எரே 29:4-14

எரே 29:4-14 IRVTAM

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா, தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகச்செய்த அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால், நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் பெண்களை திருமணம்செய்து, மகன்களையும் மகள்களையும் பெற்று, உங்கள் மகன்களுக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் மகள்களை ஆண்களுக்குக் கொடுங்கள்; இவர்களும் மகன்களையும் மகள்களையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி, நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகச்செய்த பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் யெகோவாவிடம் விண்ணப்பம்செய்யுங்கள்; அதற்குச் சமாதானம் இருக்கும்போது உங்களுக்கும் சமாதானமிருக்கும். மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; சொப்பனம் காணச்செய்கிற உங்கள் சொப்பனக்காரர் சொல்வதைக் கேட்காமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். அவர்கள் என் பெயரைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பவில்லை என்று யெகோவா சொல்லுகிறார். பாபிலோனில் எழுபது வருடங்கள் முடிந்தபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்திற்குத் திரும்பிவரச்செய்ய உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்திற்கு உகந்த நினைவுகளே. அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்செய்வீர்கள்; நான் உங்கள் விண்ணப்பத்தை கேட்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுவீர்கள் என்றால், என்னைத் தேடும்போது கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த இடத்துக்கே உங்களைத் திரும்பிவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.