எரே 32:37-44

எரே 32:37-44 IRVTAM

இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பிவரவும் இதில் சுகமாய்த் தங்கியிருக்கவும் செய்வேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்சந்ததியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாக எல்லா நாட்களிலும் எனக்குப் பயப்படுவதற்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லை என்கிற நிலையான உடன்படிக்கையை அவர்களுடன் செய்து, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாமலிருக்க, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்தில் வைத்து, அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்தில் நிச்சயமாய் நாட்டுவேன். நான் இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரச்செய்ததுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். மனிதனும் மிருகமும் இல்லாதபடி அழிந்துபோனது என்றும், கல்தேயரின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்தில் நிலங்கள் வாங்கப்படும். பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைப்பாங்கான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாக வாங்கப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.