நியாயாதிபதிகள் 5:1-23

நியாயாதிபதிகள் 5:1-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது: கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்திரியுங்கள். ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன். கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது. கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாயும் கரைந்தது. ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள். தெபொராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போயின. நூதன தேவர்களைத் தெரிந்து கொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம்பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ? ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என் இருதயம் நாடுகிறது; கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். வெள்ளைக் கழுதைகளின்மேல் ஏறுகிறவர்களே, நியாயஸ்தலத்தில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பிரஸ்தாபியுங்கள். தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுகவாசல்களிலே போய் இறங்குவார்கள். விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ. மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படி செய்தார்; கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின்மேல் ஆளுகை தந்தார். அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன் ஜனங்களுக்குள்ளே பென்யமீன் மனுஷர் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள். இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடே இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனுஷரும் பள்ளத்தாக்கில் கால்நடையாய் அனுப்பப்பட்டுப்போனார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி. மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டதென்ன? ரூபனின் பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி. கீலேயாத் மனுஷர் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; தாண் மனுஷர் கப்பல்களில் தங்கியிருந்ததென்ன? ஆசேர் மனுஷர் கடற்கரையிலே தங்கி, தங்கள் குடாக்களில் தாபரித்தார்கள். செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள். ராஜாக்கள் வந்து யுத்தம்பண்ணினார்கள்; அப்பொழுது கானானியரின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்பண்ணினார்கள்; அவர்களுக்குத் திரவியக்கொள்ளை கிடைக்கவில்லை. வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம்பண்ணின. கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, அவர்களை அடித்துக்கொண்டு போயிற்று; என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய். அப்பொழுது குதிரைகளின் குளம்புகள், பாய்ச்சலினாலே, பலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின. மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லையே.

நியாயாதிபதிகள் 5:1-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த நாளில் தெபோராளும், அபினோமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்: “யெகோவா இஸ்ரயேலுக்காக நீதியை நிலைநாட்டியதற்காகவும், மக்கள் தங்களை மனமுவர்ந்து ஒப்படைத்ததற்காகவும் யெகோவாவைத் துதியுங்கள்! “அரசர்களே கேளுங்கள்! ஆளுநர்களே செவிகொடுங்கள்! யெகோவாவை பாடுவேன், நான் பாடுவேன். இஸ்ரயேலின், இறைவனாகிய யெகோவாவுக்கு, இசை மீட்டுவேன். “யெகோவாவே! நீர் சேயீரை விட்டு போனபோதும், ஏதோம் நாட்டைவிட்டு அணிவகுத்துச் சென்றபோதும் பூமி