எரேமியா 32:37-44
எரேமியா 32:37-44 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கடுஞ்சினத்தாலும் என் கோபத்தாலும் துரத்திவிட்ட எல்லா நாடுகளிலிருந்தும் நிச்சயமாக அவர்களைச் சேர்த்தெடுப்பேன். அவர்களைத் திரும்பவும் இந்த இடத்திற்குக் கொண்டுவந்து அவர்கள் பாதுகாப்புடன் வாழும்படி செய்வேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும், ஒரே மனதையும் கொடுப்பேன். அப்பொழுது அவர்கள் தங்கள் சொந்த நன்மைக்காகவும், தங்களுக்குப் பின்வரும் பிள்ளைகளின் நன்மைக்காகவும் என்றென்றைக்கும் எனக்குப் பயந்து நடப்பார்கள். நான் அவர்களோடு ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன். நான் அவர்களுக்கு நன்மை செய்வதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். அவர்கள் என்னைவிட்டுத் திரும்பாதபடி எனக்குப் பயப்படும் உணர்வை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்களுக்கு நன்மை செய்வதில் நான் மகிழ்ந்து, அவர்களை இந்த நாட்டில் நிச்சயமாக நிலைநாட்டுவேன். இதை என் முழு இருதயத்தோடும், என் முழு ஆத்துமாவோடும் செய்வேன். “யெகோவா கூறுவது இதுவே: இந்த மக்கள்மேல் இப்பேரிடரை நானே கொண்டுவந்தேன். ஆகவே நான் அவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி, எல்லா செல்வச் செழிப்பையும் அதிகமாய் அவர்களுக்குக் கொடுப்பேன். ‘அது மனிதர்களும், மிருகங்களும் இல்லாமல் பாழடைந்த நாடு என்றும், அது பாபிலோனியரின் கையில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்,’ நீங்கள் சொல்லும் இந்நாட்டிலே, மறுபடியும் வயல்கள் வாங்கப்படும். பென்யமீன் நாட்டிலும், எருசலேமைச் சூழ்ந்துள்ள கிராமங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மேற்கு மலைச்சரிவிலுள்ள நாட்டின் பட்டணங்களிலும், நெகேவ் பிரதேசத்திலும் வயல்கள் வெள்ளிக்கு வாங்கப்படும். பத்திரங்களுக்குக் கையெழுத்திட்டு முத்திரையிட்டு சாட்சிகளையும் வைப்பார்கள். ஏனெனில் நான் அவர்களுடைய செல்வங்களை திருப்பிக் கொடுப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.”
எரேமியா 32:37-44 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பிவரவும் இதில் சுகமாய்த் தங்கியிருக்கவும் செய்வேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்சந்ததியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாக எல்லா நாட்களிலும் எனக்குப் பயப்படுவதற்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லை என்கிற நிலையான உடன்படிக்கையை அவர்களுடன் செய்து, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாமலிருக்க, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்தில் வைத்து, அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்தில் நிச்சயமாய் நாட்டுவேன். நான் இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரச்செய்ததுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். மனிதனும் மிருகமும் இல்லாதபடி அழிந்துபோனது என்றும், கல்தேயரின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்தில் நிலங்கள் வாங்கப்படும். பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைப்பாங்கான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாக வாங்கப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.
எரேமியா 32:37-44 பரிசுத்த பைபிள் (TAERV)
‘இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்கள் தங்கள் நாட்டைவிட்டு போகும்படி நான் வற்புறுத்தினேன். அந்த ஜனங்களோடு நான் கோபமாக இருந்தேன். ஆனால், நான் அவர்களை மீண்டும் இந்த இடத்திற்குக் கொண்டு வருவேன். நான் எங்கே போகும்படி வற்புறுத்தினேனோ அங்கே அவர்களை மீண்டும் சேகரிப்பேன். இந்த இடத்திற்கு நான் மீண்டும் கொண்டு வருவேன். அவர்களை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழவிடுவேன். இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் எனது ஜனங்கள் ஆவார்கள். நான் அவர்களது உண்மையாக தேவன் ஆவேன். நான் அவர்கள் ஒரே ஜனங்களாக இருப்பதற்கான ஆசையைக் கொடுப்பேன். அவர்களுக்கு ஒரே நோக்கம் இருக்கும். தம் வாழ்நாள் முழுவதும் என்னை உண்மையாக வழிபட விரும்புவார்கள். அவர்கள் உண்மையாகவே அதைச் செய்ய விரும்புவார்கள். அவர்கள் பிள்ளைகளும் அவ்வாறே செய்வார்கள். “‘நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்வேன். இந்த உடன்படிக்கை என்றென்றும் இருக்கும். இந்த உடன்படிக்கையில் நான் அந்த ஜனங்களிடம் இருந்து என்றென்றும், திரும்பமாட்டேன். நான் எப்பொழுதும் அவர்களுக்கு நல்லவனாக இருப்பேன். அவர்கள் என்னை மதிக்க விரும்பும்படிச் செய்வேன். பிறகு அவர்கள் என்னிடமிருந்து விலகமாட்டார்கள். அவர்கள் என்னை மகிழ்ச்சி அடையும்படிச் செய்வார்கள். நான் அவர்களுக்கு நன்மை செய்வதில் மகிழ்வேன். நான் அவர்களை இந்த தேசத்தில் உறுதியாகவே நட்டு வளரும்படிச் செய்வேன். நான் இதனை எனது மனப்பூர்வமாகவும் ஆத்மபூர்வமாகவும் செய்வேன்.’” இதுதான் கர்த்தர் சொல்கிறது: “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு நான் இந்த பெரும் அழிவைக் கொண்டு வந்திருக்கிறேன். அதே வழியில் அவர்களுக்கு நான் நன்மையை செய்வேன். நான் அவர்களுக்கு நன்மை செய்வதாக உறுதி கூறுகிறேன். ஜனங்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள், ‘இத்தேசம் ஒரு காலியான வனாந்தரம். இங்கே ஜனங்களோ மிருகங்களோ இல்லை. பாபிலோனிய படை இந்நாட்டை அழித்துவிட்டது.’ ஆனால் எதிர்காலத்தில், ஜனங்கள் மீண்டும் ஒருமுறை வயல்களை விலைக்கு வாங்குவார்கள். ஜனங்கள் தம் பணத்தைப் பயன்படுத்தி வயல்களை வாங்குவார்கள். அவர்கள் கையெழுத்திட்டு தம் உடன்படிக்கையை முத்திரையிடுவார்கள். ஜனங்களது பத்திரங்களுக்கு ஜனங்கள் சாட்சி ஆவார்கள். ஜனங்கள் மீண்டும் இத்தேசத்தில் வயல்களை வாங்குவார்கள். இது பென்யமீன் கோத்திரம் வாழ்கிற இடம். எருசலேமைச் சுற்றியுள்ள இடங்களில் அவர்கள் வயலை வாங்குவார்கள். யூதா தேசத்திலுள்ள நகரங்களிலும் மலை நாட்டிலும் வடக்கு மலை அடிவாரங்களிலும் தென் வனாந்தரப் பகுதிகளிலும் அவர்கள் வயல்களை வாங்குவர். அது நிகழும். ஏனென்றால், நான் உங்கள் ஜனங்களை மீண்டும் இங்கே கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 32:37-44 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப் பயப்படும்பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன். நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மனுஷனும் மிருகமுமில்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும். பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.