யோவான் 16:20-24

யோவான் 16:20-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங்கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள்.

யோவான் 16:20-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், ஆனால் உலகமோ மகிழ்ச்சி அடையும். நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் துக்கமோ சந்தோஷமாக மாறும். பிரசவிக்கின்ற ஒரு பெண் தன்னுடைய பிரசவவேளை வந்துவிட்டதால், வேதனையை அனுபவிக்கின்றாள்; ஆனால் குழந்தை பிறந்தவுடனேயோ, அவள் தன் வேதனையை மறந்து விடுகிறாள். ஏனெனில் ஒரு பிள்ளையை உலகத்திற்குக் கொண்டு வந்ததைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறாள். அவ்விதமாகவே நீங்களும் இப்பொழுது வேதனையை அனுபவிக்கிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காண்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். யாரும் அந்தச் சந்தோஷத்தை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டார்கள். அந்த நாளிலே நீங்கள் என்னிடத்திலே எதையுமே கேட்கவேண்டியதில்லை. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் பெயரிலே என் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரை நீங்கள் என்னுடைய பெயரில் எதையுமே கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் சந்தோஷமும் முழுநிறைவுபெறும்.

யோவான் 16:20-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறும். பெண்ணானவளுக்குப் பிரசவநேரம் வரும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனிதன் உலகத்தில் பிறந்தான் என்கிற சந்தோஷத்தினால் பின்பு உபத்திரவத்தை நினைக்கமாட்டாள். அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்து இருக்கிறீர்கள். நான் மீண்டும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்களுடைய இருதயம் சந்தோஷப்படும், உங்களுடைய சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடமிருந்து எடுத்துப்போடுவதில்லை. அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டீர்கள். உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள்.

யோவான் 16:20-24 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அழுது துக்கப்படுவீர்கள். ஆனால் உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் துக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். “ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவளுக்கு வலி ஏற்படும். ஏனென்றால் அவளுக்குக் குறிப்பிட்டவேளை நெருங்கி இருக்கும். ஆனால் குழந்தை பிறந்ததும் அவள் தன் வலியை மறந்துவிடுவாள். குழந்தை இந்த உலகுக்கு வந்துவிட்டது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். உங்களுக்கும் இதைப்போலத்தான். இப்பொழுது நீங்கள் துயரமாக இருக்கிறீர்கள். ஆனால் நான் மீண்டும் உங்களைப் பார்ப்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எவராலும் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது. அந்த நாளில் நீங்கள் என்னிடம் எதைப்பற்றியும் கேட்கமாட்டீர்கள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். என் பேரில் நீங்கள் எதைக் கேட்டாலும் என் பிதா உங்களுக்குத் தருவார். இதுவரை நீங்கள் என்பேரால் எதையும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மகிழ்ச்சி முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும்.