அதிர்ந்தது. வானங்கள் பொழிந்தன. மேகங்கள் தண்ணீரை கீழே பொழிந்தன. சீனாயின் யெகோவாவான யெகோவாவுக்குமுன், மலைகளும் அதிர்ந்தன. இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு முன்பாக அவை அதிர்ந்தன. “ஆனாத்தின் மகன் சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும் வீதிகள் கைவிடப்பட்டிருந்தன. பயணிகள் சுற்றுப்பாதையில் சென்றார்கள். இஸ்ரயேலின் கிராம வாழ்க்கை நின்றுபோயிற்று. தெபோராளாகிய நான் இஸ்ரயேலில் தாயாக எழும்பும்வரை அது நின்றுபோயிற்று. எப்போது அவர்கள் புது தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்களோ, அப்போதே யுத்தமும் பட்டண வாசலில் வந்தது. இஸ்ரயேலில் உள்ள நாற்பதாயிரம் பேரிடம் கேடயமோ ஈட்டியோ காணப்படவில்லை. எனது இருதயமோ இஸ்ரயேலின் தலைவர்களோடே இருக்கிறது. மக்களுக்குள்ளே விரும்பிவந்த தொண்டர்களுடனும் இருக்கிறது. யெகோவாவைத் துதியுங்கள்! “வெள்ளைக் கழுதைமேல் சவாரி செய்கிறவர்களே, சேணத்தின் கம்பளத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களே, வீதி வழியாய் நடப்பவர்களே, யோசித்துப் பாருங்கள். தண்ணீர் குடிக்கும் இடங்களில் பாடகரின் குரலையும். அவர்கள் யெகோவாவின் நேர்மையான செயல்களைச் சொல்கிறார்கள். இஸ்ரயேலின் வீரர்களின் நேர்மையான செயல்களைச் சொல்கிறார்கள். “அப்பொழுது யெகோவாவிடம் மக்கள் பட்டண வாசலுக்கு சென்றார்கள். விழித்தெழு, விழித்தெழு தெபோராளே! விழித்தெழுந்து பாட்டுப்பாடு. பாராக்கே எழுந்திரு! அபினோமின் மகனே உன்னை சிறைப்பிடித்தவர்களைச் சிறைபிடி. “தப்பியிருந்த மனிதர் உயர்குடிமக்களிடம் வந்தார்கள். யெகோவாவின் மக்கள் வல்லவர்களுடன் என்னிடம் வந்தார்கள். அமலேக்கியர் வாழும் இடமான எப்பிராயீமிலிருந்து சிலர் வந்தார்கள். பென்யமீனியர் உன்னைப் பின்தொடர்ந்தவர்களுடன் சேர்ந்தார்கள். மாகீரில் இருந்து தலைவர்களும் வந்தார்கள். செபுலோனிலிருந்து அதிகாரிகளும் வந்தார்கள். இசக்காரின் தலைவர்கள் தெபோராளோடு இருந்தார்கள். ஆம்! இசக்கார் கோத்திரத்தார் பாராக்கின் பின்னே பள்ளத்தாக்கில் விரைந்து சென்றார்கள். ரூபனின் பிரிவைச் சார்ந்தவர்கள் தங்கள் இருதயத்தை ஆராய்ந்தார்கள். ஏன் நீ தொழுவங்களுக்குள் இருக்கிறாய்? மந்தைகளைக் கூப்பிடும் சத்தத்தைக் கேட்பதற்காகவா? ரூபனின் பிரிவைச் சார்ந்தவர்கள் தங்கள் இருதயத்தை அதிகமாய் ஆராய்ந்தார்கள். கீலேயாத் யோர்தானின் மறுகரையில் தங்கியிருந்தது. தாண், ஏன் கப்பல்களின் அருகே தயங்கி நின்றான்? ஆசேர் கடற்கரையில் தரித்து, சிறுவளைகுடா பகுதிகளில் தங்கியிருந்தான். செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பொருட்படுத்தவில்லை அப்படியே நப்தலி மனிதரும் வயலின் மேடுகளில் நின்றனர். “அரசர்கள் வந்தார்கள். அவர்கள் சண்டையிட்டார்கள். கானானின் அரசர்கள் மெகிதோவின் தண்ணீர் அருகே தானாக்கில் யுத்தம் செய்தார்கள். ஆனால் அவர்கள் வெள்ளியையோ, கொள்ளையையோ சுமந்து செல்லவில்லை. வானங்களில் இருந்து நட்சத்திரங்கள் சண்டையிட்டன. அவை தங்கள் வழிகளிலிருந்து சிசெராவுக்கு எதிராகச் சண்டையிட்டன. கீசோன் நதி அவர்களை அள்ளிக்கொண்டு போயிற்று. பூர்வகாலத்து கீசோன் நதி, அவர்களை அள்ளிக்கொண்டு போயிற்று. ஆகவே என் ஆத்துமாவே நீ வலிமைபெற்று முன்னேறிப் போ; குதிரைகளின் குளம்புகள் மூழ்கின. அவனுடைய வலிமையான குதிரைகள் பாய்ந்து செல்கின்றன. ‘மேரோசைச் சபியுங்கள், அதன் மக்களைக் கடுமையாகச் சபியுங்கள்’ என்று யெகோவாவின் தூதனானவர் சொல்கிறார். ‘ஏனெனில் அவர்கள் யெகோவாவுக்கு உதவிசெய்ய வரவில்லை; வலியவர்களுக்கு எதிராக யெகோவாவுக்கு உதவிசெய்ய வரவில்லை.’

