எரேமியா 15:15-21

எரேமியா 15:15-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே! நீர் என்னை அறிந்திருக்கிறீர். என்னை நினைவுகூர்ந்து என்னை ஆதரியும். என்னைத் துன்பப்படுத்தியவர்களை பழிவாங்கும். நீர் நீடிய பொறுமையுடையவர். நீர் என்னை எடுத்துப்போடாதேயும். உமக்காக நான் எவ்வளவு நிந்தையைச் சகித்தேன் என்பதையும் நினைத்துப் பாரும். உமது வார்த்தைகள் எனக்கு வந்தபோது, நான் அவைகளை உட்கொண்டேன். சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே! உமது பெயரை நான் தரித்திருக்கிறபடியால், அவ்வார்த்தைகள் என் சந்தோஷமும், என் இருதயத்தின் களிப்புமாயிருந்தன. நான் ஒருபோதும் பரியாசக்காரருடைய கூட்டத்தில் சேர்ந்து மகிழ்ந்ததில்லை. உமது கரம் என்மேல் இருந்தபடியால், நான் தனிமையாய் இருந்தேன். நீர் என்னை கோபத்தினால் நிரப்பினீர். ஏன் என்னுடைய வேதனை முடிவடையாமல் இருக்கிறது. ஏன் எனது காயம் கடுமையாயும், ஆறாமலும் இருக்கிறது? நீர் எனக்கு ஒரு ஏமாற்றும் நீரோடையைப் போலவும், ஊற்றெடுக்காத ஓடையைப் போலவும் இருப்பீரோ? என்றேன். அதற்கு யெகோவா: “நீ மனந்திரும்பினால், நீ எனக்குப் பணிசெய்யும்படி நான் உன்னை முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவருவேன். நீ பயனற்ற வார்த்தைகளை விட்டு, பயனுள்ள வார்த்தைகளைப் பேசுவாயானால், மீண்டும் என்னுடைய பேச்சாளனாய் இருப்பாய், இந்த மக்கள் உன் பக்கமாகத் திரும்பட்டும்; ஆனால் நீயோ அவர்கள் பக்கமாய்த் திரும்பாதே. நான் உன்னை இந்த மக்களுக்கு ஒரு மதில் ஆக்குவேன்; அரண்செய்யப்பட்ட ஒரு வெண்கல மதிலாக்குவேன். அவர்கள் உனக்கெதிராகப் போரிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நான் உன்னைத் தப்புவித்து காப்பாற்றும்படி, நான் உன்னுடனே இருக்கிறேன்,” என்று யெகோவா அறிவிக்கிறார். “கொடியவர்களின் கையிலிருந்து உன்னைப் பாதுகாத்து, கொடூரமானவர்களின் பிடியிலிருந்து உன்னை மீட்டெடுப்பேன்.”

எரேமியா 15:15-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு எனக்காக நீதியைச் செய்யும்; உம்முடைய நீடிய பொறுமையினால் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய காரணமாக நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும். உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பெயர் எனக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை; உமது கைகளுக்காக தனித்து உட்கார்ந்தேன்; சோர்வினால் என்னை நிரப்பினீர். என் வியாதி நீண்டகாலமாகவும், என் காயம் ஆறாத பெரிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற தண்ணீரைப்போலவும் இருப்பீரோ? இதினால் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்ப ஒழுங்குபடுத்துவேன்; என் முகத்திற்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ பயனற்றதிலிருந்து விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று யெகோவா சொல்லுகிறார். உன்னை இந்த மக்களுக்கு முன்பாக பாதுகாப்பான வெண்கல மதிலாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாகப் போர்செய்வார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னைப் பாதுகாப்பதற்காகவும், உன்னைக் காப்பாற்றுவதற்காகவும், நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். நான் உன்னைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றி, உன்னைப் பலவான்களின் கைக்கு விலக்கி விடுவிப்பேன் என்கிறார்.

எரேமியா 15:15-21 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே! நீர் என்னை அறிவீர். என்னை நினைவில் வைத்துள்ளீர். என்னை கவனித்துக்கொள்வீர். ஜனங்கள் என்னைப் புண்படுத்துகிறார்கள். அந்த ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும். நீர் ஜனங்களோடு பொறுமையாக இருக்கிறீர். நீர் அவர்களுடன் பொறுமையாக இருப்பதால் என்னை அழித்து விடாதேயும். என்னை நினைத்துப் பாரும். கர்த்தாவே நான் உமக்காக அடைந்த வலியை எண்ணிப் பாரும். உமது செய்தி எனக்கு வந்தது. நான் உமது வார்த்தைகளை உண்டேன். உமது செய்தி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிற்று. நான் உமது நாமத்தால் அழைக்கப்படுவதில் மகிழ்ந்தேன். உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர். நான் சிரிப்பும் வேடிக்கையும் செய்கிற கூட்டத்தில் ஒருபோதும் இருந்ததில்லை. உமது நோக்கம் என்மேல் இருப்பதால் நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன். என்னைச் சுற்றிலும் தீமை நடக்கும்போது, நீர் என்னைக் கோபத்தால் நிரப்பினீர். நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்? என்று எனக்குப் புரியவில்லை. எனது காயங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை? அல்லது குணப்படுத்த முடியவில்லை? என்பது எனக்குப் புரியவில்லை. கர்த்தாவே! நீர் மாறியிருக்கிறீர் என நினைக்கிறேன். நீர், ஊற்று வறண்டு போனதுபோல இருக்கிறீர். நீர், ஊற்று ஒன்று நின்றுவிட்டது போல இருக்கிறீர். பிறகு, கர்த்தர், “எரேமியா, நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால், பிறகு நான் உன்னைத் தண்டிக்கமாட்டேன். நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால், நீ எனக்கு சேவை செய்யலாம். நீ பயனற்ற வார்த்தைகளைப் பேசாமல், முக்கியமானவற்றைப்பற்றி பேசினால் பின் நீ எனக்காகப் பேசமுடியும். யூதாவின் ஜனங்கள் மாறி உன்னிடம் திரும்பி வருவார்கள். ஆனால் நீ மாறி அவர்களைப்போல் இருக்க வேண்டாம். நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்வேன். அந்த ஜனங்கள் உன்னை பலமுடையவர்களாக, வெண்கலத்தாலான சுவரைப்போன்று எண்ணுவார்கள். யூதாவின் ஜனங்கள் உனக்கு எதிராகப் போரிடுவார்கள். ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள். ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன். நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் உன்னை அத்தீய ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவேன். அந்த ஜனங்கள் உன்னை பயப்படுத்துவார்கள். ஆனால் நான் உன்னை அவர்களிடமிருந்து காப்பேன்.”

எரேமியா 15:15-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடிய பொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய நிமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும். உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது. நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர். என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ? இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார். உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.