நியாயாதிபதிகள் 6:25-32

நியாயாதிபதிகள் 6:25-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு, இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்கதகனமாகப் பலியிடக்கடவாய் என்றார். அப்பொழுது கிதியோன், தன் வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான். அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு; ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள். அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள். யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன்; அது தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம், அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான். தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது.

நியாயாதிபதிகள் 6:25-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதே இரவில் யெகோவா அவனிடம், “உன் தகப்பனின் மந்தையிலிருந்து, ஏழு வயது நிரம்பிய இரண்டாம் காளையைப் பிடித்து எடு. உன் தகப்பன் கட்டிய பாகால் பலிபீடத்தை இடித்து, உடைத்து அதன் அருகேயுள்ள மரத்தினாலான அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டிப்போடு. அதன்பின் இந்த மேட்டின் உச்சியிலே உன் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகுந்தவிதமான ஒரு பலிபீடத்தைக் கட்டு. அதிலே அந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தை வெட்டிய மரத்துண்டுகளை அடுக்கி, அந்த கொழுத்த இரண்டாவது காளையைத் தகன காணிக்கையாக யெகோவாவுக்கு செலுத்து” என்றார். எனவே கிதியோன் தனது பணியாட்களில் பத்துப்பேரை அழைத்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான். ஆனால் கிதியோன் தனது குடும்பத்தவர்களுக்கும், பட்டணத்திலுள்ள மனிதருக்கும் பயந்ததினால் அதை பகலில் செய்யாமல் இரவிலே செய்தான். அதிகாலையில் பட்டணத்து மக்கள் எழுந்தபோது, அங்குள்ள பாகாலின் பலிபீடம் இடிக்கப்பட்டிருப்பதையும், அதற்கு அருகேயுள்ள மரத்தாலான அசேரா தெய்வத்தின் கம்பம் வெட்டப்பட்டிருப்பதையும் கண்டார்கள். அதோடு அங்கே புதிதாகக் கட்டிய பலிபீடத்தின்மேல் ஒரு கொளுத்த காளை பலியிடப்பட்டிருப்பதையும் கண்டார்கள். அப்பொழுது ஒருவரையொருவர், “யார் இதைச் செய்தார்கள்?” என்று கேட்டனர். பின்பு அவர்கள் மிகக் கவனமாக விசாரித்தபோது, “யோவாசின் மகன் கிதியோனே இதைச் செய்தான்” என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. உடனே பட்டணத்து மக்கள் யோவாசிடம் வந்து, “உன் மகன் எங்கள் பாகாலின் பலிபீடத்தை உடைத்து, அதன் அருகிலிருந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டியிருக்கிறான். ஆகையால் அவன் சாகவேண்டும். எனவே அவனை வெளியே கொண்டுவா” என வற்புறுத்திக் கேட்டார்கள். ஆனால் யோவாஸ் தன்னைச் சுற்றிலும் எதிர்த்து நின்ற கூட்டத்தைப் பார்த்து, “நீங்கள் பாகாலுக்காக பரிந்து பேசப்போகிறீர்களோ? அல்லது நீங்கள் பாகாலைக் காப்பாற்றப் போகிறீர்களோ? பாகாலுக்காகச் சண்டையிடுபவன் காலையிலேயே கொல்லப்படவேண்டும். பாகால் உண்மையான தெய்வமானால் தனது பலிபீடத்தை உடைக்கும்போதே தன்னைப் பாதுகாத்திருக்கலாமே?” என்று சொன்னான். அந்த நாளில் அவர்கள் கிதியோனை, “யெருபாகால்” என அழைத்தார்கள். பாகால் பலிபீடத்தை கிதியோன் உடைத்ததால், “பாகாலே அவனுடன் வாதாடட்டும்” என்று சொல்லி இப்படிப் பெயரிட்டார்கள்.

நியாயாதிபதிகள் 6:25-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்று இரவிலே யெகோவா அவனை நோக்கி: நீ உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழுவயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகிலுள்ள தோப்பை வெட்டிப்போட்டு. இந்தக் கற்பாறையின் உச்சியிலே சரியான ஒரு இடத்தில் உன் யெகோவாவுடைய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடவேண்டும் என்றார். அப்பொழுது கிதியோன், தன்னுடைய வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன்னுடைய தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனிதர்களுக்கும் பயந்ததினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான். அந்த ஊர் மனிதர்கள் காலையில் எழுந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டும், அதின் அருகிலியிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டு இருக்கிறதையும் அவர்கள் பார்த்து; ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள். அப்பொழுது ஊர்க்காரர்கள் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகே இருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள். யோவாஸ் தன்னை எதிர்த்து நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வாதாடுவீர்கள்? நீங்களா அதைக் காப்பாற்றுவீர்கள்? அதற்காக வாதாடுகிறவர்கள் இன்று காலையிலே சாகட்டும்; அது தேவனானால் தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால், அதுவே தனக்காக வாதாடட்டும் என்றான். தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால் பாகால் அவனோடு வாதாடட்டும் என்று சொல்லி, அந்த நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயர் சூட்டப்பட்டது.

