யோவான் 16:16-22

யோவான் 16:16-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“இன்னும் கொஞ்சம் காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக் காலத்திலே நீங்கள் என்னைக் காணுவீர்கள்.” அவர்களுடைய சீடர்களில் சிலர் ஒருவரையொருவர் பார்த்து, “ ‘இன்னும் கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்’ என்றும், ‘மீண்டும் கொஞ்சக்காலத்திற்குப் பின் என்னைக் காண்பீர்கள்’ என்றும், ‘நான் என் பிதாவினிடத்திற்கு போகிறேன்’ என்றும் சொல்கிறாரே, அதன் அர்த்தம் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். “இவர், ‘கொஞ்சக்காலம்’ என்று சொல்வதன் அர்த்தம் என்ன? இவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே” என்றும் பேசிக்கொண்டார்கள். இதைக்குறித்து சீடர்கள் தம்மிடம் கேட்க விரும்புகிறார்கள் என்று இயேசு அறிந்துகொண்டார். எனவே அவர் அவர்களிடம், “கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக்காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்று நான் சொன்னேன். அதனுடைய அர்த்தம் என்னவென்றுதானே நீங்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், ஆனால் உலகமோ மகிழ்ச்சி அடையும். நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் துக்கமோ சந்தோஷமாக மாறும். பிரசவிக்கின்ற ஒரு பெண் தன்னுடைய பிரசவவேளை வந்துவிட்டதால், வேதனையை அனுபவிக்கின்றாள்; ஆனால் குழந்தை பிறந்தவுடனேயோ, அவள் தன் வேதனையை மறந்து விடுகிறாள். ஏனெனில் ஒரு பிள்ளையை உலகத்திற்குக் கொண்டு வந்ததைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறாள். அவ்விதமாகவே நீங்களும் இப்பொழுது வேதனையை அனுபவிக்கிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காண்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். யாரும் அந்தச் சந்தோஷத்தை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டார்கள்.

யோவான் 16:16-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மீண்டும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார். அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதும் அல்லாமல்: கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது என்ன என்று நமக்குப் புரியவில்லையே என்றார்கள். அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களைப் பார்த்து: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ? உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறும். பெண்ணானவளுக்குப் பிரசவநேரம் வரும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனிதன் உலகத்தில் பிறந்தான் என்கிற சந்தோஷத்தினால் பின்பு உபத்திரவத்தை நினைக்கமாட்டாள். அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்து இருக்கிறீர்கள். நான் மீண்டும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்களுடைய இருதயம் சந்தோஷப்படும், உங்களுடைய சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடமிருந்து எடுத்துப்போடுவதில்லை.

யோவான் 16:16-22 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னும் இயேசு “இன்னும் கொஞ்ச காலத்திற்குப்பின் என்னை நீங்கள் பார்க்க முடியாது. அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின் நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்” என்றார். இயேசுவின் சீஷர்களில் சிலர் ஒருவருக்கொருவர், “‘கொஞ்ச காலத்திற்குப்பின் பார்க்கமுடியாது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்’ என்றாரே, இயேசு எதைக் கருதி இவ்வாறு கூறுகிறார். ‘நான் பிதாவிடம் போகிறேன்’ என்று ஏன் கூறுகிறார். ‘கொஞ்ச காலம்’ என்று கூறினாரே அதன் பொருள் என்ன? அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்று பேசிக்கொண்டனர். சீஷர்கள் தன்னிடம் அதைப்பற்றிக் கேட்க விரும்புவதை இயேசு கவனித்தார். ஆகையால் இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறீர்கள்? நான், ‘இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு என்னைப் பார்க்க முடியாது. அப்புறம் கொஞ்ச காலத்திற்குப் பின்பு மீண்டும் என்னைப் பார்ப்பீர்கள்’ என்று சொன்னேனே, அதைப் பற்றியா? நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அழுது துக்கப்படுவீர்கள். ஆனால் உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் துக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். “ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவளுக்கு வலி ஏற்படும். ஏனென்றால் அவளுக்குக் குறிப்பிட்டவேளை நெருங்கி இருக்கும். ஆனால் குழந்தை பிறந்ததும் அவள் தன் வலியை மறந்துவிடுவாள். குழந்தை இந்த உலகுக்கு வந்துவிட்டது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். உங்களுக்கும் இதைப்போலத்தான். இப்பொழுது நீங்கள் துயரமாக இருக்கிறீர்கள். ஆனால் நான் மீண்டும் உங்களைப் பார்ப்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எவராலும் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது.

யோவான் 16:16-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார். அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி, கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள். அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ? மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்