எரேமியா 23:23-32

எரேமியா 23:23-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“நான் அருகில் இருக்கும் இறைவன் மட்டுமோ? தூரத்தில் நடப்பதை அறியாத இறைவனோ?” என யெகோவா சொல்கிறார். “நான் காணாதபடிக்கு யாராவது தன்னை மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள முடியுமா?” என்று யெகோவா அறிவிக்கிறார். “வானத்தையும், பூமியையும் நிரப்புகிறவர் நான் அல்லவோ?” என யெகோவா அறிவிக்கிறார். “இறைவாக்கு உரைப்போர் என் பெயரில் பொய்களை இறைவாக்காகச் சொல்கிறதை நான் கேட்டிருக்கிறேன். அவர்கள், ‘நான் கனவு கண்டேன்! நான் கனவு கண்டேன்!’ என்கிறார்கள். இவ்வாறு தங்கள் வஞ்சனையான எண்ணங்களை, இறைவாக்காகக் கூறும் இந்தப் பொய் இறைவாக்கினரின் இருதயங்களில் இது எவ்வளவு காலத்திற்குத் தொடரும்? என் மக்களின் தந்தையர் பாகால் வழிபாட்டினால் என் பெயரை மறந்தார்கள். அதுபோல, இவர்களும் தாங்கள் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளும் தங்கள் கனவுகள், என் மக்களை என் பெயரை மறக்கும்படி செய்யும் என எண்ணுகிறார்கள். கனவையுடைய இறைவாக்கினன் தன் கனவைச் சொல்லட்டும். ஆனால் என்னுடைய வார்த்தையை உடையவனோ அதை உண்மையாக கூறட்டும். தானியத்துடன் வைக்கோலுக்கு என்ன வேலை?” என்று யெகோவா அறிவிக்கிறார். “என்னுடைய வார்த்தை நெருப்பைப் போன்றது அல்லவா? கற்பாறையை துண்டுகளாய் நொறுக்கும் சம்மட்டியைப் போன்றதல்லவா?” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஆகையால்” யெகோவா அறிவிக்கிறதாவது: “ஒருவரிடமிருந்து இன்னொருவர் வார்த்தைகளை எடுத்து, இது யெகோவாவிடமிருந்து வந்தது என்று சொல்லுகிற இறைவாக்கினருக்கு நான் விரோதமாய் இருக்கிறேன். ஆம்” யெகோவா அறிவிக்கிறதாவது: “தங்கள் நாக்குகளை அசைத்து, ‘யெகோவா சொல்கிறார்’ என்று சொல்கிற இறைவாக்கு உரைப்போரையும் நான் எதிர்க்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார். பொய்யான கனவுகளை இறைவாக்காக கூறுபவருக்கு நான் விரோதமாக இருக்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “துணிகரமான பொய்களைக் கூறி என் மக்களை தவறாய் வழிநடத்துகிறார்கள்; நானோ அவர்களை அனுப்பவுமில்லை; அவர்களை நியமிக்கவுமில்லை. அவர்களால் இந்த மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.

எரேமியா 23:23-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார். யாராவது தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள முடியுமோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார். சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் பெயரைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன். எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள். என் மக்களின் முற்பிதாக்கள் பாகாலுக்காக என் பெயரை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினால் என் பெயரை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள். சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று யெகோவா சொல்லுகிறார். என் வார்த்தை நெருப்பைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று யெகோவா சொல்லுகிறார். ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார். இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை சொன்னார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார். இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் மக்களைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த மக்களுக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 23:23-32 பரிசுத்த பைபிள் (TAERV)

“நான் தேவன்! நான் எப்பொழுதும் அருகில் இருக்கிறேன்!” இந்த வார்த்தை கர்த்தரிடத்திலிருந்து வருகிறது. “நான் தூரத்தில் இல்லை. சில மறைவிடங்களில் ஒருவன் என்னிடமிருந்து ஒளிய முயலலாம். ஆனால், அவனைப் பார்ப்பது எனக்கு எளிதாகும். ஏனென்றால், நான் பரலோகம் பூமி என்று எல்லா இடங்களிலும் இருக்கிறேன்!” கர்த்தர் இவற்றைச் சொன்னார். “என் நாமத்தில் பொய்யைப் பிரசங்கம் செய்யும் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். அவர்கள், ‘எனக்கு ஒரு கனவு வந்தது. எனக்கு ஒரு கனவு வந்தது’ என்றார்கள். அவர்கள் இவற்றைச் சொல்வதை நான் கேட்டேன். இது இன்னும் எவ்வளவு காலம் செல்லும்? அத்தீர்க்கதரிசிகள் பொய்களை நினைக்கின்றனர். பிறகு அப்பொய்களை ஜனங்களுக்குப் போதிக்கிறார்கள். இத்தீர்க்கதரிசிகள் ஜனங்கள் என் நாமத்தை மறக்கச் செய்ய முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொய்யான கனவுகளை அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லி இதனைச் செய்கிறார்கள். அவர்களது முற்பிதாக்கள் என்னை மறந்தது போலவே, எனது ஜனங்கள் என்னை மறக்கும்படி அவர்கள் செய்ய முயல்கிறார்கள். அவர்களின் முற்பிதாக்கள் என்னை மறந்துவிட்டு பொய்யான பாகால் தெய்வத்தை தொழுதனர். வைக்கோல் கோதுமையைப்போன்று ஆகாது. இது போலவே, அத்தீரிக்கதரிசிகளின் கனவுகள் எல்லாம் என்னிடமிருந்து வரும் செய்திகள் ஆகாது. ஒருவன் தனது கனவுகளைப்பற்றிச் சொல்ல விரும்பினால், அவன் சொல்லட்டும். ஆனால், எனது நற்செய்தியை கேட்கட்டும். நற்செய்தியைக் கேட்கிற மனிதன் எனது செய்தியை உண்மையுடன் கூறட்டும்.” “எனது செய்தி அக்கினியைப் போன்றது இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. இது பாறையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது.” “எனவே நான் கள்ளதீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. “இத்தீர்க்கதரிசிகள் ஒருவரிடமிருந்து ஒருவர் என் வார்த்தைகளைத் திருடுகிறார்கள். நான் பொய்யான தீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் தம் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அச்செய்தியை என்னிடமிருந்து வருவதாக நடிக்கின்றனர். பொய்க் கனவுகளைப் பரப்பும் பொய்த் தீர்க்கதரிகளுக்கு நான் எதிரானாவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் எனது ஜனங்களைப் பொய்யாலும், பொய் போதனைகளாலும் தவறாக வழிகாட்டுகின்றனர். ஜனங்களுக்குப் போதிக்க நான் இத்தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை. எனக்காக எதையும் செய்யும்படி நான் அவர்களுக்குக் கட்டளை இடவில்லை. யூதாவின் ஜனங்களுக்கு அவர்களால் உதவி செய்யவே முடியாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

எரேமியா 23:23-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன். எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள். என் ஜனத்தின் பிதாக்கள் பாகாலினிமித்தம் என் நாமத்தை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினாலே என் நாமத்தை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள். சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார். என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என்வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்