நியாயாதிபதிகள் 6:25-32 பரிசுத்த பைபிள் (TAERV)

அதே இரவில் கர்த்தர் கிதியோனிடம் பேசினார். கர்த்தர், “உன் தந்தைக்குச் செந்தமான ஏழு வயதுள்ள முழுமையாக வளர்ந்த காளையை எடுத்துக்கொள். பாகால் என்னும் பொய்த் தெய்வங்களுக்கென்று உன் தந்தை அமைத்த பலிபீடம் ஒன்று உள்ளது. பலிபீடத்தினருகே ஒரு மரத்தூணும் இருக்கிறது. அசேரா என்னும் பொய்த் தேவதையை மகிமைப் படுத்துவதற்காக அத்தூண் அமைக்கப்பட்டது. காளையால் பாகாலின் பலிபீடத்தை வீழ்த்தி, அசேராவின் கோவில் தூணை முறித்துவிடு. அதன் பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தருக்காக முறைப்படி பலிபீடம் கட்டு. மேடான நிலத்தில் அப்பலிபீடத்தைக் கட்டு. பின்பு முழுமையாக வளர்ந்த காளையை அந்தப் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்து. அசேரா தூணின் விறகை உனது பலியை எரிப்பதற்குப் பயன்படுத்து” என்றார். ஆகையால் கிதியோன் தன் வேலையாட்களில் 10 பேரை அழைத்துச்சென்று, தன்னிடம் கர்த்தர் கூறியபடியே செய்தான். அவனது குடும்பத்தாரும் நகர ஜனங்களும் அவன் செய்வதைப் பார்க்கக்கூடும் என்று அவன் பயந்தான். தன்னிடம் கர்த்தர் கூறியபடியே கிதியோன் செய்தான். ஆனால் அதைப் பகலில் செய்யாமல் இரவில் செய்தான். நகர ஜனங்கள் மறுநாள் காலையில் விழித்தபோது, பாகாலின் பலிபீடம் அழிக்கப்பட்டிருப்பதையும், அசேராவின் தூண் முறிக்கப்பட்டிருப்பதையும் பார்த்தனர். முன்னால் பாகாலின் பீடத்தருகே அசேராவின் தூண் இருந்த இடத்தில் கிதியோன் கட்டிய பலிபீடத்தையும், அதில் பலியிடப்பட்டிருந்த காளையையும் அவர்கள் கண்டனர். நகர ஜனங்கள் ஒருவரையொருவர் பார்த்து, “பலிபீடத்தை அழித்தவன் யார்? அசேராவின் தூணை உடைத்தவன் யார்? புதிய பலீபீடத்தில் காளையைப் பலியிட்டவன் யார்?” என்று கேட்டனர். அவர்கள் பல கேள்விகளைக் கேட்டு, அக்காரியங்களைச் செய்தவன் யார் என்பதை அறிய விரும்பினார்கள். ஒருவன் அவர்களுக்கு, “யோவாஸின் குமாரனாகிய கிதியோன் இதனைச் செய்தான்” என்றான். எனவே, நகர ஜனங்கள் யோவாஸிடம் வந்தனர். அவர்கள் யோவாஸிடம், “நீ உனது குமாரனை வெளியே அழைத்து வா. அவன் பாகாலின் பலிபீடத்தைத் தரைமட்ட மாக்கினான். பலிபீடத்தருகிலுள்ள அசேராவின் தூணை உடைத்தான். எனவே உன் குமாரன் மரிக்க வேண்டும்” என்றனர். தன்னைச் சுற்றிலும் கூடியிருந்த ஜனங்களைப் பார்த்து யோவாஸ், “நீங்கள் பாகாலுக்காகப் பரிந்து பேசுகிறீர்களா? பாகாலை மீண்டும் பாதுகாக்கப் போகிறீர்களா? பாகாலைச் சார்ந்திருக்கிறவன் எவனோ, அவன் காலைக்குள் கொல்லப்படக்கடவன். பாகால் உண்மையிலேயே பலமுள்ள தேவனாக இருந்தால் அவனது பலிபீடத்தை ஒருவன் அழிக்கும்போது தன்னை காப்பாற்றிக்கொண்டிருக்கலாமே” என்றான். யோவாஸ், “கிதியோன் பாகாலின் பலிபீடத்தை அழித்திருந்தால், பாகால் அவனோடு வழக்காடட்டும்” என்றான். அந்நாளில் யோவாஸ் கிதியோனுக்கு ஒரு புதிய பெயரிட்டான். அவனை யெருபாகால் என்று அழைத்தான்.