எரேமியா 23:23-32

எரேமியா 23:23-32 TCV

“நான் அருகில் இருக்கும் இறைவன் மட்டுமோ? தூரத்தில் நடப்பதை அறியாத இறைவனோ?” என யெகோவா சொல்கிறார். “நான் காணாதபடிக்கு யாராவது தன்னை மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள முடியுமா?” என்று யெகோவா அறிவிக்கிறார். “வானத்தையும், பூமியையும் நிரப்புகிறவர் நான் அல்லவோ?” என யெகோவா அறிவிக்கிறார். “இறைவாக்கு உரைப்போர் என் பெயரில் பொய்களை இறைவாக்காகச் சொல்கிறதை நான் கேட்டிருக்கிறேன். அவர்கள், ‘நான் கனவு கண்டேன்! நான் கனவு கண்டேன்!’ என்கிறார்கள். இவ்வாறு தங்கள் வஞ்சனையான எண்ணங்களை, இறைவாக்காகக் கூறும் இந்தப் பொய் இறைவாக்கினரின் இருதயங்களில் இது எவ்வளவு காலத்திற்குத் தொடரும்? என் மக்களின் தந்தையர் பாகால் வழிபாட்டினால் என் பெயரை மறந்தார்கள். அதுபோல, இவர்களும் தாங்கள் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளும் தங்கள் கனவுகள், என் மக்களை என் பெயரை மறக்கும்படி செய்யும் என எண்ணுகிறார்கள். கனவையுடைய இறைவாக்கினன் தன் கனவைச் சொல்லட்டும். ஆனால் என்னுடைய வார்த்தையை உடையவனோ அதை உண்மையாக கூறட்டும். தானியத்துடன் வைக்கோலுக்கு என்ன வேலை?” என்று யெகோவா அறிவிக்கிறார். “என்னுடைய வார்த்தை நெருப்பைப் போன்றது அல்லவா? கற்பாறையை துண்டுகளாய் நொறுக்கும் சம்மட்டியைப் போன்றதல்லவா?” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஆகையால்” யெகோவா அறிவிக்கிறதாவது: “ஒருவரிடமிருந்து இன்னொருவர் வார்த்தைகளை எடுத்து, இது யெகோவாவிடமிருந்து வந்தது என்று சொல்லுகிற இறைவாக்கினருக்கு நான் விரோதமாய் இருக்கிறேன். ஆம்” யெகோவா அறிவிக்கிறதாவது: “தங்கள் நாக்குகளை அசைத்து, ‘யெகோவா சொல்கிறார்’ என்று சொல்கிற இறைவாக்கு உரைப்போரையும் நான் எதிர்க்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார். பொய்யான கனவுகளை இறைவாக்காக கூறுபவருக்கு நான் விரோதமாக இருக்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “துணிகரமான பொய்களைக் கூறி என் மக்களை தவறாய் வழிநடத்துகிறார்கள்; நானோ அவர்களை அனுப்பவுமில்லை; அவர்களை நியமிக்கவுமில்லை. அவர்களால் இந்த மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்