எரேமியா 33:1-13

எரேமியா 33:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எரேமியா இன்னும் காவற்கூடத்தின் முற்றத்திலேயே சிறைப்பட்டிருக்கும்போது, இரண்டாம் முறையும் யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்தது: பூமியைப் படைத்து அதை உருவாக்கி நிறுத்தியவர் யெகோவா. யெகோவா என்பது அவரது பெயர். அவர் கூறுவது இதுவே: நீ என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உனக்குப் பதிலளிப்பேன். நீ அறியாததும், உன்னால் ஆராய்ந்து அறிய முடியாததுமான பெரிய காரியங்களையும் நான் உனக்குச் சொல்லித்தருவேன். இப்பட்டணத்திலுள்ள வீடுகளைக் குறித்தும், யூதாவின் அரண்மனைகளைக் குறித்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவதாவது: இவற்றை நீங்கள் பாபிலோனியருடன் நடக்கும் சண்டையில் அவர்களுடைய வாளுக்கும், முற்றுகைக் கோட்டைகளுக்கும் எதிராகப் பயன்படுத்துவதற்காக உடைத்தீர்கள். பாபிலோனியரோ உள்ளே வருவார்கள். இந்த வீடுகளும், அரச அரண்மனைகளும் இறந்துபோன மனித உடல்களினால் நிரப்பப்படும். அவர்களை என்னுடைய கோபத்தினாலும், கடுங்கோபத்தினாலும் நானே கொல்லுவேன். இப்பட்டணத்தின் எல்லாக் கொடுமைகளினிமித்தம் நான் என் முகத்தை அதைவிட்டு மறைத்துக்கொள்வேன். ஆயினும், நான் இப்பட்டணத்திற்குச் சுகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் காலம் வரும். என்னுடைய மக்களை நான் குணப்படுத்தி, அவர்கள் நிறைவான சமாதானத்தையும், சத்தியத்தையும் அனுபவித்து மகிழும்படி செய்வேன். நான் யூதாவையும், இஸ்ரயேலையும் சிறையிருப்பில் இருந்து மீட்டு, அவர்கள் முன்பிருந்த நிலைக்கு அவர்களைத் திரும்பவும் கட்டி எழுப்புவேன். அவர்கள் எனக்கு விரோதமாக செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களைத் தூய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்த எல்லா அக்கிரமங்களையும் பாவங்களையும் அவர்களுக்கு மன்னிப்பேன். நான் இப்பட்டணத்திற்குச் செய்த எல்லா நற்செயல்களையும் பூமியின் எல்லா தேசத்தார்களும் கேட்கும்போது, இந்தப் பட்டணம் எனக்குப் புகழையும், மகிழ்ச்சியையும், துதியையும், மகிமையையும் கொண்டுவரும். நான் அந்தப் பட்டணத்திற்குக் கொடுக்கும் நிறைவான செல்வத்தையும், சமாதானத்தையும் கண்டு அவர்கள் பிரமித்து நடுங்குவார்கள். யெகோவா கூறுவது இதுவே: மக்கள் இந்த இடத்தைக் குறித்து, இது மனிதரோ, மிருகங்களோ குடியிராத பாழிடம் என்பார்கள். அப்படியிருந்தும் மனிதரோ மிருகங்களோ குடியிராமல் பாழாய் கிடக்கின்ற, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும், சந்தோஷத்தின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணமகளின் குரலும், மணமகனின் குரலும் கேட்கும். அத்துடன், யெகோவாவின் ஆலயத்திற்கு நன்றிக் காணிக்கைகளைக் கொண்டுவருபவர்களின் குரல்களும் கேட்கும்: “சேனைகளின் யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்; யெகோவா நல்லவர்; அவருடைய அன்பு என்றும் நிலைத்து நிற்கும்” என்று சொல்வார்கள். நான், அவர்களுடைய நாட்டிற்கு முன்பு இருந்ததுபோல் செல்வத்தையெல்லாம் திரும்பவும் கொடுப்பேன் என்று யெகோவா கூறுகிறார். சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்த இடம் மனிதர்களோ, மிருகங்களோ இல்லாமல் பாழடைந்திருக்கும். ஆயினும் இதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களிலும் மீண்டும் தங்கள் மந்தையை மேய்ப்பதற்கான மேய்ச்சலிடங்கள் மேய்ப்பர்களுக்கு உண்டாயிருக்கும். மேற்கு மலைச்சரிவிலுள்ள பட்டணங்களிலும், நெகேவ் பிரதேசத்திலுள்ள பட்டணங்களிலும், பென்யமீன் பிரதேசத்திலும், எருசலேமைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் மீண்டும் தங்களைக் கணக்கெடுப்பவனின் கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று யெகோவா கூறுகிறார்.

