ஏசாயா 65:16-22

ஏசாயா 65:16-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன் பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோயின. இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன். நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை. அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.

ஏசாயா 65:16-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நாட்டில் ஆசீர்வாதத்தை வேண்டிக்கொள்ளுகிறவன் எவனும், உண்மையின் இறைவனாலேயே ஆசி பெறுவான். பூமியில் ஆணையிடுகிறவனும், உண்மையின் இறைவனைக்கொண்டே ஆணையிடுவான். ஏனெனில் முந்திய தொல்லைகள் மறக்கப்பட்டு, எனது கண்களிலிருந்து அவை மறைக்கப்படும். “இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உண்டாக்குவேன். முந்தியவைகள் நினைக்கப்படுவதுமில்லை, மனதில் தோன்றுவதுமில்லை. நான் உண்டாக்கப்போகிறதில் நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், எருசலேமை அது மகிழ்ச்சிக்குரியதாகவும், அதன் மக்களை சந்தோஷமாகவும் படைப்பேன். நானும் எருசலேமில் மகிழ்ந்து, எனது மக்களில் பெருமகிழ்ச்சியடைவேன்; அங்கு புலம்பலின் குரலும், அழுகையின் சத்தமும் இனி ஒருபோதும் கேட்பதில்லை. “ஒருசில நாட்கள் மட்டும் வாழும் குழந்தையோ, தனக்குரிய காலம்வரை வாழாத முதியவனோ ஒருபோதும் அங்கு இருக்கமாட்டார்கள். நூறு வயதில் இறக்கிறவன் வாலிபன் என்று எண்ணப்படுவான்; பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சபிக்கப்பட்டவன் என்று கருதப்படுவான். அவர்கள் வீடுகள் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள்; அவர்கள் திராட்சைத் தோட்டங்களையும் உண்டாக்கி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள். அவர்கள் கட்டும் வீடுகளில் இனிமேல் வேறெவரும் வாழமாட்டார்கள், அவர்கள் நடுகிறவைகளில் வேறொருவரும் சாப்பிடவுமாட்டார்கள். ஏனெனில் ஒரு மரத்தின் காலத்தைப்போலவே எனது மக்களின் வாழ்நாட்களும் இருக்கும். நான் தெரிந்துகொண்ட மக்களும் தங்கள் கைகளின் பலனில் நெடுநாளாய் மகிழ்ச்சிகொள்வார்கள்.

ஏசாயா 65:16-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே வாக்குக்கொடுக்கிறவன் சத்திய தேவன் பெயரில் வக்குக்கொடுப்பான்; முந்தின துன்பங்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோனது. இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் படைக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் மக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கிறேன். நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் மக்களின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை. அங்கே இனி குறைந்த ஆயுள் உள்ள சிறுவனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் இருக்கமாட்டார்கள்; நூறு வயதுசென்று மரணமடைகிறவனும் வாலிபனென்று கருதப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் பழங்களைச் சாப்பிடுகிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் மரத்தின் நாட்களைப்போல என் மக்களின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நீண்டநாட்கள் அனுபவிப்பார்கள்.

ஏசாயா 65:16-22 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஜனங்கள் இப்போது பூமியிலிருந்து ஆசீர்வாதத்தைக் கேட்கின்றனர். ஆனால் எதிர்காலத்தில், அவர்கள் நம்பிக்கைக்குரிய தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைக் கேட்பார்கள். இப்பொழுது ஜனங்கள் வாக்குறுதிச் செய்யும்போது, பூமியின் வல்லமையை நம்புகின்றனர். ஆனால் எதிர்காலத்தில், அவர்கள் நம்பிக்கைக்குரிய தேவன் மீது நம்பிக்கை வைப்பார்கள். ஏனென்றால் கடந்தகாலத்தில் உள்ள துன்பங்கள் எல்லாம் மறக்கப்படும். என் ஜனங்கள் இந்தத் துன்பங்களையெல்லாம் மீண்டும் நினைக்கவேமாட்டார்கள்.” “நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பேன். ஜனங்கள் கடந்த காலத்தை நினைக்கமாட்டார்கள். அவற்றில் எதையும் அவர்கள் நினைக்கமாட்டார்கள். எனது ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் என்றும் என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். நான் என்ன செய்யப்போகிறேன்? நான் மகிழ்ச்சி நிறைந்த ஒரு எருசலேமை உருவாக்குவேன். அவர்களை மகிழ்ச்சி நிறைந்த ஜனங்கள் ஆக்குவேன். “பிறகு, நான் எருசலேமோடு மகிழ்ச்சியாக இருப்பேன். நான் என் ஜனங்களோடு மகிழ்ச்சியாக இருப்பேன். அந்த நகரத்தில் மீண்டும் அழுகையும் துக்கமும் இராது. இனி ஒருபோதும் ஒரு குழந்தை பிறந்தவுடன் மரிக்காது. இனி நகரத்தில் எவரும் குறுகிய வாழ்வுடன் மரிக்கமாட்டார்கள். ஒவ்வொரு குழந்தையும் நீண்ட காலம் வாழும். ஒவ்வொரு வயோதிகனும் நீண்ட காலம் வாழ்வான். 100 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவன் இளைஞன் என்று அழைக்கப்படுவான். பாவம் செய்தவன் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்வு முழுவதும் துன்பத்தை அடைவான். “அந்த நகரத்தில், ஒருவன் வீடுகட்டினால் அவன் அங்கே வாழ்வான். ஒருவன் திராட்சைத் தோட்டத்தை வைத்தால், அவன் அந்தத் தோட்டத்திலிருந்து திராட்சைகளை உண்பான். மீண்டும் ஒருவன் வீடுகட்ட இன்னொருவன் அதில் குடியேறமாட்டான். மீண்டும் ஒருவன் திராட்சைத் தோட்டத்தை அமைக்க இன்னொருவன் பழம் உண்ணமாட்டான். எனது ஜனங்கள் மரங்கள் வாழும்மட்டும் வாழ்வார்கள். நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தாங்கள் செய்தவற்றை அனுபவித்து மகிழ்வார்கள்.