யோவான் 18:1-10

யோவான் 18:1-10 TCV

இயேசு மன்றாடி முடித்தபின்பு, அவர் அங்கிருந்து தமது சீடர்களுடன் கெதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றார். அதன் மறுபக்கத்தில் ஒரு தோட்டம் இருந்தது. இயேசுவும், அவருடைய சீடர்களும் அங்கே சென்றார்கள். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் அந்த இடத்தை அறிந்திருந்தான். ஏனெனில் இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்கே கூடிவருவார்கள். எனவே யூதாஸ் படைவீரரில் ஒரு பிரிவினரையும், தலைமை ஆசாரியர்கள் மற்றும் பரிசேயர் ஆகியோருடைய சேவகர்களில் சிலரையும் கூட்டிக்கொண்டு அந்த தோட்டத்திற்கு வந்தான். அவர்கள் தீப்பந்தங்களையும், விளக்குகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தார்கள். இயேசு தமக்கு நடக்கப்போவதையெல்லாம் அறிந்து, அவர்களுக்கு முன்பாக வந்து, “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு” என்றார்கள். இயேசு அவர்களிடம், “நானே அவர்” என்றார். துரோகியான யூதாஸ் அவர்களுடன் நின்றுகொண்டிருந்தான். “நானே அவர்” என்று இயேசு சொன்னபோது, அவர்கள் பின்னடைந்து தரையிலே விழுந்தார்கள். அவர் மறுபடியும் அவர்களிடம், “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் மறுபடியும்: “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு” என்றார்கள். அதற்கு இயேசு, “நானே அவர் என்று உங்களுக்குச் சொன்னேனே. நீங்கள் என்னைத்தான் தேடுகிறீர்கள் என்றால், இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். “நீர் எனக்குக் கொடுத்தவர்களில் நான் ஒருவரையும் இழந்துவிடவில்லை” என்று அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் நிறைவேறும்படி இது நடந்தது. அப்பொழுது வாள் வைத்துக்கொண்டிருந்த சீமோன் பேதுரு அதை உருவி எடுத்து, பிரதான ஆசாரியரின் வேலைக்காரனைத் தாக்கினான். அவனது வலது காது வெட்டுண்டது. அந்த வேலைக்காரனின் பெயர் மல்குஸ்.