எரேமியா 33

33
புதுப்பித்தலுக்கு வாக்குத்தத்தம்
1எரேமியா இன்னும் காவற்கூடத்தின் முற்றத்திலேயே சிறைப்பட்டிருக்கும்போது, இரண்டாம் முறையும் யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்தது: 2பூமியைப் படைத்து அதை உருவாக்கி நிறுத்தியவர் யெகோவா. யெகோவா என்பது அவரது பெயர். அவர் கூறுவது இதுவே: 3நீ என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உனக்குப் பதிலளிப்பேன். நீ அறியாததும், உன்னால் ஆராய்ந்து அறிய முடியாததுமான பெரிய காரியங்களையும் நான் உனக்குச் சொல்லித்தருவேன். 4இப்பட்டணத்திலுள்ள வீடுகளைக் குறித்தும், யூதாவின் அரண்மனைகளைக் குறித்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவதாவது: இவற்றை நீங்கள் பாபிலோனியருடன் நடக்கும் சண்டையில் அவர்களுடைய வாளுக்கும், முற்றுகைக் கோட்டைகளுக்கும் எதிராகப் பயன்படுத்துவதற்காக உடைத்தீர்கள். 5பாபிலோனியரோ உள்ளே வருவார்கள். இந்த வீடுகளும், அரச அரண்மனைகளும் இறந்துபோன மனித உடல்களினால் நிரப்பப்படும். அவர்களை என்னுடைய கோபத்தினாலும், கடுங்கோபத்தினாலும் நானே கொல்லுவேன். இப்பட்டணத்தின் எல்லாக் கொடுமைகளினிமித்தம் நான் என் முகத்தை அதைவிட்டு மறைத்துக்கொள்வேன்.
6ஆயினும், நான் இப்பட்டணத்திற்குச் சுகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் காலம் வரும். என்னுடைய மக்களை நான் குணப்படுத்தி, அவர்கள் நிறைவான சமாதானத்தையும், சத்தியத்தையும் அனுபவித்து மகிழும்படி செய்வேன். 7நான் யூதாவையும், இஸ்ரயேலையும் சிறையிருப்பில் இருந்து மீட்டு, அவர்கள் முன்பிருந்த நிலைக்கு அவர்களைத் திரும்பவும் கட்டி எழுப்புவேன். 8அவர்கள் எனக்கு விரோதமாக செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களைத் தூய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்த எல்லா அக்கிரமங்களையும் பாவங்களையும் அவர்களுக்கு மன்னிப்பேன். 9நான் இப்பட்டணத்திற்குச் செய்த எல்லா நற்செயல்களையும் பூமியின் எல்லா தேசத்தார்களும் கேட்கும்போது, இந்தப் பட்டணம் எனக்குப் புகழையும், மகிழ்ச்சியையும், துதியையும், மகிமையையும் கொண்டுவரும். நான் அந்தப் பட்டணத்திற்குக் கொடுக்கும் நிறைவான செல்வத்தையும், சமாதானத்தையும் கண்டு அவர்கள் பிரமித்து நடுங்குவார்கள்.
10யெகோவா கூறுவது இதுவே: மக்கள் இந்த இடத்தைக் குறித்து, இது மனிதரோ, மிருகங்களோ குடியிராத பாழிடம் என்பார்கள். அப்படியிருந்தும் மனிதரோ மிருகங்களோ குடியிராமல் பாழாய் கிடக்கின்ற, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும், 11சந்தோஷத்தின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணமகளின் குரலும், மணமகனின் குரலும் கேட்கும். அத்துடன், யெகோவாவின் ஆலயத்திற்கு நன்றிக் காணிக்கைகளைக் கொண்டுவருபவர்களின் குரல்களும் கேட்கும்:
“சேனைகளின் யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்;
யெகோவா நல்லவர்;
அவருடைய அன்பு என்றும் நிலைத்து நிற்கும்” என்று சொல்வார்கள்.
நான், அவர்களுடைய நாட்டிற்கு முன்பு இருந்ததுபோல் செல்வத்தையெல்லாம் திரும்பவும் கொடுப்பேன் என்று யெகோவா கூறுகிறார்.
12சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்த இடம் மனிதர்களோ, மிருகங்களோ இல்லாமல் பாழடைந்திருக்கும். ஆயினும் இதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களிலும் மீண்டும் தங்கள் மந்தையை மேய்ப்பதற்கான மேய்ச்சலிடங்கள் மேய்ப்பர்களுக்கு உண்டாயிருக்கும். 13மேற்கு மலைச்சரிவிலுள்ள பட்டணங்களிலும், நெகேவ் பிரதேசத்திலுள்ள பட்டணங்களிலும், பென்யமீன் பிரதேசத்திலும், எருசலேமைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் மீண்டும் தங்களைக் கணக்கெடுப்பவனின் கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று யெகோவா கூறுகிறார்.
14இஸ்ரயேல் குடும்பத்திற்கும், யூதா குடும்பத்திற்கும் நான் கொடுத்த கிருபையான வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் நாட்கள் வருகின்றன என்று யெகோவா அறிவிக்கிறார்.
15“ ‘அந்த நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதின் சந்ததியிலிருந்து
ஒரு நேர்மையான கிளை முளைக்கும்படி செய்வேன்.
அவர் நாட்டில் நீதியானதையும், நியாயமானதையும் செய்வார்.
16அந்நாட்களில் யூதா காப்பாற்றப்படும்.
எருசலேம் பாதுகாப்புடன் வாழும்.
அது யெகோவாவே நமது நேர்மை
என்ற பெயரால் அழைக்கப்படும்.’
17ஏனெனில் யெகோவா கூறுவது இதுவே: ‘இஸ்ரயேல் குடும்பத்தின் அரியணையில் இருக்க தாவீதுக்கு ஒருவனாவது இல்லாமல் போவதில்லை. 18லேவியரான ஆசாரியர்களில் எனக்கு முன்பாக நின்று தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், மற்ற பலிகளையும் தொடர்ந்து செலுத்துவதற்கு ஒருவனாவது இல்லாமல் போவதும் இல்லை’ ” என்கிறார்.
19யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: 20யெகோவா சொல்வது இதுவே: “பகலும் இரவும் அவற்றிற்கென குறிக்கப்பட்ட காலத்தில் இனிமேல் வராதபடிக்கு, நான் அவைகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உங்களால் உடைக்க முடியுமானால், 21அப்பொழுது என் தாசனாகிய தாவீதுடனும், எனக்கு முன்பாக ஊழியம் செய்யும் லேவிய ஆசாரியருடனும் நான் செய்துகொண்ட உடன்படிக்கையையும் உடைக்க முடியும். தாவீதுக்கும் தன் அரியணையில் இருந்து ஆட்சிசெய்ய ஒரு சந்ததி இல்லாது போகும். 22நான் என் தாசனாகிய தாவீதின் வம்சத்தையும், எனக்கு முன்பாக ஊழியம் செய்கிற லேவியரையும் வானத்திலுள்ள எண்ணமுடியாத நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரையின் அளவற்ற மணலைப்போலவும் பெருகப்பண்ணுவேன் என்கிறார்” என்றான்.
23யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: 24“ ‘யெகோவா தாம் தெரிந்துகொண்ட இரு அரசுகளையும் நிராகரித்துவிட்டார் என்று இந்த மக்கள் சொல்வதை நீ கவனிக்கவில்லையோ’? ஆகவே அவர்கள் என் மக்களை அவமதித்து, அவர்களை ஒரு நாடாக எண்ணாதிருக்கிறார்கள். 25யெகோவா கூறுவது இதுவே: ‘பகலோடும், இரவோடும் நான் பண்ணின உடன்படிக்கையையும், வானத்திற்கும், பூமிக்கும் நான் விதித்த சட்டங்களையும் நான் நிலை நிறுத்தாமல் இருப்பேனானால், 26யாக்கோபின் வம்சத்தையும், என் தாசனாகிய தாவீதையும் நான் நிராகரிப்பேன். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்ததிகளை அரசாளுவதற்கு, தாவீதினுடைய மகன்களில் ஒருவனையும் நான் தெரிந்துகொள்ளவும் மாட்டேன். ஆனால் நானோ அவர்களுடைய செல்வங்கள் யாவற்றையும் திரும்பக் கொடுத்து, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்’ என்கிறார்” என்றான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எரேமியா 33: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்