எரேமியா 29:1-7

எரேமியா 29:1-7 TCV

நேபுகாத்நேச்சாரினால், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு எரேமியா ஒரு கடிதம் எழுதினான்: அதை அவன் எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் தப்பியிருந்த முதியோர், ஆசாரியர்கள், இறைவாக்கு உரைப்போர் ஆகியோருக்கும் மற்றும் எல்லா மக்களுக்கும் அனுப்பினான். இக்கடிதம் எகொனியா அரசனும், தாய் அரசியும், அரச அதிகாரிகளும், யூதாவிலும் எருசலேமிலுமிருந்த தலைவர்களும், கைவினைஞரும், தொழில் வல்லுநர்களும், எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டுப் போனபின்பு எழுதப்பட்டது. எரேமியா அக்கடிதத்தை சாப்பானின் மகன் எலெயாசாரிடமும், இல்க்கியாவின் மகன் கெமரியாவிடமும் ஒப்படைத்தான். அவர்களை யூதா அரசன் சிதேக்கியா, பாபிலோனிலுள்ள அரசன் நேபுகாத்நேச்சாரிடம் அனுப்பினான். அந்தக் கடிதத்தில்: இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா, தான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தி அனுப்பிய யாவருக்கும் சொல்வதாவது: “நீங்கள் வீடுகளைக் கட்டி, அவைகளில் வாழுங்கள். தோட்டங்களை நாட்டி அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் திருமணம் செய்து மகன்களையும், மகள்களையும் பெற்றெடுங்கள். உங்கள் மகன்களுக்கு மனைவிகளைத் தேடுங்கள். உங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுங்கள். அவர்களும் மகன்களையும், மகள்களையும் பெறட்டும். எண்ணிக்கையில் பெருகுங்கள்; குறைந்து போகாதிருங்கள். நான் உங்களை நாடுகடத்தி அனுப்பிய பட்டணத்தின் சமாதானத்தையும், செழிப்பையும் தேடுங்கள். அதற்காக யெகோவாவிடம் மன்றாடுங்கள். ஏனெனில் பட்டணம் செழித்தால், நீங்களும் செழிப்பீர்கள்.”