எரேமியா 29:1-7

எரேமியா 29:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எகொனியா என்னும் ராஜாவும், ராஜஸ்திரீயும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போனபிற்பாடு, எரேமியா தீர்க்கதரிசி சிறைப்பட்டுப்போன மூப்பர்களில் மீதியானவர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், நேபுகாத்நேச்சார் சிறைப்படுத்தி எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோன சகல ஜனங்களுக்கும் எழுதி, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொடுக்கும்படி சாப்பானின் குமாரனாகிய எலெயாசாரின் கையிலும், இல்க்கியாவின் குமாரனாகிய கெமரியாவின் கையிலும் கொடுத்து, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பின நிருபத்தின் விபரம்: இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர், தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால், நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி, நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.

எரேமியா 29:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நேபுகாத்நேச்சாரினால், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு எரேமியா ஒரு கடிதம் எழுதினான்: அதை அவன் எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் தப்பியிருந்த முதியோர், ஆசாரியர்கள், இறைவாக்கு உரைப்போர் ஆகியோருக்கும் மற்றும் எல்லா மக்களுக்கும் அனுப்பினான். இக்கடிதம் எகொனியா அரசனும், தாய் அரசியும், அரச அதிகாரிகளும், யூதாவிலும் எருசலேமிலுமிருந்த தலைவர்களும், கைவினைஞரும், தொழில் வல்லுநர்களும், எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டுப் போனபின்பு எழுதப்பட்டது. எரேமியா அக்கடிதத்தை சாப்பானின் மகன் எலெயாசாரிடமும், இல்க்கியாவின் மகன் கெமரியாவிடமும் ஒப்படைத்தான். அவர்களை யூதா அரசன் சிதேக்கியா, பாபிலோனிலுள்ள அரசன் நேபுகாத்நேச்சாரிடம் அனுப்பினான். அந்தக் கடிதத்தில்: இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா, தான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தி அனுப்பிய யாவருக்கும் சொல்வதாவது: “நீங்கள் வீடுகளைக் கட்டி, அவைகளில் வாழுங்கள். தோட்டங்களை நாட்டி அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் திருமணம் செய்து மகன்களையும், மகள்களையும் பெற்றெடுங்கள். உங்கள் மகன்களுக்கு மனைவிகளைத் தேடுங்கள். உங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுங்கள். அவர்களும் மகன்களையும், மகள்களையும் பெறட்டும். எண்ணிக்கையில் பெருகுங்கள்; குறைந்து போகாதிருங்கள். நான் உங்களை நாடுகடத்தி அனுப்பிய பட்டணத்தின் சமாதானத்தையும், செழிப்பையும் தேடுங்கள். அதற்காக யெகோவாவிடம் மன்றாடுங்கள். ஏனெனில் பட்டணம் செழித்தால், நீங்களும் செழிப்பீர்கள்.”

எரேமியா 29:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எகொனியா என்னும் ராஜாவும், ராஜாவின் தாயாரும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போனபிறகு, எரேமியா தீர்க்கதரிசி சிறைப்பட்டுப்போன மூப்பர்களில் மீதியானவர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், நேபுகாத்நேச்சார் சிறைப்படுத்தி எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோன எல்லா மக்களுக்கும் எழுதி, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொடுக்கும்படி சாப்பானின் மகனாகிய எலெயாசாரின் கையிலும், இல்க்கியாவின் மகனாகிய கெமரியாவின் கையிலும் கொடுத்து, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிய கடிதத்தின் விபரம்: இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா, தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகச்செய்த அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால், நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் பெண்களை திருமணம்செய்து, மகன்களையும் மகள்களையும் பெற்று, உங்கள் மகன்களுக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் மகள்களை ஆண்களுக்குக் கொடுங்கள்; இவர்களும் மகன்களையும் மகள்களையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி, நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகச்செய்த பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் யெகோவாவிடம் விண்ணப்பம்செய்யுங்கள்; அதற்குச் சமாதானம் இருக்கும்போது உங்களுக்கும் சமாதானமிருக்கும்.

எரேமியா 29:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

எரேமியா பாபிலோனிலுள்ள யூதா கைதிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினான். பாபிலோனில் உள்ள மூப்பர்களுக்கும் (தலைவர்கள்) ஆசாரியர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் மற்ற ஜனங்களுக்கும் அவன் அதனை அனுப்பினான். இந்த ஜனங்களெல்லாம் நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள். (இந்தக் கடிதம், எகொனியா ராஜாவும், அரச மாதாவும், அதிகாரிகளும், யூதா, எருசலேம் மற்றும் யூதா தலைவர்களும், தச்சர்களும் கொல்லர்களும் எருசலேமிலிருந்து கொண்டு செல்லப்பட்டப் பிறகு அனுப்பப்பட்டது). சிதேக்கியா எலெயாசா மற்றும் கெமரியாவை நேபுகாத்நேச்சார் ராஜாவிடம் அனுப்பினான். சிதேக்கியா யூதாவின் ராஜா. எலெயாசா சாப்பானின் குமாரன். கெமரியா இலக்கியாவின் குமாரன். எரேமியா அவர்களிடம் பாபிலோனுக்கு கொண்டு செல்லுமாறு கடிதத்தைக் கொடுத்தான். கடிதம் சொன்னது இதுதான்: சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாக அனுப்பப்பட்ட அனைவருக்கும் இதைக் கூறுகிறார்: “வீடுகளைக் கட்டி அவற்றில் வாழுங்கள். நாட்டில் குடியிருங்கள். தோட்டங்களை அமைத்து அதில் வளர்ந்த கனிகளை உண்ணுங்கள். திருமணம் செய்துக்கொண்டு குமாரர்கள் மற்றும் குமாரத்திகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குமாரர்களுக்கு மனைவியர்களைக் கண்டுக்கொள்ளுங்கள். உங்கள் குமாரத்திகள் மணந்துக்கொள்ளும்படிச் செய்யுங்கள். அவ்வாறு செய்தால், அவர்களுக்கும் குமாரர்களும் குமாரத்திகளும் பிறப்பார்கள். பல குழந்தைகளைப் பெற்று பாபிலோனில் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். எண்ணிக்கையில் குறைவாக இருக்காதீர்கள். நான் உங்களை அனுப்பிய நகரத்திற்கு நல்லவற்றைச் செய்யுங்கள். நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிற நகரத்திற்காக கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள். ஏனென்றால், அந்நகரத்தில் சமாதானம் இருந்தால், நீங்களும் சமாதானமாக இருக்கலாம்.”