யாக்கோபு 4:1-11
யாக்கோபு 4:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உங்களிடையே சண்டைகளும் வாக்குவாதங்களும் ஏன் உண்டாகின்றன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கிற, உங்கள் ஆசைகளில் இருந்தல்லவா அவை வருகின்றன? நீங்கள் ஏதோ ஒன்றைப் பெற விரும்புகிறீர்கள், ஆனால் அதைப் பெற்றுக்கொள்வதில்லை. நீங்கள் கொலைசெய்தும் பொறாமைகொண்டும் அபகரிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் விரும்புவதை உங்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே வாக்குவாதங்களிலும் சண்டைகளிலும் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் இறைவனிடம் கேட்பதில்லை, அதனாலேயே நீங்கள் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். நீங்கள் கேட்கும்போதும் கூட, அவற்றைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் தவறான நோக்கத்துடனேயே கேட்கிறீர்கள். உங்கள் சொந்த இன்பங்களை நிறைவேற்றவே அவைகளைக் கேட்கிறீர்கள். விபசாரக்காரரே, உலகத்துடன்கொள்ளும் நட்பு இறைவனை பகைப்பது என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? உலகத்துடன் நட்புக்கொள்ள விரும்புகிற யாரும், இறைவனுக்கு பகைவனாகிறான். அல்லது, நம்மில் வாழும்படி இறைவன் நமக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவர், நாம் தமக்குரியவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று வைராக்கிய வாஞ்சையுடையவராய் இருக்கிறார் என்ற வேதவசனம் காரணமில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆனால் இறைவனோ நமக்கு அதிக கிருபையைக் கொடுக்கிறார். அதனால்தான் வேதவசனம்: “பெருமையுள்ளவர்களை இறைவன் எதிர்க்கிறார். ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையைக் கொடுக்கிறார்” என்று சொல்லுகிறது. எனவே இறைவனுக்குக் அடங்கியிருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். இறைவனுக்கு அருகில் வாருங்கள், அவரும் உங்களருகே வருவார். பாவிகளே, உங்கள் கைகளைக் கழுவுங்கள். இருமனம் உள்ளவர்களே, உங்கள் இருதயங்களைச் சுத்திகரித்துக் கொள்ளுங்கள். துக்கப்பட்டு அழுது புலம்புங்கள். உங்கள் நகைப்பு அழுகையாகவும், உங்கள் மகிழ்ச்சியைத் துக்கமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். கர்த்தருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். பிரியமானவர்களே, ஒருவரையொருவர் அவதூறாய் பேசாதிருங்கள். யாராவது தனது சகோதரனுக்கு எதிராகப் பேசினால், அல்லது அவனைக் குற்றவாளியாகத் தீர்த்தால், அவன் இறைவனுடைய சட்டத்திற்கு எதிராய்ப் பேசுகிறவனாகவும், இறைவனுடைய சட்டத்தை குற்றப்படுத்துகிறவனாகவும் இருக்கிறான். நீங்கள் இறைவனுடைய சட்டத்தைக் குற்றப்படுத்துகிறபோது, நீங்கள் அதைக் கைக்கொள்கிறவர்களாய் இல்லாமல், மோசேயின் சட்டத்தை நியாயந்தீர்க்க, அதற்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கிறவர்களாய் இருக்கிறீர்கள்.
யாக்கோபு 4:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உங்களுக்குள்ளே வாக்குவாதங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்களுடைய அவயவங்களிலே போர்செய்கிற ஆசைகளினாலல்லவா? நீங்கள் ஆசைப்பட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாக இருந்தும், அடையக்கூடாமல் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும், யுத்தமும் செய்தும், நீங்கள் விண்ணப்பம்செய்யாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குக் கிடைப்பதில்லை. நீங்கள் விண்ணப்பம்செய்தும், உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டும் என்று தவறான நோக்கத்தோடு விண்ணப்பம்செய்கிறதினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். விபசாரக்காரர்களே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்கவிரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். நம்மில் வாசமாக இருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாகச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள். நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும். கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். சகோதரர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாகப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தினால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாக இல்லாமல், அதற்கு நியாயாதிபதியாக இருப்பாய்.