நியாயாதிபதிகள் 5:1-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த நாட்களிலே தெபொராளும் அபினோகாமின் மகன் பாராக்கும் பாடினது: “யுத்தத்தை இஸ்ரவேலின் அதிபதிகள் நடத்தினதற்காகவும், மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை ஒப்புக்கொடுத்ததற்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள். ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் யெகோவாவைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கீர்த்தனம்செய்வேன். யெகோவாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வரும்போது, பூமி அதிர்ந்தது, வானம் பொழிந்தது, மேகங்களும் தண்ணீராகப் பொழிந்தது. யெகோவாவுக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக சீனாய் மலையும் அதிர்ந்தது. ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள். தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரைக்கும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போனது. புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே 40,000 பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ? மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என்னுடைய இருதயம் நாடுகிறது; யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள். வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பற்றி யோசியுங்கள். தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே யெகோவாவின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையும் அறிவிப்பார்கள்; அதுமுதல் யெகோவாவின் மக்கள் நகரத்தின் வாசல்களில் போய் இறங்குவார்கள். விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ. மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்; யெகோவா எனக்குப் பெலசாலிகளின்மேல் ஆளுகை தந்தார். அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன்னுடைய மக்களுக்குள்ளே பென்யமீன் மனிதர்கள் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள். இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும் பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி. மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன? ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி. கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன? ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி, மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள். செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள். ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது கானானியர்களின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்செய்தார்கள்; அவர்களுக்கு வெள்ளி கொள்ளைப் பொருளாக கிடைக்கவில்லை. வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன. கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே, நீ பெலவான்களை மிதித்தாய். அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே, பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின. மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளை நிச்சயமாகவே சபியுங்கள் என்று யெகோவாவுடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் யெகோவாவோடு துணை நிற்க வரவில்லை; பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் யெகோவாவோடு துணைநிற்க வரவில்லையே.

நியாயாதிபதிகள் 5:1-23 பரிசுத்த பைபிள் (TAERV)

