யோவான் 10:1-10

யோவான் 10:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு மேலும் சொன்னதாவது: “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆட்டுத் தொழுவத்தினுள்ளே ஒருவன் வாசல் வழியாய் உள்ளே போகாமல் வேறு வழியாய் ஏறி உள்ளே வருகிறவன், அவன் கள்வனும் கொள்ளைக்காரனுமாய் இருப்பான். வாசல் வழியாய் உள்ளே போகிறவனே ஆடுகளின் மேய்ப்பனாய் இருக்கிறான். காவலாளி அவனுக்கு வாசல் கதவைத் திறந்து விடுகிறான். ஆடுகளும் அவனுடைய குரலுக்குச் செவிகொடுக்கின்றன. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வழிநடத்திச் செல்கிறான். அவன் தனக்குச் சொந்தமான எல்லா ஆடுகளையும் தொழுவத்திற்கு வெளியே கொண்டுவந்து விட்டபின்பு, அவைகளுக்கு முன்னாக நடந்து செல்கிறான். அவனுடைய ஆடுகளும் அவனுடைய குரலை அறிந்திருப்பதால், அவை அவனுக்குப்பின் செல்கின்றன. ஆடுகள் ஒருபோதும் அறியாத ஒருவனைப் பின்பற்றிச் செல்லமாட்டாது; ஒரு அவனுடைய குரலை அவை இன்னாருடைய குரல் என்று அறியாதபடியால், அவை அவனைவிட்டு ஓடிப்போகும்” என்றார். இயேசு இதை உவமையாக பேசி அவர்களுக்குச் சொன்னபோது, இயேசு தங்களுக்கு என்ன சொல்கிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. எனவே இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், ஆடுகளுக்கு வாசல் நானே. எனக்கு முன்னே வந்த எல்லோரும் கள்வரும் கொள்ளைக்காரருமாய் இருக்கிறார்கள். ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. நானே வாசல்; என் வழியாய் உள்ளே போகிறவர்கள் யாரோ அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்கள் சுதந்திரமாய் உள்ளே வந்து வெளியே போய், தமக்குரிய மேய்ச்சலைப் பெற்றுக்கொள்கிறார்கள். திருடனோ திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகிறான்; நானோ அவர்கள் ஜீவனை அடையும்படியாக வந்திருக்கிறேன். அவர்கள் அந்த ஜீவனை நிறைவாய் பெற்றுக்கொள்ளும்படியாகவே வந்தேன்.

யோவான் 10:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல்வழியாக நுழையாமல், வேறுவழியாக ஏறுகிறவன் திருடனும், கொள்ளைக்காரனுமாக இருக்கிறான். வாசல்வழியாக நுழைகிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாக இருக்கிறான். வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் அழைத்து, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறதினால் அவனுக்குப் பின்னே செல்லுகிறது. தெரியாதவர்களுடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் தெரியாதவனுக்குப் பின்னே செல்லாமல், அவனைவிட்டு ஓடிப்போகும் என்றார். இந்த உவமையை இயேசு அவர்களிடம் சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. ஆதலால் இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: நானே ஆடுகளுக்கு வாசல் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு முன்பே வந்தவர்கள் எல்லோரும் திருடர்களும், கொள்ளைக்காரர்களுமாக இருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. நானே வாசல், என்வழியாக ஒருவன் உள்ளே பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும், வெளியும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன், திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரமாட்டான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

யோவான் 10:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

“உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒருவன் ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாகவே நுழையவேண்டும். வேறு வழியாக நுழைந்தால், அவன் ஒரு திருடன். அவன் ஆடுகளைத் திருடவே முயற்சி செய்வான். ஆனால் மேய்ப்பன் வாசல் வழியாக நுழைகிறவன். அவனே மேய்ப்பன். வாசலைக் காக்கிற காவல்காரன் மேய்ப்பனுக்காகக் கதவைத் திறந்துவிடுவான். ஆடுகள் மேய்ப்பனின் குரலுக்கு செவி கொடுக்கும். மேய்ப்பன் தன் சொந்த ஆடுகளை அவற்றின் பெயரைச் சொல்லி அழைப்பான். அவன் அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போவான். மேய்ப்பன் தனது ஆடுகளையெல்லாம் வெளியே கொண்டுவந்த பின் அவற்றுக்கு முன்னால் நடந்து அவற்றை நடத்திக்கொண்டு போகிறான். ஆடுகள் அவனது குரல் குறிப்புகளை அடையாளம் கண்டபடியால், அவை அவன் பின்னே செல்கின்றன. ஆனால் ஆடுகள் தாம் அறியாதவன் பின்னால் செல்வதில்லை. அவனைவிட்டு அவை விலகி ஓடும். ஏனென்றால் அவற்றிற்கு அவனது குரல் புரியாது” என்று இயேசு மக்களிடம் இந்த உவமையைச் சொன்னார். இந்த உவமையின் உட்பொருளை அந்த மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே இயேசு மேலும் சொன்னார், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆடுகளுக்கு நானே வாசலாக இருக்கிறேன். எனக்கு முன்னால் வந்தவர்கள் அனைவரும் கள்ளரும், கொள்ளைக்காரர்களுமாக இருந்தார்கள். ஆடுகள் அவர்களைக் கவனிக்கவில்லை. நானே வாசல். என் மூலமாக நுழைகிறவனே மீட்கப்படுவான். அவன் உள்ளேயும் வெளியேயும் போய் மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடுவதற்காகவே வருகிறான். அவன் ஆடுகளைக் கொல்லவும் அழிக்கவுமே செய்வான். ஆனால் நானோ ஜீவனைக் கொடுக்க வந்துள்ளேன். அந்த ஜீவன் பூரணமும், நன்மையுமானது.

யோவான் 10:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போகும் என்றார். இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.