யோவான் 16:5-16
யோவான் 16:5-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இப்பொழுது நான் என்னை அனுப்பிய பிதாவினிடத்திற்குப் போகிறேன். ஆனால், ‘நீர் எங்கே போகிறீர்’ என்று உங்களில் ஒருவனும் என்னிடத்தில் கேட்கவில்லை. நான் இவைகளைச் சொன்னதினாலே நீங்கள் துக்கம் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்: உங்கள் நன்மைக்காவே நான் உங்களைவிட்டுப் போகிறேன். ஏனெனில் நான் போனாலேயன்றி உதவியாளர் உங்களிடத்தில் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன். உதவியாளர் வரும்பொழுது, பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்து உலகத்தினரை கண்டித்து உணத்துவார்: அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதிருப்பதினால் பாவத்தைக் குறித்தும், இனிமேல் நீங்கள் என்னைக் காணாதபடிக்கு பிதாவின் இடத்திற்கு நான் போகிறபடியால் நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி இப்பொழுது நியாயத் தீர்ப்புக்குள்ளாகி இருப்பதனால், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார். “நான் உங்களுக்குச் சொல்வதற்கோ இன்னும் அதிகமாய் இருக்கிறது. இதை எல்லாம் இப்பொழுது உங்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. ஆனால் சத்திய ஆவியானவர் வரும்போது, அவர் உங்களை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். அவர் தம்முடைய சுயவிருப்பத்தின்படி எதையும் பேசமாட்டார்; தாம் கேட்கிறதை மாத்திரமே அவர் பேசுவார். வரப்போகும் காரியங்களை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார். அவர் எனக்குரியதிலிருந்து எடுத்து அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். இதனால் அவர் எனக்கே மகிமையைக் கொண்டுவருவார். பிதாவுக்கு உரியவைகள் எல்லாம் என்னுடையவைகளாய் இருக்கின்றன. அதனாலேயே ஆவியானவர் எனக்குரியதிலிருந்து எடுத்து உங்களுக்கு அதை வெளிப்படுத்துவார் என்று சொன்னேன். “இன்னும் கொஞ்சம் காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக் காலத்திலே நீங்கள் என்னைக் காணுவீர்கள்.”
யோவான் 16:5-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்பொழுது நான் என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீர் என்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்களுடைய இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு நன்மையாக இருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசிக்காதபடியினாலே பாவத்தைக்குறித்தும், நீங்கள் இனி என்னைப் பார்க்காதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், இந்த உலகத்தின் தலைவன் நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாக இருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, எல்லா சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சொந்தமாக பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் எல்லாவற்றையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் அனைத்தும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்குத் தெரிவிப்பார் என்றேன். நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மீண்டும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.
யோவான் 16:5-16 பரிசுத்த பைபிள் (TAERV)
இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடம் செல்லப் போகிறேன். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்’ என்று யாரும் என்னை இதுவரை கேட்கவில்லை. எனினும் நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிரம்பிவிட்டது. ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார். “அவர் வரும்போது இவற்றைப்பற்றிய உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம்பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவுபற்றியும், நியாயத்தீர்ப்புபற்றியும் விளக்குவார். அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார். அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். நியாயத்தீர்ப்புபற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார். ஏனென்றால் இந்த உலகை ஆளுகிற சாத்தான் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான். “உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.” பின்னும் இயேசு “இன்னும் கொஞ்ச காலத்திற்குப்பின் என்னை நீங்கள் பார்க்க முடியாது. அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின் நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்” என்றார்.
யோவான் 16:5-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.