யோவான் 16

16
1“நீங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப் போகாதபடி இதை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்கிறேன். 2சிலர் உங்களை ஜெப ஆலயங்களிலிருந்து வெளியே துரத்துவார்கள்; உண்மையாகவே ஒரு காலம் வருகிறது, உங்களைக் கொலைசெய்கிறவர்களுங்கூட தாங்கள் இறைவனுக்கு பணிசெய்வதாகவே எண்ணுவார்கள். 3பிதாவையோ என்னையோ அவர்கள் அறியாததன் நிமித்தம் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வார்கள். 4அந்தக் காலம் வருகிறபோது, நான் அதைக்குறித்து உங்களை எச்சரித்ததை நீங்கள் நினைவில் கொள்வதற்கே இதை நான் உங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறேன். நான் உங்களுடனேகூட இருந்ததினாலே இதை உங்களுக்கு ஆரம்பத்திலேயே சொல்லவில்லை. 5இப்பொழுது நான் என்னை அனுப்பிய பிதாவினிடத்திற்குப் போகிறேன். ஆனால், ‘நீர் எங்கே போகிறீர்’ என்று உங்களில் ஒருவனும் என்னிடத்தில் கேட்கவில்லை. 6நான் இவைகளைச் சொன்னதினாலே நீங்கள் துக்கம் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். 7ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்: உங்கள் நன்மைக்காவே நான் உங்களைவிட்டுப் போகிறேன். ஏனெனில் நான் போனாலேயன்றி உதவியாளர் உங்களிடத்தில் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன். 8உதவியாளர் வரும்பொழுது, பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்து உலகத்தினரை கண்டித்து உணத்துவார்: 9அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதிருப்பதினால் பாவத்தைக் குறித்தும், 10இனிமேல் நீங்கள் என்னைக் காணாதபடிக்கு பிதாவின் இடத்திற்கு நான் போகிறபடியால் நீதியைக் குறித்தும், 11இந்த உலகத்தின் அதிபதி இப்பொழுது நியாயத் தீர்ப்புக்குள்ளாகி இருப்பதனால், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார்.
12“நான் உங்களுக்குச் சொல்வதற்கோ இன்னும் அதிகமாய் இருக்கிறது. இதை எல்லாம் இப்பொழுது உங்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. 13ஆனால் சத்திய ஆவியானவர் வரும்போது, அவர் உங்களை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். அவர் தம்முடைய சுயவிருப்பத்தின்படி எதையும் பேசமாட்டார்; தாம் கேட்கிறதை மாத்திரமே அவர் பேசுவார். வரப்போகும் காரியங்களை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார். 14அவர் எனக்குரியதிலிருந்து எடுத்து அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். இதனால் அவர் எனக்கே மகிமையைக் கொண்டுவருவார். 15பிதாவுக்கு உரியவைகள் எல்லாம் என்னுடையவைகளாய் இருக்கின்றன. அதனாலேயே ஆவியானவர் எனக்குரியதிலிருந்து எடுத்து உங்களுக்கு அதை வெளிப்படுத்துவார் என்று சொன்னேன்.
சீடர்களுடைய துக்கம் மகிழ்ச்சியாக மாறுதல்
16“இன்னும் கொஞ்சம் காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக் காலத்திலே நீங்கள் என்னைக் காணுவீர்கள்.”
17அவர்களுடைய சீடர்களில் சிலர் ஒருவரையொருவர் பார்த்து, “ ‘இன்னும் கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்’ என்றும், ‘மீண்டும் கொஞ்சக்காலத்திற்குப் பின் என்னைக் காண்பீர்கள்’ என்றும், ‘நான் என் பிதாவினிடத்திற்கு போகிறேன்’ என்றும் சொல்கிறாரே, அதன் அர்த்தம் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 18“இவர், ‘கொஞ்சக்காலம்’ என்று சொல்வதன் அர்த்தம் என்ன? இவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே” என்றும் பேசிக்கொண்டார்கள்.
19இதைக்குறித்து சீடர்கள் தம்மிடம் கேட்க விரும்புகிறார்கள் என்று இயேசு அறிந்துகொண்டார். எனவே அவர் அவர்களிடம், “கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக்காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்று நான் சொன்னேன். அதனுடைய அர்த்தம் என்னவென்றுதானே நீங்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். 20மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், ஆனால் உலகமோ மகிழ்ச்சி அடையும். நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் துக்கமோ சந்தோஷமாக மாறும். 21பிரசவிக்கின்ற ஒரு பெண் தன்னுடைய பிரசவவேளை வந்துவிட்டதால், வேதனையை அனுபவிக்கின்றாள்; ஆனால் குழந்தை பிறந்தவுடனேயோ, அவள் தன் வேதனையை மறந்து விடுகிறாள். ஏனெனில் ஒரு பிள்ளையை உலகத்திற்குக் கொண்டு வந்ததைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறாள். 22அவ்விதமாகவே நீங்களும் இப்பொழுது வேதனையை அனுபவிக்கிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காண்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். யாரும் அந்தச் சந்தோஷத்தை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டார்கள். 23அந்த நாளிலே நீங்கள் என்னிடத்திலே எதையுமே கேட்கவேண்டியதில்லை. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் பெயரிலே என் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அதை அவர் உங்களுக்குத் தருவார். 24இதுவரை நீங்கள் என்னுடைய பெயரில் எதையுமே கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் சந்தோஷமும் முழுநிறைவுபெறும்.
25“இவைகளை எல்லாம் உவமைகள் மூலம் உங்களுடன் பேசினேன். ஆனால் காலம் வருகிறது. அப்பொழுது நான் இப்படியான உவமைகளைக் கொண்டு பேசமாட்டேன். பிதாவைக் குறித்து தெளிவாக உங்களோடு பேசுவேன். 26அந்த நாளிலே நீங்களே என்னுடைய பெயரில் பிதாவினிடத்தில் கேட்பீர்கள். எனவே உங்களுக்காக நான் பிதாவினிடத்தில் கேட்கவேண்டியதில்லை. 27நீங்கள் என்னில் அன்பாயிருந்ததினாலும், நான் இறைவனிடமிருந்து வந்தேன் என்று விசுவாசிப்பதினாலும், பிதாவே உங்களில் அன்பாயிருக்கிறார். 28நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு, இந்த உலகத்திற்கு வந்தேன்; இப்போது உலகத்தை விட்டு பிதாவினிடத்திற்கு திரும்பிப் போகிறேன்” என்றார்.
29அப்பொழுது இயேசுவினுடைய சீடர்கள், “இப்பொழுது நீர் உவமையாகச் சொல்லாமல் தெளிவாய் பேசுகிறீர். 30நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். அதனால் யாரும் உம்மிடத்தில் கேள்விகள் கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்பது எங்களுக்குத் தெரிகிறது. எனவே நீர் இறைவனிடமிருந்து வந்தீர் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்றார்கள்.
31அதற்கு இயேசு, “இப்பொழுதாவது நீங்கள் விசுவாசிக்கிறீர்களே? 32ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்போதே வந்துவிட்டது. அப்பொழுது நீங்கள் சிதறடிக்கப்படுவீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள். நீங்கள் என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆனால் நான் தனிமையாய் இல்லை; ஏனெனில் என் பிதா என்னுடனே இருக்கிறார்.
33“நீங்கள் என்னில் சமாதானம் பெற்றவர்களாய் இருக்கும்படியே, இவைகளை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்திலே உங்களுக்கு துன்பங்கள் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோவான் 16: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்