொண்டிருந்த சீமோன் பேதுரு அதை உருவி எடுத்து, பிரதான ஆசாரியரின் வேலைக்காரனைத் தாக்கினான். அவனது வலது காது வெட்டுண்டது. அந்த வேலைக்காரனின் பெயர் மல்குஸ்.

யோவான் 18:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீடர்களோடு கெதரோன் என்னும் ஆற்றுக்கு அந்தப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீடர்களும் நுழைந்தார்கள். இயேசு தம்முடைய சீடர்களோடு அடிக்கடி அங்கே சென்றிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான். யூதாஸ் படைவீரர்கள் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர்கள், பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்ட அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு, தீ பந்தங்களோடும், விளக்குகளோடும் ஆயுதங்களோடும், அந்த இடத்திற்கு வந்தான். இயேசு தமக்கு சம்பவிக்கப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்றார். அவருக்கு அவர்கள் மறுமொழியாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றான். நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். அவர் மறுபடியும் அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். இயேசு மறுமொழியாக: நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடிவந்திருந்தால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லை என்று அவர் சொல்லிய வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்தில் இருந்த வாளை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் வலதுகாதை வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.

யோவான் 18:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு தன் பிரார்த்தனையை முடித்துக்கொண்டதும், தன் சீஷர்களுடன் போனார். அவர்கள் கீதரோன் என்னும் பள்ளத்தாக்குக்கு அப்பால் தாண்டிப்போனார்கள். ஒலிவ மரங்கள் நிறைந்த தோட்டம் இருந்தது. இயேசுவும் சீஷர்களும் அங்கே போனார்கள். யூதாஸுக்கு இந்த இடம் எங்கே இருக்கிறது என்று தெரியும். ஏனென்றால் இயேசு அடிக்கடி அவ்விடத்தில் தம் சீஷர்களோடு சந்தித்திருக்கிறார். யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப்போனவன். எனவே அவன் ஒரு சேவகர் குழுவைக் கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் தலைமை ஆசாரியர், பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட காவல்காரரையும் அழைத்து வந்தான். அவர்கள் தம்மோடு பந்தங்களையும், தீவட்டிகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தனர். இயேசு அவருக்கு நடக்கவிருக்கும் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவர் வெளியே வந்து, “நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர். இயேசுவோ, “நானே இயேசு” என்றார். (அவருக்கு எதிராக மாறின யூதாஸும் அவர்களோடு நின்றிருந்தான்.) இயேசு அவர்களிடம், “நான்தான் இயேசு” என்று சொன்னபொழுது அவர்கள் பின் வாங்கித் தரையில் விழுந்தார்கள். இயேசு மீண்டும் அவர்களிடம், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அதற்கு, “நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை” என்றனர். இயேசு அதற்கு, “‘நான்தான் இயேசு’ என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஆகையால் நீங்கள் என்னைத் தேடுவதானால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். “நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை” என்று அவர் சொன்னது நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது. சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவன் அதை வெளியே எடுத்து தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டிப்போட்டான். (அந்த வேலைக்காரனின் பெயர் மல்கூஸ்)

யோவான் 18:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள். இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான். யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான். இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார். அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான். நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பேர்.