எரேமியா 33:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எரேமியா இன்னும் காவல்நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போது, யெகோவாவுடைய வார்த்தை இரண்டாம்முறை அவனுக்கு உண்டாகி, அவர்: இதைச் செய்கிற கர்த்தருமாய், இதை உறுதிப்படுத்த இதை உண்டாக்குகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் பெயருள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்: என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு பதில் கொடுத்து, நீ அறியாததும் உனக்கு புரியாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். கோட்டை மதில்களினாலும் பட்டயத்தாலும் இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையும் குறித்து: இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பின் காரணமாக நான் என் முகத்தை மறைத்ததினால் என் கோபத்திலும் கடுங்கோபத்திலும் வெட்டப்பட்ட மனிதச் சடலங்களினால் அவைகளை நான் நிறைப்பதற்காகவே, அவர்கள் கல்தேயருடன் போர் செய்யப்போகிறார்கள். இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரச்செய்து, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து, அவர்கள் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை விலக்கிச் சுத்தப்படுத்தி, அவர்கள் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, எனக்கு விரோதமாகத் துரோகம் செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன். நான் அவர்களுக்குச் செய்யும் நன்மைகளையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா தேசங்களுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள புகழ்ச்சியாகவும் மகிமையாகவும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளும் எல்லா நன்மைக்காகவும், எல்லாச் சமாதானத்திற்காகவும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார். மனிதனில்லாமலும் மிருகமில்லாமலும் வெட்டவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனிதனாவது மிருகமாவது இல்லாமல் அழிக்கப்பட்ட எருசலேமின் வீதிகளிலும், இன்னும் கொண்டாட்டத்தின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணமகனின் சத்தமும், மணமகளின் சத்தமும்: சேனைகளின் யெகோவாவை துதியுங்கள், யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், யெகோவாவுடைய ஆலயத்திற்கு நன்றி பலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்தது போல இருப்பதற்கு தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார். மனிதனும் மிருகமும் இல்லாமல் வெட்டவெளியாக கிடக்கிற இவ்விடத்திலும், இதை சுற்றியுள்ள பட்டணங்களிலும், ஆட்டுமந்தையை மேய்த்துத் திருப்புகிற இடங்கள் உண்டாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களை எண்ணுகிறவனுடைய கைக்குள்ளாக நடந்துவரும் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 33:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தரிடமிருந்து வார்த்தை இரண்டாவது முறையாக எரேமியாவிற்கு வந்தது. எரேமியா இன்னும் காவல் முற்றத்தில் சிறைபட்டிருக்கிறான். “கர்த்தர் பூமியைச் செய்தார், அவர் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். கர்த்தர் என்பது அவரது நாமம். கர்த்தர் கூறுகிறார்: ‘யூதாவே, என்னிடம் ஜெபம் செய். நான் பதில் கூறுவேன். நான் முக்கியமான இரகசியங்களைக் கூறுவேன். நீ இதற்கு முன் இப்படிப்பட்ட காரியத்தை கேட்டதில்லை.’ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எருசலேமில் உள்ள வீடுகளைப்பற்றியும் யூதாவிலுள்ள ராஜாக்களின் அரண்மனைகளைப்பற்றியும் கூறுகிறார்: ‘பகைவர்கள் அவ்வீடுகளை இடித்துத் தள்ளுவார்கள். நகரச்சுவர்களில் உயரமான எடுசுவர்களைக் கட்டுவார்கள். பகைவர்கள் வாள்களைப் பயன்படுத்துவார்கள். இந்நகரங்களில் உள்ள ஜனங்களோடு சண்டையிடுவார்கள். “‘எருசலேமில் உள்ள ஜனங்கள் பல தீமைகளைச் செய்திருக்கின்றனர். நான் அந்த ஜனங்கள் மீது கோபமாக இருக்கிறேன். நான் அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறேன். எனவே நான் அங்கே பலப்பல ஜனங்களைக் கொல்வேன். பாபிலோனிய படை எருசலேமிற்கு எதிராகப் போரிட வரும். எருசலேமின் வீடுகளில் பற்பல மரித்த உடல்கள் கிடக்கும். “‘ஆனால் பிறகு அந்நகரில் உள்ள ஜனங்களை நான் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்). அந்த ஜனங்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும்படிச் செய்வேன். இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களை மீண்டும் கொண்டுவருவேன். அந்த ஜனங்களை முன்புபோல பலமுள்ளவர்களாகச் செய்வேன். அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஆனால் நான் அப்பாவத்தைக் கழுவுவேன். அவர்கள் எனக்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களை நான் மன்னிப்பேன். எருசலேம் ஒரு அற்புதமான இடமாகும். ஜனங்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களும் அதனைப் புகழுவார்கள். அந்த ஜனங்கள் அங்கே நல்லவை நடைபெறுவதைப் பற்றிக் கேள்விப்படும்போது இது நிகழும். எருசலேமிற்காக நான் செய்துக்கொண்டிருக்கும் நல்லவற்றைப்பற்றி அவர்கள் கேட்பார்கள்.’ “‘நமது நாடு வெறுமையான வனாந்தரமாக இருக்கிறது. அங்கே ஜனங்களோ மிருகங்களோ வாழவில்லை’ என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எருசலேம் தெருக்களும் யூதா நகரங்களும் இப்போது அமைதியாக இருக்கின்றன. ஆனால் விரைவில் அங்கு ஆரவாரம் ஏற்படும். அங்கே மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் உரிய ஓசைகள் கேட்கும். அங்கு மணமகள் மற்றும் மணமகனின் மகிழ்ச்சிகரமான ஓசை கேட்கும். கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் காணிக்கைகளைக் கொண்டு வரும் ஓசை கேட்கும். அந்த ஜனங்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய தயவு என்றென்றும் தொடரும்’ என்று கூறுவார்கள். ஜனங்கள் இதனைக் கூறுவார்கள். ஏனென்றால் நான் மீண்டும் யூதாவிற்கு நல்லவற்றைச் செய்வேன். இது தொடக்கத்தைப்போன்று இருக்கும்.” கர்த்தர் இவற்றைக் கூறினார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “இந்த இடம் இப்போது காலியாக இருக்கிறது. அங்கே மனிதர்களோ மிருகங்களோ வாழவில்லை. ஆனால், யூதாவின் எல்லா நகரங்களிலும் ஜனங்கள் இருப்பார்கள். அங்கு மேய்ப்பர்கள் இருப்பார்கள். மந்தைகள் ஓய்வு கொள்கிற மேய்ச்சல் நிலங்கள் இருக்கும். மேய்ப்பர்கள் தம் ஆடுகளை அவை அவர்கள் முன்பு இருக்கும்போது எண்ணுகின்றனர். ஜனங்கள் தம் ஆடுகளை நாட்டைச் சுற்றிலும் மலைநாட்டிலும் மேற்கு மலை அடிவாரங்களிலும் நெகேவிலும் யூதாவின் மற்ற நகரங்களிலும் எண்ணுவார்கள்” என்று கூறுகிறார்.

எரேமியா 33:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் அவனுக்கு உண்டாகி, அவர்: இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்: என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். எதிர்க் கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும் இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையுங்குறித்து: இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப் பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள். இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க்குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன். நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச் சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும், இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும்: சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்தது போலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மனுஷனும் மிருகமும் இல்லாமல் அவாந்தரவெளியாய்க்கிடக்கிற இவ்விடத்திலும், இதற்கடுத்த பட்டணங்களிலும், ஆட்டுமந்தையை மேய்த்து மடக்குகிற மேய்ப்பர்களின் தாபரங்கள் உண்டாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மலைதேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்