எரேமியா 28:10-16
எரேமியா 28:10-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது இறைவாக்கினன் அனனியா, இறைவாக்கினன் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான். அதன்பின் அனனியா எல்லா மக்களுக்கு முன்பாகவும், “யெகோவா கூறுவது இதுவே: இதைப்போலவே நான் எல்லா தேசத்தாரின் கழுத்திலிருந்தும், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் நுகத்தை இரண்டு வருடங்களுக்குள் உடைத்துப்போடுவேன் என்கிறார்” என்றான். இதைக் கேட்ட இறைவாக்கினன் எரேமியா தன் வழியே போனான். இறைவாக்கினன் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை இறைவாக்கினன் அனனியா முறித்துப்போட்ட சற்று நேரத்திற்குப்பின் எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது: அவர் அவனிடம், நீ போய் அனனியாவிடம், “யெகோவா சொல்வது இதுவே: நீ மரத்தினாலான நுகத்தை உடைத்து விட்டாய்; ஆனால், அதற்குப் பதிலாக இரும்பினாலான நுகம் உனக்குக் கிடைக்கும். இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: இந்த எல்லா நாடுகளும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்குப் பணிசெய்யும்படி அவர்களுடைய கழுத்தின்மேல் இரும்பு நுகத்தை வைப்பேன். அவர்கள் அவனுக்குப் பணிசெய்வார்கள். காட்டு மிருகங்களின்மேலும் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுப்பேன் என்று சொல்” என்றார். அப்பொழுது இறைவாக்கினன் எரேமியா, இறைவாக்கினன் அனனியாவிடம், “அனனியாவே! கேள், யெகோவா உன்னை அனுப்பவில்லை; ஆயினும் இந்த மக்கள் பொய்யை நம்பும்படி நீ அவர்களை தூண்டிவிட்டிருக்கிறாய். ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: நான் உன்னைப் பூமியிலிருந்து நீக்கிவிடப் போகிறேன். நீ யெகோவாவுக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசங்கித்திருக்கிறபடியால், இந்த வருடத்திலேயே நீ சாகப்போகிறாய்” என்றான்.
எரேமியா 28:10-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான். பின்பு அனனியா எல்லா மக்களுக்கு முன்பாகவும்: இந்தப் பிரகாரமாக இரண்டு வருடகாலத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தை எல்லா மக்களின் கழுத்துகளிலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியே போனான். அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்ட பிற்பாடு, யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்: நீ போய், அனனியாவை நோக்கி: நீ மர நுகத்தை உடைத்தாய்; அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தை உண்டாக்கு என்று யெகோவா சொன்னார். பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைப் பணியும்படிக்கு இரும்பு நுகத்தை இந்த எல்லா தேசத்து மக்களுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார். பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; யெகோவா உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த மக்களைப் பொய்யை நம்பச் செய்தாய். ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இல்லாமல் அகற்றிவிடுவேன்; இந்த வருடத்தில் நீ இறந்துபோவாய் என்று யெகோவா சொல்லுகிறார்; யெகோவாவுக்கு விரோதமாய்க் கலகம் ஏற்படப் பேசினாயே என்றான்.
எரேமியா 28:10-16 பரிசுத்த பைபிள் (TAERV)
எரேமியா தன் கழுத்தைச்சுற்றி நுகத்தை அணிந்துக்கொண்டான். பிறகு அனனியா தீர்க்கதரிசி அந்த நுகத்தை எரேமியாவின் கழுத்திலிருந்து எடுத்தான். அனனியா அந்நுகத்தை உடைத்தான். பிறகு அனனியா உரக்கப் பேசினான், எனவே அனைத்து ஜனங்களாலும் கேட்க முடிந்தது. அவன், “கர்த்தர் கூறுகிறார்: ‘இதே மாதிரி நான் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் ஆட்சியை உடைப்பேன். அவன் அந்நுகத்தை உலகிலுள்ள அனைத்து நாடுகள் மேலும் வைத்தான். இரண்டு ஆண்டுகள் முடியுமுன்னால் நான் அந்நுகத்தை உடைப்பேன்’” என்றான். அதனை அனனியா சொன்ன பிறகு, எரேமியா ஆலயத்தை விட்டுச் சென்றான். பிறகு கர்த்தருடைய செய்தி எரேமியாவிற்கு வந்தது. இது, அனனியா எரேமியாவின் கழுத்திலிருந்து நுகத்தை எடுத்து உடைத்தப் பிறகு நிகழ்ந்தது. கர்த்தர் எரேமியாவிடம் சொன்னார், “போய் அனனியாவிடம் சொல். ‘இதைத்தான் கர்த்தர் கூறுகிறார். நீ ஒரு மரநுகத்தை உடைத்து விட்டாய். நான் மரநுகத்தின் இடத்தில் இரும்பாலான நுகத்தை வைப்பேன்.’ சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘இந்த அனைத்து நாடுகளின் கழுத்துகளிலும் இரும்பு நுகத்தைப் பூட்டுவேன். அவர்கள் அனைவரும் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சருக்கு சேவை செய்யும்படிச் செய்வேன். அவர்கள் அவனுக்கு அடிமைகளாக இருப்பார்கள். நேபுகாத்நேச்சருக்குக் காட்டு மிருகங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொடுப்பேன்.’” பிறகு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசியிடம் சொன்னான், “அனனியா, கவனி! கர்த்தர் உன்னை அனுப்பவில்லை. ஆனால் நீ யூதாவின் ஜனங்களைப் பொய்யை நம்பச்செய்தாய். எனவே கர்த்தர் இதைத்தான் சொல்கிறார்: ‘அனனியா, உன்னை இந்த உலகத்தை விட்டு விரைவில் எடுத்துவிடுவேன். இந்த ஆண்டில் நீ மரிப்பாய். ஏனென்றால் நீ ஜனங்களை கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படிக் கற்பித்தாய்.’”
எரேமியா 28:10-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான். பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப் பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியே போனான். அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்ட பிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்: நீ போய், அனனியாவை நோக்கி: நீ மரநுகத்தை உடைத்தாய்; அதற்குப்பதிலாக இரும்பு நுகத்தை உண்டுபண்ணு என்று கர்த்தர் சொன்னார். பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இரும்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய். ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.