எரேமியா 29:4-14
எரேமியா 29:4-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா, தான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தி அனுப்பிய யாவருக்கும் சொல்வதாவது: “நீங்கள் வீடுகளைக் கட்டி, அவைகளில் வாழுங்கள். தோட்டங்களை நாட்டி அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் திருமணம் செய்து மகன்களையும், மகள்களையும் பெற்றெடுங்கள். உங்கள் மகன்களுக்கு மனைவிகளைத் தேடுங்கள். உங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுங்கள். அவர்களும் மகன்களையும், மகள்களையும் பெறட்டும். எண்ணிக்கையில் பெருகுங்கள்; குறைந்து போகாதிருங்கள். நான் உங்களை நாடுகடத்தி அனுப்பிய பட்டணத்தின் சமாதானத்தையும், செழிப்பையும் தேடுங்கள். அதற்காக யெகோவாவிடம் மன்றாடுங்கள். ஏனெனில் பட்டணம் செழித்தால், நீங்களும் செழிப்பீர்கள்.” ஆம், இஸ்ரயேலின் சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “உங்கள் மத்தியிலுள்ள இறைவாக்கினரும், குறிசொல்பவர்களும், உங்களை ஏமாற்ற விடவேண்டாம். கனவுகளைக் காணச்செய்கிற அவர்களுக்கு நீங்கள் செவிகொடாமலும் இருங்கள். அவர்கள் என் பெயரில் உங்களுக்குப் பொய்களையே இறைவாக்காகக் கூறுகிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். யெகோவா சொல்வதாவது: “பாபிலோனுக்கு எழுபது வருடங்கள் நிறைவேறிய பின்பு, நான் உங்களிடம் வந்து மீண்டும் உங்களை இந்த இடத்திற்குக் கொண்டுவருவேன் எனக்கூறிய, எனது நல்ல வார்த்தையை நிறைவேற்றுவேன். உங்களுக்காக நான் வைத்திருக்கும் என் திட்டங்களை நானே அறிவேன்.” அவைகள், “உங்களுக்குத் தீமை விளைவிக்கும் திட்டங்களல்ல, அவை உங்களுக்கு ஒரு செழிப்பான வாழ்வையும், நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுக்கும் திட்டங்களே என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூப்பிட்டு, என்னிடம் வந்து மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது, நீங்கள் என்னைத் தேடிக் கண்டடைவீர்கள். நீங்கள் என்னைக் கண்டுகொள்ளும்படி நான் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் உங்களைச் சிறையிருப்பிலிருந்து மீண்டும் கொண்டுவருவேன். நான் உங்களை நாடுகடத்திய எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா இடங்களிலிருந்தும் உங்களை ஒன்றுசேர்ப்பேன்; எங்கிருந்து நான் உங்களை நாடுகடத்தி அனுப்பினேனோ அந்த இடத்திற்கு உங்களைத் திரும்பவும் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 29:4-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா, தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகச்செய்த அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால், நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் பெண்களை திருமணம்செய்து, மகன்களையும் மகள்களையும் பெற்று, உங்கள் மகன்களுக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் மகள்களை ஆண்களுக்குக் கொடுங்கள்; இவர்களும் மகன்களையும் மகள்களையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி, நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகச்செய்த பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் யெகோவாவிடம் விண்ணப்பம்செய்யுங்கள்; அதற்குச் சமாதானம் இருக்கும்போது உங்களுக்கும் சமாதானமிருக்கும். மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; சொப்பனம் காணச்செய்கிற உங்கள் சொப்பனக்காரர் சொல்வதைக் கேட்காமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். அவர்கள் என் பெயரைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பவில்லை என்று யெகோவா சொல்லுகிறார். பாபிலோனில் எழுபது வருடங்கள் முடிந்தபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்திற்குத் திரும்பிவரச்செய்ய உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்திற்கு உகந்த நினைவுகளே. அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்செய்வீர்கள்; நான் உங்கள் விண்ணப்பத்தை கேட்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுவீர்கள் என்றால், என்னைத் தேடும்போது கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த இடத்துக்கே உங்களைத் திரும்பிவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 29:4-14 பரிசுத்த பைபிள் (TAERV)
சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாக அனுப்பப்பட்ட அனைவருக்கும் இதைக் கூறுகிறார்: “வீடுகளைக் கட்டி அவற்றில் வாழுங்கள். நாட்டில் குடியிருங்கள். தோட்டங்களை அமைத்து அதில் வளர்ந்த கனிகளை உண்ணுங்கள். திருமணம் செய்துக்கொண்டு குமாரர்கள் மற்றும் குமாரத்திகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குமாரர்களுக்கு மனைவியர்களைக் கண்டுக்கொள்ளுங்கள். உங்கள் குமாரத்திகள் மணந்துக்கொள்ளும்படிச் செய்யுங்கள். அவ்வாறு செய்தால், அவர்களுக்கும் குமாரர்களும் குமாரத்திகளும் பிறப்பார்கள். பல குழந்தைகளைப் பெற்று பாபிலோனில் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். எண்ணிக்கையில் குறைவாக இருக்காதீர்கள். நான் உங்களை அனுப்பிய நகரத்திற்கு நல்லவற்றைச் செய்யுங்கள். நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிற நகரத்திற்காக கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள். ஏனென்றால், அந்நகரத்தில் சமாதானம் இருந்தால், நீங்களும் சமாதானமாக இருக்கலாம்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுகிறார். “உங்களது தீர்க்கதரிசிகளும் மந்திரம் பழகும் ஜனங்களும் உங்களை முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் வைத்துள்ள கனவுகளைக் கேட்காதீர்கள். அவர்கள் பொய்களைப் பிரச்சாரம் செய்கிறார்கள். அச்செய்தி என்னிடமிருந்து வந்ததாக அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார். இதுதான் கர்த்தர் சொல்லுகிறது: “பாபிலோன் 70 ஆண்டுகளுக்கு வல்லமையுடையதாக இருக்கும். அக்காலத்திற்குப் பிறகு, பாபிலோனில் வாழ்கிற உங்களிடம் வருவேன். என்னுடைய நல்ல வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். உங்களை எருசலேமிற்கு மீண்டும் கொண்டுவருவேன். நான் இதனைக் கூறுகிறேன் ஏனென்றால், உங்களுக்காக நான் வைத்துள்ள திட்டங்களை நானறிவேன்” இச்செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் உங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறேன். நான் உங்களை துன்புறுத்தும் வகையில் திட்டமிடமாட்டேன். உங்களுக்கு நம்பிக்கையைத் தரவும் நல்ல எதிர்காலம் அமையவும் நான் திட்டமிடுகிறேன். பிறகு, ஜனங்களாகிய நீங்கள் எனது நாமத்தை அழைப்பீர்கள். நீங்கள் என்னிடம் வருவீர்கள்: ஜெபம் செய்வீர்கள், நான் உங்களை கவனிப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் முழு மனதோடு என்னைத் தேடினால் என்னைக் கண்டுப்பிடிக்கலாம். நீங்கள் என்னைக் கண்டுப்பிடிக்க அனுமதிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “உங்கள் சிறையிலிருந்து திரும்பவும் நான் உங்களைக் கொண்டுவருவேன். இந்த இடத்திலிருந்து போகும்படி நான் உங்களை கட்டாயப்படுத்தினேன். ஆனால் உங்களை எங்கெங்கு அனுப்பினேனோ அங்கங்கிருந்தெல்லாம் அழைத்துச் சேர்ப்பேன். உங்களைக் கைதிகளாய் கொண்டுப்போகச் செய்த இந்த இடத்திற்கே மீண்டும் உங்களைக் கொண்டுவருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 29:4-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர், தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால், நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி, நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும். மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம் போக்கவொட்டாதிருங்கள்; சொப்பனம் காணப்பண்ணுகிற உங்கள் சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.