யாக்கோபு 4:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)
உங்களுக்குள்ளே சண்டைகளும், வாக்குவாதங்களும் எங்கிருந்து வருகின்றன? உங்கள் சரீர உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்ளக் காரணமாக இருக்கிற உங்கள் உள் ஆசைகளில் இருந்து இவை வரவில்லையா? நீங்கள் சிலவற்றை விரும்புகிறீர்கள். ஆனால் அவை கிடைப்பதில்லை. எனவே கொலைக்காரராகவும் பொறாமை உள்ளவர்களாகவும் மாறுகிறீர்கள். அப்படியும் நீங்கள் விரும்புகிறவற்றை அடைய முடியாமல் போகிறது. நீங்கள் அதனால் சண்டையும் சச்சரவும் செய்கிறீர்கள். நீங்கள் தேவனிடம் கேட்டுக்கொள்ளாததால் எதையும் பெறுவதில்லை. மேலும் தவறான நோக்கங்களோடு நீங்கள் கேட்பதால், நீங்கள் கேட்கிறபோது எதையும் பெறுவதில்லை. சொந்த இன்பத்தில் திளைக்கும் வகையில் நீங்கள் கேட்கிறீர்கள். தன் கணவனின் நம்பிக்கைக்கு உரியவளாக இல்லாத ஒரு பெண்ணைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். உலகின் பகுதியாக இருக்க விரும்புதல் என்பது தேவனை வெறுப்பது போல் என்று நீங்கள் அறியமாட்டீர்களா? அல்லது “தேவன் நமக்குள் வசிக்க வைத்த ஆவியானவர் நம்மில் வைராக்கியத்தோடு இருக்கிறார்” என்று வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பதைப் பொருளற்றது என நீங்கள் எண்ணுகிறீர்களா? ஆனால் நம்மீதான அவரது கிருபை மிகவும் உயர்ந்தது. வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பது போல், “பெருமை பாராட்டுபவர்களுக்கு எதிராக தேவன் இருக்கிறார். ஆனால் அவர் பணிவான மக்களுக்குக் கிருபையை வழங்குகிறார்.” எனவே, உங்களையே தேவனிடம் ஒப்படையுங்கள். சாத்தானை எதிர்த்து நில்லுங்கள். அவன் ஓடிவிடுவான். தேவனை நெருங்கி வாருங்கள். தேவன் உங்களிடம் நெருங்கி வருவார். நீங்கள் பாவிகள். எனவே, உங்கள் வாழ்விலிருந்து பாவத்தை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் தேவனையும் உலகத்தையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முயல்கிறீர்கள். உங்கள் சிந்தனைகளைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சோகமாயிருங்கள்; வருத்தமாய் இருங்கள். உங்கள் சிரிப்பை அழுகையாக மாற்றுங்கள். உங்கள் மகிழ்ச்சியை சோகமாக மாற்றுங்கள். தேவனின் முன் பணிவோடு வணங்குங்கள். அவர் உங்களை உயர்த்துவார். சகோதர சகோதரிகளே, தீயகாரியங்களைப் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். கிறிஸ்துவில் உன் சகோதரனை அவமானப்படுத்துவது அல்லது அவனை நியாயம் தீர்ப்பது என்பது அவன் பின்பற்றுகிற சட்டத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். உன் சகோதரனை நியாயம் தீர்த்தால் அவன் பின்பற்றிக்கொண்டிருந்த சட்டத்தையே நியாயம் தீர்க்கிறாய் என்பதே அதன் பொருளாகும்.
யாக்கோபு 4:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களிலே போர்செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள். விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.