யாக் 4:1-11

யாக் 4:1-11 IRVTAM

உங்களுக்குள்ளே வாக்குவாதங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்களுடைய அவயவங்களிலே போர்செய்கிற ஆசைகளினாலல்லவா? நீங்கள் ஆசைப்பட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாக இருந்தும், அடையக்கூடாமல் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும், யுத்தமும் செய்தும், நீங்கள் விண்ணப்பம்செய்யாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குக் கிடைப்பதில்லை. நீங்கள் விண்ணப்பம்செய்தும், உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டும் என்று தவறான நோக்கத்தோடு விண்ணப்பம்செய்கிறதினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். விபசாரக்காரர்களே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்கவிரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். நம்மில் வாசமாக இருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாகச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள். நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும். கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். சகோதரர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாகப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தினால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாக இல்லாமல், அதற்கு நியாயாதிபதியாக இருப்பாய்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்