எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 28

28
பொய்த் தீர்க்கதரிசி அனனியா
1யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவின் ஆட்சியாண்டான நாலாம் வருஷம் ஐந்தாம் மாதம், அனனியா என்னும் தீர்க்கதரிசி என்னிடம் பேசினான். அனனியா அசூர் என்பவனின் குமாரன். அனனியா கிபியோன் என்னும் நகரத்தினன். அனனியா என்னிடம் பேசும்போது, அவன் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தான். ஆசாரியர்களும் மற்ற ஜனங்களும் அங்கு இருந்தனர். அனனியா சொன்னது இதுதான்: 2“சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் சொல்கிறார்: ‘யூதா ஜனங்களின் மேல் பாபிலோன் ராஜாவால் போடப்பட்ட நுகத்தை நான் உடைப்பேன். 3இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னால், பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து எடுத்துச்சென்ற எல்லாப் பொருட்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை பாபிலோனுக்கு எடுத்துச் சென்றிருக்கிறான். ஆனால் நான் அப்பொருட்களை இங்கே எருசலேமிற்குக் கொண்டு வருவேன். 4நான் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவையும் இந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வருவேன். எகொனியா யோயாக்கீமின் குமாரன், நேபுகாத்நேச்சார் பலவந்தப்படுத்தி வீட்டைவிட்டு அழைத்து பாபிலோனுக்குச் சென்ற ஜனங்கள் அனைவரையும் திரும்பக் கொண்டுவருவேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘எனவே யூதாவின் ஜனங்கள் மீது பாபிலோன் ராஜாவால் போடப்பட்ட நுகத்தை நான் உடைப்பேன்!’”
5பிறகு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசிக்கு பதில் சொன்னான். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் நின்று கொண்டிருந்தனர். எரேமியாவின் பதிலை ஆசாரியர்களும் அங்குள்ள அனைத்து ஜனங்களும் கேட்க முடிந்தது. 6எரேமியா அனனியாவிடம் “ஆமென்! கர்த்தர் இவற்றைச் செய்வார் என்று நான் உண்மையில் நம்புகிறேன்! நீ பிரச்சாரம் செய்கிற இச்செய்தியை கர்த்தர் உண்மையாகும்படி செய்வார். பாபிலோனிலிருந்து கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள பொருட்களை எல்லாம் திரும்பக் கொண்டுவருவார் என்று நம்புகிறேன். தங்கள் வீடுகளிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து ஜனங்களையும் இந்த இடத்திற்குத் திரும்பவும் கர்த்தர் கொண்டுவருவார் என்று நான் நம்புகிறேன்.
7“ஆனால் நான் சொல்லவேண்டியதை கவனி, அனனியா, ஜனங்கள் அனைவருக்கும் நான் என்ன சொல்கிறேன் என்பதையும் கவனி. 8நீயும் நானும் தீர்க்கதரிசிகளாக வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்பு சில தீர்க்கதரிசிகள் இருந்தனர். போர், பசி, பயங்கரமான நோய் ஆகியவை பல நாடுகளுக்கும், பெரும் இராஜ்யங்களுக்கும் ஏற்படும் என்று அவர்கள் பிரச்சாரம் செய்தனர். 9ஆனால் பிரச்சாரம் செய்கிற தீர்க்கதரிசி நமக்கு சமாதானம் வரும் என்று சொன்னால் அவன் கர்த்தரால் அனுப்பப்பட்டவனா என்பதை நாம் சோதித்து பார்க்க வேண்டும். தீர்க்கதரிசி சொன்ன செய்தி உண்மையானால் பிறகு ஜனங்கள் அவன் உண்மையில் கர்த்தரால் அனுப்பப்பட்டவன் என்பதை அறிவார்கள்.”
10எரேமியா தன் கழுத்தைச்சுற்றி நுகத்தை அணிந்துக்கொண்டான். பிறகு அனனியா தீர்க்கதரிசி அந்த நுகத்தை எரேமியாவின் கழுத்திலிருந்து எடுத்தான். அனனியா அந்நுகத்தை உடைத்தான். 11பிறகு அனனியா உரக்கப் பேசினான், எனவே அனைத்து ஜனங்களாலும் கேட்க முடிந்தது. அவன், “கர்த்தர் கூறுகிறார்: ‘இதே மாதிரி நான் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் ஆட்சியை உடைப்பேன். அவன் அந்நுகத்தை உலகிலுள்ள அனைத்து நாடுகள் மேலும் வைத்தான். இரண்டு ஆண்டுகள் முடியுமுன்னால் நான் அந்நுகத்தை உடைப்பேன்’” என்றான்.
அதனை அனனியா சொன்ன பிறகு, எரேமியா ஆலயத்தை விட்டுச் சென்றான்.
12பிறகு கர்த்தருடைய செய்தி எரேமியாவிற்கு வந்தது. இது, அனனியா எரேமியாவின் கழுத்திலிருந்து நுகத்தை எடுத்து உடைத்தப் பிறகு நிகழ்ந்தது. 13கர்த்தர் எரேமியாவிடம் சொன்னார், “போய் அனனியாவிடம் சொல். ‘இதைத்தான் கர்த்தர் கூறுகிறார். நீ ஒரு மரநுகத்தை உடைத்து விட்டாய். நான் மரநுகத்தின் இடத்தில் இரும்பாலான நுகத்தை வைப்பேன்.’ 14சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘இந்த அனைத்து நாடுகளின் கழுத்துகளிலும் இரும்பு நுகத்தைப் பூட்டுவேன். அவர்கள் அனைவரும் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சருக்கு சேவை செய்யும்படிச் செய்வேன். அவர்கள் அவனுக்கு அடிமைகளாக இருப்பார்கள். நேபுகாத்நேச்சருக்குக் காட்டு மிருகங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொடுப்பேன்.’”
15பிறகு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசியிடம் சொன்னான், “அனனியா, கவனி! கர்த்தர் உன்னை அனுப்பவில்லை. ஆனால் நீ யூதாவின் ஜனங்களைப் பொய்யை நம்பச்செய்தாய். 16எனவே கர்த்தர் இதைத்தான் சொல்கிறார்: ‘அனனியா, உன்னை இந்த உலகத்தை விட்டு விரைவில் எடுத்துவிடுவேன். இந்த ஆண்டில் நீ மரிப்பாய். ஏனென்றால் நீ ஜனங்களை கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படிக் கற்பித்தாய்.’”
17அனனியா அதே ஆண்டில் ஏழாவது மாதத்தில் மரித்தான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 28: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்