யோவான் 10:1-10

யோவான் 10:1-10 TCV

இயேசு மேலும் சொன்னதாவது: “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆட்டுத் தொழுவத்தினுள்ளே ஒருவன் வாசல் வழியாய் உள்ளே போகாமல் வேறு வழியாய் ஏறி உள்ளே வருகிறவன், அவன் கள்வனும் கொள்ளைக்காரனுமாய் இருப்பான். வாசல் வழியாய் உள்ளே போகிறவனே ஆடுகளின் மேய்ப்பனாய் இருக்கிறான். காவலாளி அவனுக்கு வாசல் கதவைத் திறந்து விடுகிறான். ஆடுகளும் அவனுடைய குரலுக்குச் செவிகொடுக்கின்றன. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வழிநடத்திச் செல்கிறான். அவன் தனக்குச் சொந்தமான எல்லா ஆடுகளையும் தொழுவத்திற்கு வெளியே கொண்டுவந்து விட்டபின்பு, அவைகளுக்கு முன்னாக நடந்து செல்கிறான். அவனுடைய ஆடுகளும் அவனுடைய குரலை அறிந்திருப்பதால், அவை அவனுக்குப்பின் செல்கின்றன. ஆடுகள் ஒருபோதும் அறியாத ஒருவனைப் பின்பற்றிச் செல்லமாட்டாது; ஒரு அவனுடைய குரலை அவை இன்னாருடைய குரல் என்று அறியாதபடியால், அவை அவனைவிட்டு ஓடிப்போகும்” என்றார். இயேசு இதை உவமையாக பேசி அவர்களுக்குச் சொன்னபோது, இயேசு தங்களுக்கு என்ன சொல்கிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. எனவே இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், ஆடுகளுக்கு வாசல் நானே. எனக்கு முன்னே வந்த எல்லோரும் கள்வரும் கொள்ளைக்காரருமாய் இருக்கிறார்கள். ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. நானே வாசல்; என் வழியாய் உள்ளே போகிறவர்கள் யாரோ அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்கள் சுதந்திரமாய் உள்ளே வந்து வெளியே போய், தமக்குரிய மேய்ச்சலைப் பெற்றுக்கொள்கிறார்கள். திருடனோ திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகிறான்; நானோ அவர்கள் ஜீவனை அடையும்படியாக வந்திருக்கிறேன். அவர்கள் அந்த ஜீவனை நிறைவாய் பெற்றுக்கொள்ளும்படியாகவே வந்தேன்.