நியாயாதிபதிகள் 6:25-32

நியாயாதிபதிகள் 6:25-32 TCV

அதே இரவில் யெகோவா அவனிடம், “உன் தகப்பனின் மந்தையிலிருந்து, ஏழு வயது நிரம்பிய இரண்டாம் காளையைப் பிடித்து எடு. உன் தகப்பன் கட்டிய பாகால் பலிபீடத்தை இடித்து, உடைத்து அதன் அருகேயுள்ள மரத்தினாலான அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டிப்போடு. அதன்பின் இந்த மேட்டின் உச்சியிலே உன் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகுந்தவிதமான ஒரு பலிபீடத்தைக் கட்டு. அதிலே அந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தை வெட்டிய மரத்துண்டுகளை அடுக்கி, அந்த கொழுத்த இரண்டாவது காளையைத் தகன காணிக்கையாக யெகோவாவுக்கு செலுத்து” என்றார். எனவே கிதியோன் தனது பணியாட்களில் பத்துப்பேரை அழைத்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான். ஆனால் கிதியோன் தனது குடும்பத்தவர்களுக்கும், பட்டணத்திலுள்ள மனிதருக்கும் பயந்ததினால் அதை பகலில் செய்யாமல் இரவிலே செய்தான். அதிகாலையில் பட்டணத்து மக்கள் எழுந்தபோது, அங்குள்ள பாகாலின் பலிபீடம் இடிக்கப்பட்டிருப்பதையும், அதற்கு அருகேயுள்ள மரத்தாலான அசேரா தெய்வத்தின் கம்பம் வெட்டப்பட்டிருப்பதையும் கண்டார்கள். அதோடு அங்கே புதிதாகக் கட்டிய பலிபீடத்தின்மேல் ஒரு கொளுத்த காளை பலியிடப்பட்டிருப்பதையும் கண்டார்கள். அப்பொழுது ஒருவரையொருவர், “யார் இதைச் செய்தார்கள்?” என்று கேட்டனர். பின்பு அவர்கள் மிகக் கவனமாக விசாரித்தபோது, “யோவாசின் மகன் கிதியோனே இதைச் செய்தான்” என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. உடனே பட்டணத்து மக்கள் யோவாசிடம் வந்து, “உன் மகன் எங்கள் பாகாலின் பலிபீடத்தை உடைத்து, அதன் அருகிலிருந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டியிருக்கிறான். ஆகையால் அவன் சாகவேண்டும். எனவே அவனை வெளியே கொண்டுவா” என வற்புறுத்திக் கேட்டார்கள். ஆனால் யோவாஸ் தன்னைச் சுற்றிலும் எதிர்த்து நின்ற கூட்டத்தைப் பார்த்து, “நீங்கள் பாகாலுக்காக பரிந்து பேசப்போகிறீர்களோ? அல்லது நீங்கள் பாகாலைக் காப்பாற்றப் போகிறீர்களோ? பாகாலுக்காகச் சண்டையிடுபவன் காலையிலேயே கொல்லப்படவேண்டும். பாகால் உண்மையான தெய்வமானால் தனது பலிபீடத்தை உடைக்கும்போதே தன்னைப் பாதுகாத்திருக்கலாமே?” என்று சொன்னான். அந்த நாளில் அவர்கள் கிதியோனை, “யெருபாகால்” என அழைத்தார்கள். பாகால் பலிபீடத்தை கிதியோன் உடைத்ததால், “பாகாலே அவனுடன் வாதாடட்டும்” என்று சொல்லி இப்படிப் பெயரிட்டார்கள்.

நியாயாதிபதிகள் 6:25-32 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்