சிசெராவை இஸ்ரவேலர் தோற்கடித்த நாளில், தெபோராளும், அபினோகாமின் குமாரனாகிய பாராக்கும் பாடிய பாடல் இது: “இஸ்ரவேலர் போருக்குத் தயாராயினர். அவர்கள் போருக்குச் செல்ல தாமாகவே முன் வந்தனர்! கர்த்தரை வாழ்த்துங்கள்! “ராஜாக்களே, கேளுங்கள். ஆளுவோரே, கேளுங்கள். நான் பாடுவேன். நான் கர்த்தருக்குப் பாடுவேன். இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பாட்டு இசைப்பேன். “கர்த்தாவே, முன்பு சேயீரிலிருந்து வந்தீர். ஏதோமிலிருந்து அணிவகுத்துச் சென்றீர். நீர் அணிவகுத்துச் சென்றபோது, பூமி அதிர்ந்தது. வானம் பொழிந்தது. மேகம் தண்ணீர் தந்தது. மலைகள் கர்த்தருக்குமுன் நடுங்கின, சீனாய் மலையின், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் முன்னிலையில் நடுங்கின. “ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் காலத்தில் யாகேலின் நாட்களில் பெருஞ்சாலைகள் வெறுமையாய் கிடந்தன. வணிகரும் வழி நடப்போரும் பக்கவழியாய்ச் சென்றார்கள். “அங்கு வீரர்கள் இல்லை. தெபோராள், நீ வரும்வரைக்கும் அங்கு வீரர்கள் இல்லை. இஸ்ரவேலின் தாயாக நீ திகழும்வரைக்கும் இஸ்ரவேலின் வீரர்கள் இருந்ததில்லை. “நகரத்தின் வாசல்களில் போர் புரிவதற்கே தேவன் புது தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேலில் 40,000 வீரர்களில் ஒருவனிடத்திலும் கேடயத்தையோ, ஈட்டியையோ யாரும் காணவில்லை. “இஸ்ரவேலின் படைத்தலைவர்களை என் நெஞ்சம் நினைக்கிறது. அவர்கள் போருக்குத் தாமாகவே முன்வந்தார்கள். கர்த்தரை வாழ்த்துங்கள்! “வெள்ளைக் கழுதைகளின்மேல் சவாரி செய்வோரும், சேண விரிப்பில் அமர்ந்திருப்போரும், பாதை வழியே நடப்போரும் கவனமாய்க் கேளுங்கள்! கால்நடைகள் தண்ணீர் பருகும் இடங்களிலே, கைத்தாளங்களின் இசையைக் கேட்கிறோம். கர்த்தரும், அவரது போர் வீரரும் பெற்ற வெற்றிகளை ஜனங்கள் பாடுகின்றனர். நகரவாசல்களினருகே கர்த்தருடைய ஜனங்கள் போரிட்டனர். அவர்களே வென்றனர்! “எழுக, எழுக, தெபோராளே! எழுக, எழுக, பாடலைப் பாடுக! எழுந்திரு, பாராக்! அபினோகாமின் மகனே, உன் பகைவரை நீ மேற்கொள்! “இப்போதும், மீதியாயிருக்கும் ஜனங்களே, தலைவர்களிடம் செல்லுங்கள். கர்த்தருடைய ஜனங்களே! எனக்காக வீரரோடு செல்லுங்கள்! “எப்பிராயீமின் மனிதர்கள் அமலேக்கின் மலை நாட்டினின்று வந்தனர். பென்யமீனே, அவர்கள் உன்னையும் உன் ஜனங்களையும் பின்தொடர்ந்தனர். மாகீரின் குடும்பத்தில் படைத்தலைவர்கள் இருந்தனர். வெண்கலக் கைத்தடியேந்திய தலைவர்கள் செபுலோன் கோத்திரத்திலிருந்து வந்தனர். இசக்காரின் தலைவர்கள் தெபோராளோடிருந்தனர். இசக்காரின் குடும்பம் பாராக்கிற்கு உண்மையாய் நடந்தது. பள்ளத்தாக்கிற்கு அவர்கள் கால்நடையாய் நடந்தனர். “ரூபனே உனது படைகளின் கூட்டத்தில் துணிவுமிக்க வீரர்கள் பலருண்டு. தொழுவங்களின் சுவரருகே நீ எதற்காக அமர்ந்திருக்கிறாய்? ரூபனின் துணிவான வீரர்கள் போரைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தனர். அவர்கள் வீட்டில் அமர்ந்து மந்தைகளுக்காய் இசைத்த இசையைக் கேட்டுக்கொண்டிருந்தனர். யோர்தான் நதியின் மறுகரையில் கீலேயாத்தின் ஜனங்கள் தம் முகாம்களில் தங்கி இருந்தனர். தாணின் ஜனங்களே, நீங்கள் கப்பல்களில் தங்கியிருந்ததேன்? ஆசேர் குடும்பம் கடற்கரையில் பாதுகாப்பான துறைமுகத்தில் முகாமிட்டு தங்கினர். “ஆனால் செபுலோனின் ஆட்களும், நப்தலியின் ஆட்களும் தம் உயிர்களைப் பணயம் வைத்து மலைகளின் மேல் போரிட்டனர். ராஜாக்கள் போரிட வந்தனர். கானானின் ராஜாக்கள் தானாக் நகரத்தில் மெகிதோவின் கரையில் போரிட்டனர். ஆனால், பொக்கிஷத்தைத் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை! வானிலிருந்து நட்சத்திரங்கள் போரிட்டன. அவைகள் வான வீதியிலிருந்து சிசெராவோடு போர் செய்தன. பழைய நதியாகிய கீசோன், சிசெராவின் ஆட்களை அடித்துச் சென்றது. எனது ஆத்துமாவே, ஆற்றலோடு புறப்படு! குதிரையின் குளம்புகள் பூமியில் மோதின. சிசெராவின் பலமான குதிரைகள் ஓடின, மேலும் ஓடின. “கர்த்தருடைய தூதன், ‘மேரோஸ் நகரை சபியுங்கள். அதன் குடிகளை சபியுங்கள்! கர்த்தருக்கு உதவுவதற்காக அவர்கள் வீரரோடு சேரவில்லை’ என்றான்.